September 27, 2021

இந்தியாவில் குழந்தை திருமணம் பாதியாக குறைஞ்சிடுச்சு! – யுனிசெப் தகவல்

உலகளவில் நடைபெறும் குழந்தை திருமணங்களில் 33 சதவீத பெண் குழந்தை திருமணங்கள் இந்தியாவில் நடைபெறுகிறது என்ற அதிர்ச்சியான தகவலை கடந்தாண்டு ஜூலை மாதம் ‘ஆக்‌ஷன் எய்ட் இந்தியா’ என்ற அரசு சாரா அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் வெளியாகியுள்ளது. அந்த ‘ஆக்‌ஷன் எய்ட் இந்தியா’ அமைப்பு “இந்தியாவில் குழந்தை திருமணங்களை ஒழித்தல்: முன்னேற்றம் மற்றும் வாய்ப்புகள்” எனும் தலைப்பில் மேற்கொண்ட ஆய்வறிக்கையை நடிகையும் சமூக ஆர்வலருமான ஷபனா ஆஸ்மி வெளியிட்டார். அதில், இந்தியாவில் குழந்தை திருமணங்கள் இன்றளவும் தடுக்க முடியாத வகையில், அதிகளவில் நடைபெற்றுக் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டும் வகையில் பல தகவல்கள் இடம்பெற்றிருந்த நிலையில் தற்போது இந்தியாவில் குழந்தை திருமணம் பாதியாக குறைந்துள்ளது என குழந்தைகள் நல சர்வதேச அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பதினெட்டு வயதுக்குள்ளாகவே குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் வழக்கம் பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. உலகில் நடக்கும் குழந்தை திருமணங்களில் 47 சதவீதம் இந்தியாவில் நடக்கிறது.
பெண்களுக்கு கல்வி மற்றும் குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதன் மூலம் குழந்தை திருமணங்களை தடுக்கலாம். இது குறித்து குழந்தைகள் நல சர்வதேச அமைப்பும், அரசாங்கமும், பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இது குறித்து யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் 10 ஆண்டுக்கு முன்பு குழந்தை திருமணம் 47 சதவீதமாக இருந்தது. தற்பொழுது இது 27 சதவீதமாக குறைந்துள்ளது. குழந்தை திருமணத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும். 2030ஆம் ஆண்டிற்குள் குழந்தை திருமணத்தை முழுவதுமாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என யுனிசெப் தெரிவித்துள்ளது.

தெற்காசியாவில் குழந்தை திருமணங்கள் 50 சதவீதம் வரை தடுக்கப்பட்டுள்ளன என்றும் இதில் இந்தியா முதல் இடத்தில் இருப்பதாக யுனிசெப் கூறியுள்ளது. ஒரு பெண் குழந்தை பதினெட்டு வயதுக்குள் திருமணத்திற்கு தள்ளப்பட்டால் அவர் வாழ்நாள் முழுவதும் பல பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். பொருளாதார விதத்திலும் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள் என யுனிசெப்பின் முதன்மை பாலினம் ஆலோசகர் அஞ்சு மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.