February 7, 2023

உதயநிதி பொறுப்பேற்கப் போகும் அண்ணா பல்கலை கழக வரலாறு!

ந்திய அளவிலான டாப் யூனிவர்சிட்டிகளில் டாப் லிஸ்டில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று இன்று முடிந்தது. பேரவையில் பல்வேறு துறைகள் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம், விதி 110ன் கீழ் முதல்வரின் அறிவிப்புகள், மசோதாக்கள் நிறைவேற்றம் ஆகியவை நடைபெற்றன. இந்நிலையில், திமுக இளைஞரணிச் செயலாளரும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் இன்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார்.

அலுவல் சாரா உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின், மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 1978ஆம் ஆண்டில், சென்னையில் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகம், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர்கல்வி பட்டப்படிப்புகள் வழங்குவதுடன் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொள்கிறது.

200 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்புடைய இப்பகுதிக்குள் அடியெடுத்து வைத்த சில நிமிடங்களில் பசுமை செறிந்த அடர்ந்த காட்டுக்குள் நடக்கும் உணர்வு ஏற்படுகிறது. வகுப்பறை வளாகங்களும் நிர்வாகக் கட்டிடங்களும் ஆய்வகங்களும் மரங்களிடையே ஒளிந்திருக்கின்றன. இந்த மெஹா கிண்டி பொறியியல் கல்லூரியின் வரலாற்றை கொஞ்சம் தெரிந்துகொள்வோமா?:

“இந்திய மாணவர்களுக்காகக் கிழக்கிந்திய கம்பெனியால் 1794-ம் ஆண்டு மே 17-ம் தேதி அன்றைய மதராஸின் புனித ஜார்ஜ் கோட்டையில் சி.இ.ஜி. நிறுவப்பட்டது. இந்தியாவில் தாங்கள் கைப்பற்றிய நிலப்பரப்பை அளவிட ஆங்கிலேயர்களை நியமிப்பதைக் காட்டிலும் உள்ளூர் மக்களுக்குப் பயிற்சி அளிப்பது சுலபமானது, சிக்கனமானது என்று கருதி இந்தக் கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது. தொழிற்புரட்சிக் காலத்தில் அணை கட்டுவது, குளம் வெட்டுவது, பாலங்கள், கட்டிடங்கள் கட்டுமானப் பணிகளில் பிரிட்டிஷ் அரசாங்கம் இறங்கியபோது சிவில், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் கல்வியைக் கற்றுக்கொடுக்கும் பள்ளியாக இது மாற்றப்பட்டது.

1859-ல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் சி.இ.ஜி.கொண்டுவரப்பட்டது. 1861-ல் பொறியியல் கல்லூரியாக ஆனது. புனித ஜார்ஜ் கோட்டையில் திறக்கப்பட்ட பள்ளி சேப்பாக்கம் உள்ளிட்ட வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு, 1920-ல் தற்போதைய வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டது. 1930-களில் மின்சாரத் துறை உலக அளவில் முக்கியத்துவம் பெறத் தொடங்கியதும் முழு நேரப் பொறியியல் கல்லூரியாக மாற்றப்பட்டது. பிற்காலத்தில் 1978-ல்தான் பேரறிஞர் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (PAUT) நிறுவப்பட்டது. இதுவே பின்னாளில் அண்ணா பல்கலைக்கழகமாக மாறியது. இதன் கட்டுப்பாட்டில் சி.இ.ஜி. உட்பட மற்ற பொறியியல் கல்லூரிகளும் கொண்டுவரப்பட்டன.

இவை எல்லாவற்றையும் மிஞ்சும் சுவாரசியமான தகவல்களும் இந்த வளாகத்தைச் சுற்றி உண்டு. இரண்டாம் உலகப் போரின்போது, போர் விமானங்களையும் பீரங்கிகளையும் சி.இ.ஜி.யில் படித்துக்கொண்டிருந்த மாணவர்கள் கல்லூரி வளாகத்திலேயே தயாரித்து ராணுவத்துக்கு வழங்கியுள்ளனர். 1942, 1943 ஆண்டுகளில் பொறியியல் பட்டப் படிப்பை மேற்கொண்ட மாணவர்களுக்கு செமஸ்டர் விடுமுறை அளிக்கப்படவில்லை. இரண்டு ஆண்டுகளில் அத்தனை பாடங்களும் நடத்தப்பட்டுப் பட்டமும் வழங்கப்பட்டது. போர் மூளும் நேரத்தில் மாணவர்களைப் பாதுகாக்கக் கல்லூரி வளாகத்திலேயே பதுங்கு குழிகள் வெட்டப்பட்டன. அன்று வெட்டப்பட்ட அந்தப் பதுங்கு குழிகள்தாம் இன்றைய சி.இ.ஜி. மாணவர்களின் நீச்சல்குளம்.

வெறும் 8 மாணவர்களோடு ஆரம்பிக்கப்பட்ட கிண்டி பொறியியல் கல்லூரி இன்று அண்ணா பல்கலைக்கழகத்தின் முக்கிய அங்கமாக உள்ளது. ஆண்டுதோறும் 3,000-த்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு இளநிலைப் பொறியியல் கல்வியை அளித்துவருகிறது. இதுவரை கிட்டத்தட்ட 13 ஆயிரம் மாணவர்கள் பி.எச்டி., எம்.எஸ்., எம்.டெக். உள்ளிட்ட ஆய்வு படிப்புகளைப் படித்திருக்கிறார்கள். பொறியியல் படிப்பைக் கனவாகக் கொண்ட அனேகத் தமிழக மாணவர்களின் மனம் உச்சரிக்கும் சொல், அண்ணா பல்கலைக்கழகமாக இருக்க முக்கியக் காரணம் அதன் வேராகத் திகழும் கிண்டி பொறியியல் கல்லூரியே.இப்பேர்பட்ட அண்ணா பல்கலைக்கழகத்தில்தான் ஆட்சி மன்ற குழுவில் அலுவல் சாரா உறுப்பினராக 3 ஆண்டுகளுக்கு உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

நிலவளம் ரெங்கராஜன்