January 30, 2023

மஹாராஷ்டிரா : தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வரானார் :அதிர்ச்சியான கட்சிகள் சுப்ரீம் கோர்ட் போக முடிவு!

கடந்த சில நாட்களாக முடங்கிப் பொய் இருந்த மகராஷ்டிரா அரசில் திடீர் திருப்பமாக பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக பதவியேற்றார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மருமகன் அஜித் பவார் துணை முதலமைச்சராக பதவியேற்றார். இத்தனைக்கும் இன்றைய காலை நாளிதழ் செய்திகளில் சிவசேனை ஆட்சி என்று செய்தி வந்த நிலையில் காலை தொலைக்காட்சி செய்திகளில் பாஜக ஆட்சி மலர்ந்தது என்று பிளாஷ் செய்தி வெளியானது பல தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திடீர் அரசியல் மாற்றம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டை நாட சிவசேனா தேசியவாத காங்,  & காங்., கட்சிகள் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மகாராஷ்டிர சட்டபேரவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜகவும், சிவசேனாவும், தனிப்பெரும்பான்மைக்கு கூடுதலான இடங்களில் வென்றன. ஆனால், முதலமைச்சர் பதவியில் சிவசேனா பங்கு கேட்டதால் கூட்டணி முறிந்தது. தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில் யாரும் ஆட்சியமைக்க வராததால் ஆளுநரின் பரிந்துரையின் பேரில் அங்கு குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இதையடுத்து, ஆட்சியமைப்பதற்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரசின் உதவியை சிவசேனா நாடியது. இதுதொடர்பாக பல கட்ட பேச்சு வார்த்தைகளும் நடைபெற்று வந்தன. முடிவில், மகாராஷ்டிரத்தில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைவது உறுதியானது. நேற்று இரவு மும்பை ஓர்லி பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் 3 கட்சிகளின் முக்கியத் தலைவர்களும் பங்கேற்றனர்.

கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சரத்பவார், மகாராஷ்டிராவில் புதிதாக அமையும் அரசுக்கு உத்தவ் தாக்கரே தலைமையேற்பார் எனக் கூறினார்.

மேலும் ஆளுநரை சந்திக்க நேரம் கேட்பது குறித்து இன்று முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், திடீர் திருப்பமாக யாரும் எதிர்பாராத வகையில் இன்று காலை பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் மருமகன் அஜித் பவாரும் துணை முதலமைச்சராக பதவியேற்றார்.

மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், பட்னாவிஸ் மற்றும் அஜித் பவாருக்கு ஆளுநர் பகத்சிங் கோஷாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம் கடந்த 10 நாட்களாக அமலில் இருந்த ஜனாதிபதி ஆட்சி முடிவுக்கு வந்தது.

மகாராஷ்டிராவின் முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் பதவியேற்றதன் மூலம் இந்திய ஜனநாயகத்தின் முகத்தில் கரிபூசப்பட்டுள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தமது ஃபேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், மகாராஷ்டிராவில் நடந்துள்ள அரசியல் ரீதியான அநாகரிகத்தை எதனோடு ஒப்பிடுவது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதை, ஜனநாயகப் படுகொலை என்று சொல்வது கூட சாதாரணமான சொல்லாகிவிடும் என அவர் சாடியுள்ளார். அரசியல் சட்ட நெறிமுறைகளை காலில் போட்டு மிதித்து விட்டு, மாநில ஆளுநரைத் தலையாட்டி பொம்மையாக்கி, மறைமுக மிரட்டல்கள் மூலமாக ஆட்சியில் உட்கார்ந்திருப்பதை என்ன பாணி அரசியல் என்பது? பாஜக சித்து விளையாட்டு என்பதா? என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனிடையே  யாரும் எதிர்பாராத விதமாக, மஹாராஷ்டிர அரசியலில் புதிய திருப்பமாக தேசியவாத காங்.,ன் அஜித் பவார் ஆதரவு அளித்ததை அடுத்து, காலையில் மஹாராஷ்டிர முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றார். தேசியவாத காங்., கட்சி சிவசேனா வுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி வந்த நிலையில், அக்கட்சியை சேர்ந்த அஜித் பவாரின் ஆதரவு எம்எல்ஏ.,க்கள் பா.ஜ.,வுக்கு ஆதரவு என கூறி உள்ளனர்.இதனால் கூட்டணியை உறுதி செய்து வைத்திருந்த சிவசேனா – தேசியவாத காங்-காங் கட்சிகள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளன. அஜித் பவார் மற்றும் பா.ஜ.,க.வின் செயல்பாடுகளை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையிட 3 கட்சிகளும் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.