March 21, 2023

ராஜஸ்தான் நம்பிக்கை வாக்கெடுப்பு :அசோக் கெலாட் அரசு வெற்றி!

ராஜஸ்தான் சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை கொண்டு வந்த நிலையில் இதன் மீது விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், அசோக் கெலாட் அரசு பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றதாக தகவல் வருகிறது.

ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் முதல்வராக இருக்கும் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது.காங்கிரஸ் கூட்டங்களில் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் தனி அணியாகச் செயல்படத் தொடங்கியதால், 19 பேரையும் கட்சியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுத்தனர். ஆனால், சபாநாயகர் நடவடிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சச்சின் பைலட் தொடர்ந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கத் தடை விதிக்கப்பட்டது.

இந்தச் சூழலில் அதிருப்தி காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இருவரையும் தனியே சந்தித்துப் பேசினார். இதனால் சச்சின் பைலட் சமாதானம் அடைந்து மீண்டும் கட்சிக்கு திரும்பினார். ராஜஸ்தான் மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பம், ஆளும் காங்கிரஸ் அரசுக்கு ஏற்பட்ட சிக்கல் அனைத்தும் முடிந்த நிலையில் இன்று சட்டப்பேரவை கூடியது.

முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர பாஜக முடிவு செய்து இருந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை காங்கிரஸ் கொறடா மகேஷ் ஜோஷி, சபாநாயகர் சி.பி.ஜோஷியிடம் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்திற்கான நோட்டீஸை அளித்தார். இதனால் அவையின் முதல் நிகழ்ச்சியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது. சச்சின் பைலட் உள்ளிட்ட 19 அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததைத் தொடர்ந்து, ஆட்சியைத் தக்கவைப்பதற்கான பெரும்பான்மையைக் காங்கிரஸ் கட்சி பெற்றது.