October 24, 2021

மூன்றாண்டுகளாய் கட்டப்பட்ட 11 மாடி கட்டிடம் 3 விநாடிகளில் தரைமட்டமானது!

சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் இரண்டு 11 அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டப்பட்டு வந்தன. அவற்றில் ஒரு கட்டிடம் கடந்த 2014–ம் ஆண்டு ஜூன் மாதம் 28–ந் தேதி இடி–மின்னலுடன் மழை பெய்த போது திடீரென இடிந்து விழுந்தது. இதில் அங்கிருந்த 61 தொழிலாளர்கள் பலி ஆனார்கள். மேலும் ஏராளமான பேர் காயம் அடைந்தனர்.

mouliwak nov 3

இதைத்தொடர்ந்து, அருகில் இருந்த மற்றொரு கட்டிடத்தை ஆய்வு செய்ததில், அதுவும் பலவீனமாக இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் அந்த கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, அந்த கட்டிடத்தை இடிப்பதற்கான நடவடிக்கையை சென்னை பெருநகர வளர்ச்சி குழும (சி.எம்.டி.ஏ.) அதிகாரிகள் தொடங்கினார்கள்.

இதன்படி கட்டிடத்தை வெடிவைத்து தகர்க்கும் பணி திருப்பூரைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. நவீன உள்வெடிப்பு தொழில்நுட்பம் (இன்ப்ளோஷன்) மூலம் கட்டிடத்தை இடிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி கட்டிடத்தின் தரை தளம், முதல் தளம் மற்றும் 5–வது தளத்தின் உள்பகுதியில் உள்ள 54 தூண்களில் துளையிடப்பட்டு வெடிமருந்து நிரப்பப்பட்டது. வெடிமருந்துகள் மின்சார வயர் மூலம் இணைக்கப்பட்டன. கட்டிடத்தை நேற்று இடிக்க முடிவு செய்யப்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டு திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டனர். அந்த பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன.

மருத்துவ குழுவினருடன் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. தீயணைப்பு படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. முதலில், கட்டிடம் பிற்பகல் 2 மணிக்கு இடிக்கப்படும் என்று கூறப்பட்டது. பின்னர் அதை மாலை 4 மணிக்கு தள்ளிவைத்தனர். என்றாலும் அதன்பிறகும் கட்டிடத்தை இடிப்பது தாமதம் ஆனது. பாதுகாப்பு கருதி ஏற்கனவே மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்ததால், 6 மணி ஆனதும் இருள் சூழ ஆரம்பித்தது.

சரியாக இரவு 6.52 மணிக்கு ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிமருந்தை வெடிக்கச் செய்து கட்டிடம் இடிக்கப்பட்டது. 150 மீட்டர் தொலைவுக்கு அப்பால் இருந்தபடி ரிமோட் கண்ட்ரோலை இயக்கியதும் தரை தளம், முதல் தளம் மற்றும் 5–வது தளங்களில் வைக்கப்பட்டு இருந்த வெடிபொருட்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன. அப்போது அந்த தளங்களில் தீப்பிழம்பு எழுந்தது. இதனால் அந்த பகுதியே குலுங்கியது. வெடிபொருட்கள் வெடித்ததும் பிரமாண்டமான அந்த கட்டிடம் பொலபொலவென்று சரிந்து விழுந்தது.

3 வினாடிகளில் ஒட்டுமொத்த கட்டிடமும் இடிந்து தரைமட்டமாகி விட்டது. கட்டிடம் இடிந்து விழுந்த சத்தம் நீண்ட தொலைவுக்கு கேட்டது.அவ்வளவு பெரிய கட்டிடம் இடிந்து விழுந்ததால் அந்த பகுதியே புகை மூட்டமாக காணப்பட்டது. கட்டிட இடிபாடுகளால் எழுந்த புகை மூட்டம் அடங்க நீண்டு நேரம் ஆனது. ஆனாலும் அந்த பகுதியில் அவ்வப்போது லேசான மழை பெய்தது. ஆனால் அதனால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.