அபிராமி மால் இடிக்கப்படுகிறது!: 2 ஆண்டுகளில் மீண்டும் உதயமாகுமாம்!

அபிராமி மால் இடிக்கப்படுகிறது!: 2 ஆண்டுகளில் மீண்டும் உதயமாகுமாம்!

கோலிவுட்டில் லேண்ட் மார்க்-களில் ஒன்றான சென்னை அபிராமி மால் ஜனவரி 31ஆம் தேதி மூடப் பட்டு ’மால்’ இடிக்கப்படுகிறது என்றும் அந்த இடத்தில், 14 மாடிகளை கொண்ட புதிய கட்டிடம்  கட்டப்படும் என்று தியேட்டர் அதிபர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அபிராமி மால் தியேட்டர் 1976ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அப்போது 2 தியேட்டர்கள் மட்டுமே கட்டப்பட்டிருந்த நிலையில் 1982ஆம் ஆண்டில் மேலும் 2 தியேட்டர்கள் இணைக்கப்பட்டன. தற்போதும் இந்தத் தியேட்டர்கள் இயங்கி வருகின்றன. இதை இடித்துவிட்டு 16 தளங்களுடன் கூடிய வணிக வளாகங்கள், குடியிருப்புகள் மற்றும் 10 தியேட்டர்கள் கட்ட அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அபிராமி மெகா மால் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவருமான அபிராமி ராமநாதன் வெளியிட்ட அறிக்கையில், “தற்போது இருக்கும் சூழ்நிலையில் 1000 இருக்கைகள் கொண்ட தியேட்டர்கள் என்பது சரியாக இருக்காது என்ற காரணத்தால் மால்-ஐ புதிதாக சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பிப்ரவரி 1ஆம் தேதியுடன் மால்-ஐ மூடிவிட்டு 2 ஆண்டுகளுக்குள் புதுப்பொலிவுடன் மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் புதிய அபிராமி மெகா மாலில், உலகத்தரம் வாய்ந்த திரையரங்கள் அமைக்கப்படவுள்ளது. முதல் மூன்று மாடிகளில் தியேட்டர், கடைகள், உணவு விடுதிகள், அடுத்த 14 மாடிகளில் குடி யிருப்புகள் அமைக்கப்படுகிறது. இந்த மாலில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வெளியில் எங்கும் செல்லாமல் இங்கேயே வாங்கும் வகையில் மால் அமைக்கப்படவுள்ளது என்றும் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!