February 7, 2023

சென்னை- பரந்தூர் பகுதியில் இரண்டாவது விமான நிலையம்!

சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் என்பது தமிழக மக்களின் பெரும் கனவாக உள்ளது .அத்துடன் இது மாநிலத்தின் தொழில் மற்றும் வணிக வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான ஒன்று என்றும் சொல்லப்படுகிறது. எனவே தற்போது பரந்தூரில் சென்னை இரண்டாவது விமான நிலையம் அமைப்பது உறுதி ஆகிவிட்டது. புதிய விமான நிலையத்திற்காக பரந்தூரில், 4 ஆயிரத்து 791 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.எனவே சென்னையில் மீனம்பாக்கத்திற்கு அடுத்ததாக பரந்தூரில் விமான நிலையம் அமைய உள்ளது.

நம் நாட்டில் உள்ள முக்கியமான சர்வதேச விமான நிலையங்களாக சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர் ஆகிய 5 விமான நிலையங்கள் அமைந்துள்ளன. ஆனால் இந்த 5 விமான நிலையங்களில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர் விமான நிலையங்களின் அளவு, சென்னை விமான நிலையம் விரிவுபடுத்தப்படவில்லை. சென்னை விமான நிலையம் தற்போது சுமார் ரூ.2,500 கோடி மதிப்பீட்டில் விரிவுபடுத்தும் பணி நடந்து வந்தாலும், அதுவும் குறுகிய அளவில்தான் உள்ளது. அதற்கு முக்கிய காரணம், சென்னை விமான நிலையத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கு, தற்போதைய விமான நிலையத்தில் போதுமான இட வசதிகள் இல்லை. கூடுதல் நிலங்களை கையகப்படுத்துவதற்கும் முடியாத நிலை உள்ளது. எனவே சென்னைக்கு அருகே செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இந்த புதிய கிரீன்பீல்ட் விமான நிலையத்தை அமைப்பது தான் ஒரே வழி என்று ஒன்றிய அரசும், மாநில அரசும் கருதின. மாநில அரசு அதற்கான தகுதியான இடத்தை அடையாளம் காட்டும் படி, ஒன்றிய அரசு கூறியது.

இதை அடுத்து மாநில அரசு, செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் அருகே உள்ள படாளம், மற்றும் திருப்போரூர் ஆகிய இரண்டு இடங்களையும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூா், பண்ணூா் ஆகிய இரண்டு இடங்களையும் மொத்தம் 4 இடங்களை ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்தது. மத்திய அரசின் நிபுணர் குழுவினர் வந்து, இந்த 4 இடங்களையும் ஆய்வு செய்தனர். பின்பு செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர், மற்றும் படாளம் ஆகிய இரண்டு பகுதிகளில் விமான நிலையம் அமைப்பதற்கு தகுதியான வசதிகள் இல்லாத இடம் என்று நிராகரித்து விட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுங்குவாசத்திரம் அருகே உள்ள பன்னூர், பரந்தூா் ஆகிய இரண்டு இடங்களை மட்டும் ஆய்வில் எடுத்துக்கொண்டனர். இந்த 2 இடங்களிலும் ஆய்வு பணிகள் ஏற்கனவே நடந்து வந்தன.

இது சம்பந்தமாக மாநில தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, டெல்லி சென்று ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சா் உடன் ஆலோசனையும் நடத்திவிட்டு வந்தார். அப்போதும் பரந்தூர், பன்னூர் ஆகிய இரண்டு இடங்களை மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. இதில் தற்போது பரந்தூரில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது சம்பந்தமாக இன்று டெல்லி மாநிலங்களவையில், தி.மு.க எம்.பி. கனிமொழி சோமு கேள்விக்கு, மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் அளித்த பதிலில், பரந்தூரில், சென்னையின் இரண்டாவது விமான நிலையம், கிரீன் பீல்ட் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான ஆய்வு பணியை மாநில அரசின் தொழில் முதலீட்டு கழகமான, டிட்கோ ஆய்வு பணியை ஏற்கனவே முடித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்தில் அடங்கியுள்ள பரந்தூா் ஊராட்சி, மற்றும் அதை ஒட்டியுள்ள வளத்தூர், ஏகானத்தூர், அக்கம்மாபுரம், தண்டலம், மடப்புரம் ஆகிய கிராமங்களில் கிரீன் பீல்ட் விமான நிலையம் அமைப்பதற்கான இடங்களை அடையாளம் கண்டுள்ளனர். 7 கிலோ மீட்டர் நீளம், 4 கிலோ மீட்டர் அகலம் பரப்பில் 7,000 ஏக்கர் நிலம் இதற்காக தயார் நிலையில் உள்ளது. இங்கு பெரும்பாலும் அரசு புறம்போக்கு நிலங்கள் அதிக அளவில் இருக்கின்றன. தனியார் பட்டா நிலங்கள் மிகக் குறைவாகவே இருப்பதால், நிலங்களை கையகப்படுத்துவதில் பிரச்சனைகள் ஏற்படாது, என்று மாநில அரசின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் பரந்தூரில் பெரிய கட்டிடங்கள், செல்போன் டவர்கள், மின் கோபுரங்கள் போன்றவைகள் அதிக அளவில் இல்லை. எனவே இங்கு புதிய கிரீன் பீல்ட் விமான நிலையம் அமைத்தால் விமானங்கள் வந்து தரையிறங்குவது, புறப்படுவதில் பிரச்சனைகள் ஏற்படாது.அத்துடன் சென்னையில் இருந்து 1.49 நிமிடங்கள் ஆகும் எனவும் சுமார் 60 கிலோ மீட்டல் தொலைவில் அந்த இடம் அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாது சென்னை விமான நிலையத்தில் இருந்து புதிய விமான நிலையம் செல்ல 1.5 மணி நேரமாகும், சுமார் 75 கி.மீ தூரத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அங்கு முதல் கட்டமான 2 விமான ஓடுதளங்கள் அமைக்கப்படும் எனவும் சுமார் 1500 கோடி மதிப்பீட்டில் புதிய விமான நிலையம் கட்டப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது