September 27, 2021

தலைநகரையே சூடாக்கி விட்ட சுவாதி மர்டர் கேஸ்!

நம்ம தமிழக தலைநகரான சிங்காரச் சென்னையிலுள்ள நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில் சுவாதி என்ற இளம் பெண் கடந்த வெள்ளியன்று கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். அக்க் கொலையை குற்றவாளியை பிடிக்க போலீஸ் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக 3 தனிப்படைகள் அமைத்து முதற்கட்ட விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை மாநகர காவல் துறை ஆணையர் ராஜேந்திரன், சூளைமேட்டில் சுவாதியின் பெற்றோரை சந்தித்து பேசினார்.பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு அருகே கிடைத்திருக்கும் இரண்டு சிசிடிவி கேமராக்களில் பதிவான தெளிவில்லாத முகத்தைக் கொண்டு சந்தேகிக்கும் நபரை அடையாளம் காணும் பணியும் நடந்து வருகிறது.சுவாதி கொலை தொடர்பாக ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையை ஆதாரமாக வைத்து அடுத்த கட்டவிசாரணை நடக்கிறது. ஏற்கனவே 4 சிறப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

swathi fb

இதனிடையே சுவாதி கொலையில் இரண்டு நாள்களுக்குள் எந்தவித முன்னேற்றமும் இல்லையென்றால் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்யப்படும் என்று சென்னை ஐகோர்ட் எச்சரித்தது.

இந்த சுவாதி கொலை வழக்கு குறித்து பத்திரிகைகளில் வெளியான செய்திகளில், ரயில்வே, சென்னை மாநகர போலீஸாருக்கும் இடையில் புலன் விசாரணையில் ஒருங்கிணைப்பு இல்லை என்றும் இதுவே குற்றவாளியைப் பிடிப்பதற்கு ரயில்வே போலீஸாரால் முடியவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, பாரதிதாசன் ஆகியோர், அரசு குற்றவியல் வழக்குரைஞர் சண்முகவேலாயுத்தை திங்கள்கிழமை நீதிமன்றத்துக்கு வரும்படி அழைத்தனர்.

அவர் நேரில் வந்ததும், சுவாதி கொலை குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பி, காவல் துறையின் செயல்பாட்டுக்கு கடும் அதிருப்தியையும் கண்டனத்தையும் நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர் வழக்கின் புலன் விசாரணை என்ன நிலையில் உள்ளது என்பதை பிற்பகலில் தெரிவிக்குமாறு கூறினர்.இதைத் தொடர்ந்து, பிற்பகலில் அரசு குற்றவியல் வழக்குரைஞர் சண்முக வேலாயுதம் நீதிபதிகளிடம் விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: வழக்கு சென்னை காவல் துறைக்கு (நுங்கம்பாக்கம் காவல் நிலையம்) மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.தனிக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. சைபர் கிரைம், சிபிசிஐடி ஆகிய துறையினர் விசாரணைக்கு உதவியாக இருந்து வருகின்றனர். கொலை நிகழ்ந்த பகுதியை டிஜிபி, மாநகர காவல் ஆணையர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். விசாரணையில் 25 காவல்துறை அதிகாரிகள் பணிபுரிந்து வருகின்றனர்.செய்தி சரியானது அல்ல. வழக்கில் நல்ல ஒருங்கிணைப்பு உள்ளதாக டிஜிபி கூறியிருக்கிறார். காவல் துறை கட்டுப்பாட்டின் கீழ், ரயில்வே போலீஸார் உள்ளனர். அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமிரா பொருத்துவதற்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், “நிகழ்வு நடைபெற்று 3 நாள்கள் ஆகியும், குற்றவாளியைக் கண்டுபிடிக்கவில்லை. வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. இதுகுறித்து விரிவான விவாதமும் நடைபெற்றது. இந்த வழக்கை மாற்றுவதற்கு, ஏன் இவ்வளவு தாமதம்.
பெண்ணை இழந்து வாடும் குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். இரண்டு நாள்களுக்குள் வழக்கில் சுணக்கமோ, முன்னேற்றமோ இல்லை என்று நீதிமன்றம் கருதினால், உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அனுமதி பெற்று, வழக்கு பதிவு செய்யப்படும்.கண்ணியக் குறைவு கூடாது: நிகழ்வு நடைபெற்று சுமார் 2 மணி நேரம் பெண்ணின் உடல் மறைக்கப்படாமல் ரயில் நிலையத்தில் கிடந்து இருக்கிறது. அரசியலமைப்புபடி, உயிரிழந்த ஒருவருக்கு கூட எந்தவித கண்ணியக் குறைவு ஏற்படக்கூடாது. அந்தப் பெண்ணின் உடல் ஒரு காட்சிப் பொருளாக கிடந்துள்ளது என்று நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.