June 21, 2021

நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றி!

நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேத்திக்கு பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் வழக்கம் போல் அதிரடியாக ஆடி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டி வில்லியர்ஸ் 68 ரன்களும், டி காக் 53 ரன்களும், மன்தீப் சிங் 32 ரன்களும் விளாசினர். சென்னை அணி தரப்பில் இம்ரான் தாஹிர், பிராவோ, ஷர்துள் தாகூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு துவக்கமே சோகமாக அமைந்தது. துவக்க வீரர் வாட்சன் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ரெய்னா, ஜடேஜா, பில்லிங்ஸ் ஒற்றை இழக்க ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க சென்னை அணி 74 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்நிலையில் , ராயுடுவுடன் ஜோடி சேர்ந்தார் தோனி. இந்த ஜோடி பெங்களூரு அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் விளாசித் தள்ளி தண்ணிக் காட்டியது. குறிப்பாகத் தல தோனியின் ஆட்டம் மின்னல் வேகத்தில் இருந்தது. அம்பத்தி ராயுடு 82 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன் பிறகும் பிராவோவுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனி சென்னை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். 19.4 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

தோனி 70 ரன்களுடனும், பிராவோ 14 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தோனி தனக்கே உரிய பாணியில் சிக்சர் ஒன்றை விளாசி சி.எஸ்.கே அணியை வெற்றி பெறச் செய்தார். இந்த போட்டியில் அவர் 7 சிக்சர்களை விளாசினார். ஆக ஆட்டநாயகன் விருதை அவரே வென்றார்.

இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரின் அணிகள் பட்டியலில் பஞ்சாப்பை பின்னுக்குத் தள்ளி சென்னை அணி முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.