December 1, 2021

ஐபிஎல்: தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அசத்தல் வெற்றி!

ஒரு சாராரின் கோலாகல திருவிழா எனப்படும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் 12வது சீசனின் தொடக்க ஆட்டம், இன்று கோலாகல நிகழ்ச்சிகள் இல்லாமல் ஆர்ப்பரிக்கும் ரசிகர்களுக்கு மத்தியில் அசத்தலாக துவங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி டாஸ் வென்றார். முதலில் பவுலிங் செய்யத் தீர்மானித்தது. எதிர்த்து விளையாடும் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இதுவரை ஒரு முறை கூட சிஎஸ்கே-வை வென்றது இல்லை என்பதால் பலரின் கணிப்புப்படி நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை தொடங்கி உள்ளது. மேலும் இன்றைய போட்டியில் சுரேஷ் ரெய்னா 15 ரன்களை கடந்தபோது ஐபிஎல் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். ஐபிஎல் தொடரில் இதுவரை 177 போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை அவர் எட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க்து.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று  நடந்த ஐபிஎல்போட்டியில், டாசில் வென்ற சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.டோனி முதலில் பந்துவீச முடிவு செய்தார். ரசிகர்களின் ஆரவாரத்துக்கிடையே ஆர்சிபி தொடக்க வீரர்களாக கேப்டன் கோஹ்லி, பார்திவ் பட்டேல் இருவரும் களமிறங்கினர். கோஹ்லி 6 ரன் மட்டுமே எடுத்து அனுபவ ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் பந்துவீச்சில் ஜடேஜாவிடம் பிடிபட, ஆர்சிபி அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. இதில் இருந்து மீள்வதற்கு முன்பாகவே மொயீன் அலி, டி வில்லியர்ஸ் இருவரும் தலா 9 ரன் எடுத்து ஹர்பஜன் சுழலில் விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து வந்த ஹெட்மயர் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார் (ரன் அவுட்).

இதைத் தொடர்ந்து இம்ரான் தாஹிர் – ஜடேஜா சுழல் கூட்டணியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் துபே 2, கிராண்ட்ஹோம் 4, சாய்னி 2, சாஹல் 4, உமேஷ் 1 ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் போராடிய பார்திவ் பட்டேல் 29 ரன் எடுத்து (35 பந்து, 2 பவுண்டரி) பிராவோ பந்துவீச்சில் கேதார் வசம் பிடிபட, பெங்களூர் அணி 17.1 ஓவரிலேயே 70 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சிராஜ் (0) ஆட்டமிழக்காமல் இருந்தார். சிஎஸ்கே பந்துவீச்சில் ஹர்பஜன், தாஹிர் தலா 3, ஜடேஜா 2, பிராவோ 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 20 ஓவரில் 71 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.

ஆர்சிபியும் பந்துவீச்சில் மிரட்டிப் பார்த்தது. சிஎஸ்கே துவக்க ஆட்டக்காரர் வாட்சன் 10 பந்தில் ரன் ஏதுமின்றி சாஹல் சுழலில் கிளீன் போல்டானார். அடுத்து ஜோடி சேர்ந்த அம்பாதி ராயுடு, ரெய்னா நிதானமாக ஆடினர். இந்த ஜோடி 38 ரன் சேர்த்த நிலையில் ரெய்னா (19 ரன்) மொயீன் அலி சுழலில் வெளியேறினார். மறுமுனையில், விக்கெட்டை இழந்து விடக்கூடாது என்பதில் குறியாக இருந்த ராயுடு 42 பந்தில் 28 ரன் எடுத்து சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். மிக குறைவான இலக்கு என்பதால் ஆர்சிபி பந்துவீச்சாளர்களால் சிஎஸ்கேவுக்கு நெருக்கடி கொடுக்க முடிந்ததே தவிர, சிஎஸ்கேவின் வெற்றியை பறிக்க முடியவில்லை. கேதார் ஜாதவ், ஜடேஜா இணைந்து வெற்றியை உறுதி செய்தனர். சிஎஸ்கே -17.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 71- ரன் எடுத்து வெற்றி பெற்றது. கேதார் ஜாதவ் 13, ஜடேஜா 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆர்சிபி தரப்பில் சாஹல், மொயீன் அலி, சிராஜ் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். ஆக ஆரம்பத்தில் சொன்னது போல் சகலரும் எதிர்பார்த்தது போல் சிஎஸ்கே வெற்றியுடன் தொடரை தொடங்கியதால் சென்னை ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

மேலும் சென்னையில் நடைபெறும் ஐபிஎல் தொடக்க ஆட்டத்தின் வருமானம் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்றைய வருமானமான ரூ.2 கோடியை சிஆர்பிஎப் வீரர்களுக்கு சிஎஸ்கே அணி கேப்டன் தோனி வழங்கினார்.