நிர்மலா தேவி வழக்கில் செய்தி சேகரித்த பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்! – சென்னை பிரஸ் கிளப் கண்டனம்!

நிர்மலா தேவி வழக்கில் செய்தி சேகரித்த பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்! – சென்னை பிரஸ் கிளப் கண்டனம்!

பாலியல் சர்ச்சை புகாரில் சிக்கி கைதாகி சிறையில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவி இன்று ஶ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட போது அங்கு , செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மீது காவல்துறையினர் தாக்குதலையும் நடத்தி உள்ளனர்.இந்த தாக்குதலில் சன் தொலைக்காட்சி செய்தியாளர் மணிகண்டன் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இந்த நிர்மலா தேவி வழக்கு தொடர்பாக செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர் களின் கடமையை தடுக்க காவல்துறை துடிப்பது ஏன்? எவர் உத்தரவிற்கு பயந்து காவல்துறை ஏவல்துறையாக செயல்படுகிறது ? என்ற கேள்விகளுக்கு காவல்துறை பதில் தரவேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நிர்மலாதேவி இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவரை பேட்டியெடுக்க முயன்ற பத்திரிகை யாளர்களை போலீசார் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த முறை நிர்மலாதேவி நீதி மன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டபோது, ‘போலீசார் தன்னை மிரட்டி வாக்குமூலம் பெற்றதாக குற்றஞ்சாட்டினார். அதனால் இன்று அவரிடம் இருந்து ஏதாவது தகவல் கிடைக்கும் என ஸ்ரீவில்லி புத்தூர் நீதிமன்றம் முன் பத்திரிகையாளர்கள் குவிந்தனர்.

ஆனால் நிர்மலாதேவியை பத்திரிகையாளர்கள் நெருங்கவிடாமல் போலீசார் அவரை பாதுகாப்பு டன் அழைத்து சென்றனர். இருப்பினும் ஒருசில பத்திரிகையாளர்கள் நிர்மலாதேவியிடம் பேட்டி யெடுக்க முயன்றபோது அவர்களை போலீசார் தடுத்தனர். இதனால் இருதரப்பினர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சில பத்திரிகையாளர்கள் காயமடைந்தனர். இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்கள் தாக்கபட்டதை கண்டித்தும், தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பத்திரிக்கையாளர்கள் சங்கம், அனைத்து கட்சி சார்பாக ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பாக இருந்தது.

இதனிடையே சென்னை பிரஸ் கிளப் நிர்வாகி பாரதி தமிழன் இது குறித்து வெளியிட்ட ஒரு அறிக்கையில், “பாலியல் சர்ச்சை புகாரில் சிக்கி கைதாகி சிறையில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவி இன்று ஶ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். இந்த சம்பவத்தை பத்திரிகையாளர்கள் படம் எடுக்கவோ செய்தி சேகரிக்கவோ கூடாது என்று காலையில் இருந்தே விருதுநகர் மாவட்ட காவல்துறை கடும் கெடுபிடிகளை மேற்கொண்டது. தொடர்ந்து , செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மீது காவல்துறையினர் தாக்குதலையும் நடத்தி உள்ளனர்.இந்த தாக்குதலில் சன் தொலைக்காட்சி செய்தியாளர் மணிகண்டன் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினரின் இந்த தாக்குதல் சம்பவத்தை சென்னை பத்திரிகை யாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.

நிர்மலா தேவி வழக்கு தொடர்பாக செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்களின் கடமையை தடுக்க காவல்துறை துடிப்பது ஏன்? எவர் உத்தரவிற்கு பயந்து காவல்துறை ஏவல்துறையாக செயல் படுகிறது ?  என்ற கேள்விகளுக்கு காவல்துறை பதில் தரவேண்டும் .

தொடர்ந்து தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் விழுப்புரத்தில் நிருபர் சதீஷ் தாக்கப்பட்டார். இதுவரை தாக்குதல் நடத்தியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இன்று காவல்துறையே பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

தற்போது பத்திரிகையாளர்கள் மீதான காவல்துறையின் தாக்குதல் சம்பவத்தை கண்டித்து நாளை 15-02-2019 காலை 11 மணிக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கண்டன ஆர்பாட்டம் நடை பெறுகிறது. பத்திரிகையாளர்கள் ஒன்று கூடி உரத்த குரலில் காவல்துறையின் தாக்குதலுக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்புவோம்” என்று கேட்டு கொண்டுள்ளார்.

error: Content is protected !!