September 21, 2021

சென்னை ஓபன் டென்னிஸ்: பாவ்டிஸ்டா சாம்பியன் இரட்டையர் பிரிவில் போபண்ணா–ஜீவன் ஜோடிக்கு பட்டம்

தெற்காசியாவில் நடைபெறும் ஒரே ஏ.டி.பி. தொடரான 22–வது சென்னை ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் கடந்த 2–ந்தேதி தொடங்கியது. ஒற்றையர் பிரிவில் ஆதிக்கம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் சாம்பியன் குரோஷியாவின் மரிச் சிலிச் முதல் ஆட்டத்திலேயே வீழ்ந்து மூட்டையை கட்டினார்.

tennis jan 9

உலக தரவரிசையில் 14–வது இடம் வகிக்கும் ராபெர்ட்டா பாவ்டிஸ்டா அகுத்தும் (ஸ்பெயின்), 99–ம் நிலை வீரர் டேனில் மெட்விதேவும் (ரஷியா) இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தனர். இந்த நிலையில் இவர்களில் யார் சாம்பியன்? என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் நேற்று அரங்கேறியது.

இதில் அனுபவம் வாய்ந்த பாவ்டிஸ்டா சாதுர்யமாக செயல்பட்டார். அதாவது எதிராளியின் ஏதாவது சர்வீசை மட்டும் முறியடித்து விட்டு, அதன் பிறகு தமது சர்வீஸ்களை புள்ளிகளை மாற்றுவது என்ற இலக்குடன் பேட்டை சுழட்டினார். அதற்கு கைமேல் பலன் கிட்டியது. 4–வது கேமில் மெட்விதேவின் சர்வீசை பிரேக் செய்த பாவ்டிஸ்டா, அதன் மூலம் முதலாவது செட்டை 34 நிமிடங்களில் சொந்தமாக்கினார்.

2–வது செட்டில் மெட்விதேவ் ஓரளவு சவால் கொடுத்தார். இதில் 3–வது கேமில் ஒரு முறை இருவரும் நீயா–நானா? என்று விடாமல் ஷாட்டுகளை தொடுத்தனர். இவ்வாறு 30 ஷாட்கள் வரை நீடித்ததால் ரசிகர்கள் பரவசத்திற்குள்ளானார்கள். இந்த ‘திரிலிங்’ அகுத் பந்தை வலையில் அடித்ததன் மூலம் முடிவுக்கு வந்தது. இதே போல் இருவரும் முன்பக்கம் வந்து விளையாடிய விதமும் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது.

பாவ்டிஸ்டா சாம்பியன்

மற்றபடி ஆட்டம் ஒருதரப்பு என்றே வர்ணிக்க வேண்டும். மெட்விதேவ், 8 ‘ஏஸ்’ சர்வீஸ்கள் போட்டாலும் நிறைய தவறுகளை இழைத்து புள்ளிகளை தாரை வார்த்தார்.இந்த செட்டில் 8–வது கேமில் சர்வீசை பாவ்டிஸ்டா முறியடித்த போது, அந்த தருணமே வெற்றிக்கனி அவரது மடியில் விழுந்தது போல் ஆகி விட்டது. அதன் பிறகு பாவ்டிஸ்டா தனது சர்வீசில் வெற்றியை உறுதியாக்கினார். ஆட்டத்தின் கடைசி ஷாட்டை மெட்விதேவ் வெளியே விரட்டி வீணடித்தார்.

1 மணி 13 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் பாவ்டிஸ்டா 6–3, 6–4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 28 வயதான பாவ்டிஸ்டா சென்னை ஓபனை வெல்வது இதுவே முறையாகும். இதற்கு முன்பு 2013–ம் ஆண்டில் இறுதி ஆட்டத்தில் தோற்று இருந்த பாவ்டிஸ்டா இந்த முறை தனது ஏக்கத்தை தணித்துக் கொண்டார். மொத்தத்தில் இது அவரது 5–வது சர்வதேச பட்டாகும். கார்லஸ் மோயாவுக்கு பிறகு (2004, 2005–ம் ஆண்டு) சென்னை ஓபனை வென்ற முதல் ஸ்பெயின் நாட்டவர் என்ற சிறப்பையும் அவர் பெற்றார்.

சாம்பியன் பட்டத்தை தனதாக்கிய பாவ்டிஸ்டாவுக்கு ரூ.54 லட்சத்துடன் 250 தரவரிசை புள்ளிகளும், மெட்விதேவுக்கு ரூ.28 லட்சத்துடன் 150 தரவரிசை புள்ளிகளும் வழங்கப்பட்டன.

போபண்ணா ஜோடி சாம்பியன்

இதைத் தொடர்ந்து இரவில் நடந்த இரட்டையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி, மற்றொரு இந்தியர்களான புராவ் ராஜா– திவிஜ் சரண் இணையை எதிர்கொண்டது. 21 ஆண்டு கால சென்னை ஓபன் வரலாற்றில் இறுதி ஆட்டத்தில் 4 இந்தியர்கள் சந்தித்துக் கொண்டது இதுவே முதல் முறையாகும்.விறுவிறுப்பான இந்த மோதலில் போபண்ணா கூட்டணி 6–3, 6–4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை தனதாக்கியது.

இந்திய மூத்த வீரர் லியாண்டர் பெயஸ், சக நாட்டவர் மகேஷ் பூபதியுடன் இணைந்து இங்கு 5 முறை (1997, 1998, 1999, 2002, 2011) பட்டம் வென்றிருந்தார். மேலும் லியாண்டர் பெயஸ், செர்பியாவின் ஜாங்கோ டிப்சரேவிச்சுடன் இணைந்து 2012–ம் ஆண்டிலும் சென்னை ஓபனை கைப்பற்றி இருந்தார். அதன் பிறகு சென்னை ஓபனில் இந்தியர்கள் மகுடம் சூடுவது இதுவே முதல் முறையாகும்.

சென்னையைச் சேர்ந்த 28 வயதான ஜீவன் நெடுஞ்செழியன் சுவைத்த முதல் சர்வதேச பட்டம் இதுவாகும். அதே சமயம் பெங்களூருவில் வசிக்கும் போபண்ணாவுக்கு இது 15–வது இரட்டையர் பட்டமாகும். சாதனை படைத்த ரோகன் போபண்ணா– ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடிக்கு ரூ.16 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. 2–வது இடத்தை பிடித்த புராவ்–திவிஜ் ரூ.8½ லட்சத்தை பரிசாக பெற்றனர்.