December 4, 2021

லாரிகள் மூலம் குடிநீர் வேணுமா? – சென்னை குடிநீர் வாரியத்தில் ரிஜிஸ்டர் பண்ணுங்க!

லாரிகள் மூலம் குடிநீர் பெற இணையதளத்தில் பதிவு செய்யும் முறையை சென்னை குடிநீர் வாரியம் அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”  சென்னை குடிநீர் வாரியம் தினமும் லாரிகள் மூலம் 6 ஆயிரம் நடைகள் குடிநீரை மக்களுக்கு வினியோகம் செய்துவருகிறது. லாரி மூலம் குடிநீர் பெற விரும்புபவர்கள் தற்போது தங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு உட்பட்ட நீர் நிரப்பு மையங்களில் மட்டுமே பதிவு செய்து வருகின்றனர்.

chennai metro may 6

பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு சென்னை குடிநீர் வாரியம் இரண்டு முன்பதிவு வசதிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. இணைய வழி முன்பதிவு செய்ய பொதுமக்கள் www.chennaimetrowater.com என்ற வலைதளத்திற்கு சென்று தங்களுக்கு தேவையான அளவு குடிநீரை முன்பதிவு செய்துகொள்ளலாம். அவர்களுக்கு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்) வாயிலாக முன்பதிவு செய்ததற்கான உறுதி தகவல் அனுப்பப்படும். இந்த நடைமுறையில் ஏதேனும் தாமதம் இருப்பின் அதற்கான புகாரையும் இந்த இணைய வழி மூலமாகவே பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

பொதுமக்கள் 45674567 என்ற எண்ணில் தொடர்புகொண்டு ஒருமுகப்படுத்தப்பட்ட முன்பதிவு வசதியை பயன்படுத்தியும் லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ளலாம். இந்த இரண்டு சேவைகளும் 8-ந் தேதி (திங்கட் கிழமை) முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

ஆன்லைன் மற்றும் ஒருமுகப்படுத்தப்பட்ட சேவையால் பதிவுகள் ஒருமுகப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதோடு, ‘முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையில் எவ்வித தாமதமும் இன்றி லாரி மூலம் குடிநீர் வழங்குவதற்கும் வழிவகை செய்யப்படுகிறது.

இரண்டு சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் தற்போது நடைமுறையில் உள்ள நீர் நிரப்பு மையங்களில் தொலைபேசி மூலம் பதிவு செய்யும் நடைமுறையும் தொடர்ந்து செயல்படும்.