சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஃப்ரீ வைஃபை!
தற்போது கொஞ்சம் டல்லடித்து வரும் சென்னை மெட்ரோ ரயில் சேவையை அதிகமானோர் பயன்படுத்து வகையில் மெட்ரோ நிலையங்களில் மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தி சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதன் முதற்கட்டமாக ஆலந்தூர், கிண்டி, வட பழனி மற்றும் அண்ணாநகர் டவர் என 4 மெட்ரோ நிலையங்களில் அறிமுகப் படுத்தப் பட்டு உள்ளது. மேலும் இந்த ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக இலவச வைஃபை வசதி செய்யப்படும் என்றும் இந்த வசதி மார்ச் மாதம் தொடங்கப்பட இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் பல இடங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், அதிக கட்டணம் காரணமாக எதிர்பார்த்த அளவு பயணிகள் கூட்டம் இல்லை. பயணிகளின் வருகை அதிகரிக்க, ரயில் நிலையத்தில் இருந்து சில பகுதிகளுக்கு வேன் வசதி மற்றும், வாடகை சைக்கிள் மற்றும் வாடகை ஸ்கூட்டர் போன்ற பல்வேறு வசதிகளை செய்து தருகிறது. இதில் வாடகை ஸ்கூட்டர் சேவையை பயன்படுத்திக் கொள்ள விரும்பும் பயணிகள் தங்களது ஃபோனில் ’வோகோ’ என்கிற ஆப்பை பதிவிறக்கம் செய்து, ஓட்டுநர் உரிமத்தை பதிவேற்றம் செய்துக் கொள்ள வேண்டும். இவை சரி பார்க்கப்பட்ட பின்பு இந்த வசதியை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்குக் கட்டணமாக நிமிடத்திற்கு 1 ரூபாய் வசூலிக்கப்படும். இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றால் சென்னையில் உள்ள அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் இந்த வசதி விரிவுப் படுத்தப்படும்.
தவிர, ஏற்கனவே மெட்ரோ நிலையங்களில் சைக்கிள் வசதி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில்தான், தற்போது இலவச வைபை வசதி ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைபை வசதி மார்ச் மாதம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இலவச வைபை வசதியை பெற அதற்குரிய மெட்ரோ ‘ஆப்’ என்ற செயலியை பயணிகள் தங்களது போன்களில் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டாஸ் செய்ய வேண்டியது அவசியம்.
இன்றைய நவீன யுகத்தில் செல்போனும் இன்டர்நெட் வசதியும் அத்தியாவசமாகியுள்ள நிலையில், மக்கள் அதிக அளவில் மெட்ரோ ரயிலை பயன்படுத்தும் நோக்கில் இந்த வசதிகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது