October 18, 2021

சேலம் டூ சென்னை எட்டு வழி சாலைக்கு ஐகோர்ட் தடை!

பல தரப்பிலும் எதிர்ப்பை ஏற்படுத்திய எட்டுவழிச்சாலையில் மறு உத்தரவு வரும்வரை கையகப் படுத்தும் நிலங்களில் உள்ளவர்களை அப்புறப்படுத்தக் கூடாது என்றும் இதையொட்டிய அனைத்துப் பணிகளுக்கும் தடை விதித்தும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை – சேலம் இடையே அமைக்கப்பட இருக்கும் 8 வழிச் சாலை திட்டத்திற்காக சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 1900 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த எட்டு வழிச்சாலை திட்டத்தில் பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினர் நீதிமன்றத்தை அணுகினர். பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் எட்டுவழிச்சாலை திட்டத்தில் தற்போது நிலம் கையகப்படுத்தும் பணி நடக்கவில்லை என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டாலும் அதற்கான அளவிடும் பணி நடக்கிறது, பொதுமக்கள் அச்சுறுத்தப் படுகின்றனர் என்ற தகவலுடன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்குகள் நீதிபதிகள் சிவஞானம், பாவானி சுப்பராயன் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலும், பாமக தரப்பிலும் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

பாமக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி நடத்தப்படமாட்டாது என தமிழக அரசும், மத்திய அரசும் உத்தரவாதம் கொடுத்தனர்.ஆனால் உத்தரவாதத்தை மீறி அங்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெறுவதாகவும், பொதுமக்கள் அச்சுறுத்தப்படுவதாகவும், நிலம் கையகப்படுத்த அளவிடும் பணியில் இடையில் உள்ள மரங்கள் சட்ட விரோதமாக வெட்டப்படுவதாகவும், நிலத்திலிருந்து பொதுமக்களை அச்சுறுத்தி அகற்றும் பணியை காவல்துறை மூலம் செய்து வருவதாகவும், நீதிமன்றத்தில் வாக்குறுதிகளை மீறி அரசுகள் செயல்படுத்தி வருவதால் நிலம் கையகப்படுத்தும் பணிக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபாலன் வாதாடும்போது மக்களுடைய அனுமதி இல்லாமல் நிலம் அளவிடும் பணி செய்யவில்லை. நாங்கள் எட்டுவழிச்சாலை திட்டத்தில் நிலம் கையகப்படுத்துவதில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த துண்டுப் பிரசுரம் மட்டுமே வழங்கி வருகிறோம். பொதுமக்களின் அனுமதி இல்லாமல் நிலத்தை அளவிடும் பணியில் ஈடுபடவில்லை என்று வாதிட்டனர்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நீங்கள் நிலம் அளவிடும் பணியில் ஈடுபடும்போது இடையில் தடையாக உள்ள மரங்கள் வெட்டப்படுகின்றன. அங்கு மாற்றாக நடப்படும் மரங்கள் முழுமையாக வளர்வதற்கும், அதைப் பாதுகாப்பாதற்கும் எந்த ஏற்பாடும் இல்லை.அங்குள்ள மக்கள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. எனவே நிலம் கையகப்படுத்தும் பணிக்கும், அளவிடும் பணிக்கும் தடை விதிக்கப்படுகிறது. மறு உத்தரவு வரும் வரை அனைத்துப் பணிகளுக்கும் தடை தொடரும் என தெரிவித்த நீதிபதிகள் வழக்கை செப்.11 அன்று தள்ளி வைத்தனர்.