May 10, 2021

கொரோனா தொற்று பரவ 80 லட்சம் வழிகள்!- சென்னை மாநகராட்சி ஆணையர்

சென்னையின் 15 மண்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்தவாறு உள்ள நிலையில், உங்கள் வீடு தேடி வரும் மாநகராட்சி ஊழியர்களிடம் கொரோனா தொற்று குறித்து வெளிப்படையாக பேசுங்கள் என்று பொது மக்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளார்.


சென்னையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாற்றியமைக்கப்பட்ட கள அலுவலர்கள் குழுக்களுடனான ஆலோசனை கூட்டம் கமிஷனர் பிரகாஷ் தலைமையில் நடந்தது. அப்போது அவர், “பெருநகர சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை கடந்த பிப்ரவரி மாதம் வரை 200-க்கும் குறைவானவர்களே பாதிக்கப்பட்டு வந்தனர். அடுத்த 45 நாட்களில் மட்டும் கொரோனா பாதிப்பு 10 மடங்கு உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக வீடு வீடாக சென்று பரிசோதனை நடத்தப்படுகிறது. இதன் மூலம் 99 சதவீத உயிரிழப்புகளை தடுக்கலாம். இதைத்தொடர்ந்து காய்ச்சல் முகாம்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. சென்னை யில் இதுவரை 1.15 லட்சம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க மாநகராட்சி ஊழியர்கள் உங்கள் வீடு தேடி வருகிறார்கள். கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தால் மாநகராட்சி ஊழியர்களிடம் வெளிப்படையாக பேசுங்கள்

சென்னையில் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கி உள்ளது. மேலும் 45 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் இன்னும் 12 லட்சம் பேர் தடுப்பூசி போடாமல் உள்ளனர். தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு, 45 வயதுக்கு மேற்பட்டவர்களை அழைத்து வந்து தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும்.

இதனிடையே நடந்து முடிந்த தேர்தல் காரணமாக மட்டுமே கொரோனா தொற்று பரவியது என கூறமுடியாது. 80 லட்சம் பேர் இருக்கக்கூடிய நகரத்தில் தொற்று பரவ 80 லட்சம் வழிகள் உள்ளன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின் பற்றாதவர்களுக்கு அபராதம் விதிப்பதை கடுமையாக்கினால்தான் பாதிப்பை குறைக்க முடியும்.

ஆரம்ப காலத்தில் இருந்து தற்போது வரை 3.75 கோடி ரூபாய் அபராதம் சென்னையில் வசூல் செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் வீடுகளில் தகரம் அடித்து அடைப்பதற்கு பதிலாக ஸ்டிக்கர் ஒட்டப்படும். சென்னையில் 39 ஆயிரம் தெருக்களில் 600 தெருக்களில் 3 பேருக்கு மேல் தொற்று பாதிப்பு உள்ளது. ஒரு தெருவில் 3 பேர் பாதிக்கப்பட்டிருந்தால் பேனர் மூலமாகவும், 5 பேர் பாதிக்கப்பட்டிருந்தால் தடுப்புகள் அமைக்கப்பட்டும், 10 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டிருந்தால் அந்த தெருவில் நடமாடுவதற்கு தடை விதிக்கப்படும். வீட்டில் தனிமையில் இருப்பவர்கள், விதி மீறி வெளியே சுற்றினால், அவர்கள் கட்டாயம் கொரோனா மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்