August 19, 2022

சென்னை விமான நிலையத்திற்கு, சர்வதேச அளவில் எட்டாவது இடம்!

ம் நாட்டில் சரியான நேரத்திற்கு விமானங்கள் புறப்படுவதை உறுதி செய்வதில், சென்னை விமான நிலையத்திற்கு, சர்வதேச அளவில் எட்டாவது இடம் கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவிலேயே சென்னை விமான நிலையம் மட்டுமே இடம்பிடித்து உள்ளது என்பது குறிப்பிடத்தது.

விமானத் துறை, விமானங்கள், விமான நிலையங்கள் குறித்த ஆய்வுகள், கட்டுரைகள், அதிகளவிலான தரவுகளை, லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும், ‘சிரியம்’ என்ற நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த நிறுவனம், 2021ல் விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களின் குறித்த நேர செயல்பாடு தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், 2021ஆம் ஆண்டில் பெரிய சர்வதேச விமான நிலையங்களில் இருந்து, குறித்த நேரத்தில் விமானங்கள் புறப்பட்டதில், சென்னை விமான நிலையம், 89.32 சதவீதத்துடன், எட்டாவது இடம் பிடித்துள்ளது. மொத்தம், 49 ஆயிரத்து 923 விமானங்கள் சேவை வழங்கி உள்ளன. இதில், 70 வழித்தடங்களில், 81.90 சதவீத விமானங்கள் கண்காணிக்கப்பட்டு உள்ளன. 28 கோடி இருக்கைகள் என்ற அடிப்படையில், பெரிய விமான நிலையமாக கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில், சென்னை சர்வதேச விமான நிலையம் மட்டுமே, சரியான நேரத்தில் விமானங்கள் புறப்பாட்டை உறுதி செய்ததில், சர்வதேச அளவில் இடம் பிடித்தது.

இதற்கான சான்றிதழை, சிரியம் நிறுவனத்தின் தென் ஆசியா கண்டத்தின் வர்த்தக தலைவர் சைலேஷ், சென்னை விமான நிலைய இயக்குனர் சரத்குமாரிடம் நேற்று முன்தினம் வழங்கினார். விழாவின் போது, சென்னை விமான நிலையத்தின் பொது மேலாளர் ராஜூ, இணை பொது மேலாளர் ராஜ்குமார், சென்னை விமான நிலைய சுங்கத் துறை முதன்மை கமிஷனர் உதயகுமார் மற்றும் விமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பட்டியலில் அமெரிக்காவின் மியாமி விமான நிலையம் முதலிடத்தை பிடித்துள்ளது. அமெரிக்காவின் ஃபுகுவோகா விமான நிலையம் 2 வது இடத்தையும் ஜப்பானின் ஹனேஜா விமான நிலையம் 3 வது இடத்தையும் பிடித்துள்ளன. இதில் சென்னை விமான நிலையம் 8 வது இடத்தை பிடித்து இருக்கிறது என்பதும் இந்தியாவில் வேறெந்த விமான நிலையமும் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சென்னை விமான நிலைய இயக்குநர் ஷரத் குமார் , “எங்கள் விமான நிலைய இயக்க முறையே இந்த நற்பெயருக்கு காரணம். பங்குதாரரின் ஈடுபாடு, கூட்டு முடிவு, வாடிக்கையாளர் நலன் மற்றும் தொழில்துறையினரின் நம்பிக்கையை பெற்றது எங்கள் வெற்றிக்கு காரணமாக இருக்கிறது. விமான நிலையத்தின் தரத்தையும், வசதிகளையும் மேம்படுத்த தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். மேம்படுத்தப்படும் சென்னை ஏர்போர்ட் பயணிகளுக்கு உதவும் வகையில் விமான நிலைய இயக்க முறையை மேம்படுத்தவும் முயற்சித்து வருகிறோம். கார் பார்க்கிங் வசதியை வரும் மாதங்களில் மேம்படுத்தவும், ஒருங்கிணைந்த டி2 முனையத்தை செயல்படுத்தவும் உள்ளோம். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை விமான நிலைய இயக்கக முறையை திட்டமிடும் வகையில் புதிய வசதிகள் கொண்டு வரப்பட உள்ளன.” என்றார்.