கடவுள் & சுல்தான்களைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் சூர்யா-வுக்கு எழுத்தாளர் சாரு கடிதம்!

கடவுள் & சுல்தான்களைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் சூர்யா-வுக்கு எழுத்தாளர் சாரு கடிதம்!

அன்புத் தம்பி சூர்யாவுக்கு…

சமீபத்தில் ஒரு தமிழ் நாளிதழில் நீங்கள் எழுதியிருந்த கட்டுரையைப் படித்தேன். சினிமா நடிகர் களால் தமிழ்நாட்டில் சுதந்திரமாகவே வாழ முடியவில்லை; விமான நிலையத்தில் அற் பசங்கை பண்ணி விட்டு வந்தால் கூட கை குலுக்குகிறார்கள்; செல்ஃபி எடுக்க வேண்டும் என்று டார்ச்சர் பண்ணுகிறார்கள் என்பது உங்கள் புகார். உங்கள் தந்தை சிவகுமார் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரின் போனைத் தட்டி விட்டது தவறுதான் என்றாலும் ரசிகர்களின் டார்ச்சரும் தாங்க முடியாத தாக இருக்கிறது என்பது உங்கள் கட்டுரையின் சாரம். இது பற்றி உடனடியாக உங்களுக்கு ஒரு பதில் எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நேரம் இல்லை. தம்பி சூர்யா, நீங்களும் உங்களைப் போன்ற ஹீரோக்களும் வாங்கும் சம்பளம் 50 கோடி, 60 கோடி ரூபாய். ஆனால் துப்புரவுத் தொழிலாளியின் மாதச் சம்பளம் எவ்வளவு என்று உங்களுக்குத் தெரியுமா? வெறும் 6000 ரூ. அறுபது கோடிக்கும் ஆறாயிரம் ரூபாய்க்கும் எத்தனை வித்தியாசம்?

தமிழ்நாட்டில் சினிமாதான் மதம். நீங்களெல்லாம் கடவுள்கள். எம்ஜியார் ஒரு கடவுள். சிவாஜி ஒரு கடவுள். கமலை மட்டும் ஆண்டவர் என்று சொல்லுவோம். ஏனென்றால் அவர் நாஸ்திகர். ரஜினி கடவுள். விஜய் கடவுள். அஜித் கடவுள். நீங்கள் கடவுள். உங்கள் தம்பி கார்த்தி கடவுள். ஏன், முன்பு அப்பாஸ் என்று ஒரு நடிகர் இருந்தாரே அவர் கூட கடவுள்தான். அப்படித்தான் தமிழர்கள் கொண்டாடுகிறார்கள். நீங்கள் நினைத்தால் முதல் மந்திரியிடம் அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கிக் கொண்டு போய்ப் பார்க்கலாம். ஒரு தமிழ் எழுத்தாளனால் முடியுமா? நான் 100 புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். என் சகாக்கள் எஸ்.ராமகிருஷ்ணனும் ஜெயமோகனும் 200 புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள். இவர்களுக்குத் தமிழ் சமூகத்தில் என்ன அடையாளம்?

தம்பி, அசோகமித்திரன் என்று ஒரு எழுத்தாளர் இருந்தார். அவரையெல்லாம் உங்கள் தந்தை சிவகுமார் கரைத்துக் குடித்திருப்பார். சிவகுமார் என்னுடைய 20 ஆண்டுக் கால நண்பர். என் வீட்டுக்கெல்லாம் வந்திருக்கிறார். அவருடைய சித்திரங்கள் என் வீட்டுச் சுவர்களை அலங்கரிக்கின்றன. அவர் வரைந்த காந்தியின் ஓவியம் என் மேஜை மேல் இருக்கிறது. ஏன் தெரியுமா? சிவகுமார் இலக்கியத்தின் வாசகர். அதனால்தான் என் வீடு தேடி வருவார். ஆனால் நீங்கள் அடுத்த தலைமுறை. என் மகன் தலைமுறை. அவனுக்கும் இலக்கியம் தெரியாது. அவனுக்கும் அசோகமித்திரனைத் தெரியாது. இதையெல்லாம் நான் அவன் வாயில் புட்டிப்பாலைப் போல் ஊற்ற முடியாது. நீங்களாகவேதான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் எதிர் பார்க்கிறேன். சரி, அந்த அசோகமித்திரன் நம் தமிழ் மொழியின் ஆகச் சிறந்த எழுத்தாளர். நோபல் பரிசு பெற்ற பல எழுத்தாளர்களையும் விட சிறப்பான எழுத்தை நம் தமிழுக்குக் கொடுத்திருப்பவர். வீட்டில் எழுதுவதற்கான வசதி இல்லாமல் தி. நகர் நடேசன் பூங்காவில்தான் தன் நாவல்கள் பெரும்பாலானவற்றை எழுதினார். அவர் 18 ஆண்டுகள் வாசன் ஸ்டுடியோவில் பி.ஆர்.ஓ.வாக இருந்தார். அசோகமித்திரனின் தந்தையும் வாசனும் அடாபொடா நண்பர்கள். அதனால் தந்தையில்லாத அசோகமித்திரனை ஹைதராபாதிலிருந்து அழைத்துத் தன் சினிமா கம்பெனியில் வேலை கொடுத்தார் வாசன்.

18 ஆண்டுகள் கழித்து ஒருநாள் இப்படி ஒரு சம்பவம் நடந்தது. அன்று வாசன் அசோகமித்திரனை அழைத்துத் தன் காரைத் துடைக்கச் சொன்னார். இதெல்லாம் சினிமா கம்பெனியில் சகஜம்தானே? ஷூவைத் துடைக்கச் சொன்னாலும் துடைக்கணும் இல்லையா? ஆனால் அசோகமித்திரன் அப்படிப்பட்டவர் இல்லை. எழுத்தாளர் ஆயிற்றே?

”சார், நான் ஒரு எழுத்தாளன். என்னைப் போய் இந்த வேலையையெல்லாம் செய்யச் சொல்கிறீர் களே?” என்றார் வாசனிடம் அசோகமித்திரன். அதற்கு வாசன் சொன்ன ஒரு பதிலால் அசோக மித்திரனின் ஒட்டு மொத்த வாழ்க்கையே திசை மாறியது. அப்போது அசோகமித்திரனுக்கு 35 வயது என்று நினைக்கிறேன். “ஏம்ப்பா, நீ எழுத்தாளனா இருந்தா இந்த வேலைக்கு வந்திருக்க மாட்டியேப்பா?” அவ்வளவுதான். அந்தக் கணமே வேலையை ராஜினாமா செய்து விட்டு அடுத்த 20 ஆண்டுகள் ஏழ்மையில் உழன்றார் அசோகமித்திரன். இதெல்லாம் அசோகமித்திரனே எழுதினது. சாப்பிட வேண்டிய வயதில் சாப்பிடவில்லை என்று சொல்லியிருக்கிறார். எனக்கே தெரியும். அவருக்கு ஆஸ்துமா. மூச்சு விட சிரமப்படுவார். மாத்திரை மருந்து வாங்கக் காசு இருக்காது. தமிழைப் போலவே ஆங்கிலத்திலும் எழுத வல்லவர். ஆங்கிலத்தில் அவர் எழுதியிருந்தால் இந்நேரம் நோபல் பரிசு பெற்றிருப்பார். ஆனால் தமிழில்தான் எழுதுவேன் என்று உங்களுக்கும் எனக்கும் தாய்மொழியான தமிழைத் தேர்ந்தெடுத்தார். பட்டினி கிடந்தார். அவர் பிள்ளைகள் தலையெடுத்த பிறகுதான் அவரால் சாப்பிட முடிந்தது. ஆனால் வயிறு சுருங்கி விட்டது. ஒரே ஒரு மொளகா பஜ்ஜி போதும்ப்பா என்பார். அவர் தன் மகன் வீட்டில் இருந்தார். அவருடைய அறையில் புத்தகங்களே இல்லை. எங்கே உங்கள் லைப்ரரி என்று ஒருநாள் அவரிடம் கேட்டேன். என்னை ஏற இறங்கப் பார்த்து விட்டு இந்த அறையில் எங்கே புத்தகங்களை வைப்பது? எல்லாவற்றையும் நண்பர்களிடம் கொடுத்து விட்டேன் என்றார். அவர் வீட்டுக்கு எதிரே ஒரு அரண்மனை இருக்கிறது. அங்கேதான் உங்கள் இசைஞானி வாழ்கிறார்.

தம்பி சூர்யா, பாப்லோ நெரூதா என்று ஒரு கவிஞர் இருந்தார். சீலே தேசத்தின் தேசியக் கவி. அவருக்கு சீலேவின் தலைநகர் சந்த்தியாகோவில் ஒரு மாளிகையும் அவர் பிறந்து வாழ்ந்த வால்பரய்ஸோ என்ற நகரில் ஒரு மாளிகையும் இருக்கிறது. அந்த வால்பரய்ஸோ இப்போது ஒரு டூரிஸ்ட் சொர்க்கமாக விளங்குகிறது. உலகமெங்கிலும் இருந்து வால்பரய்ஸோவுக்குப் போய் நெரூதா வாழ்ந்த வீட்டைப் பார்த்து மகிழ்கிறார்கள் இலக்கிய ஆர்வலர்கள். அதே சீலே தேசத்தில் நிகானோர் பார்ரா (Nicanor Parra) என்று ஒரு கவிஞர் இருந்தார். சில மாதங்களுக்கு முன்புதான் இறந்தார். 103 வயது வரை வாழ்ந்த அவரிடம் அப்பாய்ண்ட்மெண்ட் கேட்டு சீலே அதிபரே மாதக் கணக்கில் காத்திருப்பார். இன்னும் பல தென்னமெரிக்க அதிபர்களும் அவருடைய அப்பாய்ண்ட்மெண்ட்டுக்காகக் காத்துக் கிடந்தனர். அவர் நடிக்கும் பால் விளம்பரத்துக்கு அவர் வாங்கும் தொகை ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகை வாங்கும் தொகைக்குச் சமம்.

இதையெல்லாம் இவர் ஏன் உளறுகிறார் என்று உங்களுக்குத் தோன்றும். அசோகமித்திரன் சென்ற ஆண்டு மரணம் அடைந்த போது அவருக்குக் கூடிய கூட்டம் 25 பேர். அதில் 15 பேர் அவரது உறவினர். மற்ற பத்துப் பேர் அவரது ஆயுட்கால நண்பர்கள். இப்படிப்பட்ட தேசத்தில் கடவுள்களைப் போல், சுல்தான்களைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகர்கள் – அவர்களை அப்படி வாழ வைத்துக் கொண்டிருக்கும் ஜனங்கள் எப்பவாவது செல்ஃபி எடுத்துக் கொள்ள முனைந்தால் அது உங்களுக்குப் பிரச்சினையாக இருக்கிறது.

தம்பி சூர்யா… உங்களுக்குத் தமிழ் படிக்கத் தெரிந்தால் கொஞ்சம் அசோகமித்திரனின் கதைகளைப் படித்துப் பாருங்கள். கரைந்த நிழல்கள் என்ற நாவலிலிருந்து ஆரம்பிக்கலாம். ஏனென்றால், அது அவருடைய சினிமாக் கம்பெனி அனுபவங்களை வைத்து எழுதியது.

இன்னொரு விஷயம் தம்பி. இன்று காலை வேந்தர் டிவி என்ற தொலைக்காட்சியிலிருந்து ஒரு பெண் போன் செய்தார். சாரு நிவேதிதா மேடம் இருக்காங்களா என்றது குரல். குரலுக்கு உரியவருக்கு 25 வயதுதான் இருக்கலாம். மேடம் இல்லீங்க, நான் தான் சாரு நிவேதிதா என்றேன். ஓ அப்டியா சார். சரி சார். நாஸ்டிரடாமஸின் predictions பற்றி ஒரு நிகழ்ச்சி பண்றோம். அதில் உங்கள் கருத்துக்களைச் சொல்லணும் என்றார்.

எல்லாமே ஓசி சூர்யா. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் எங்களுக்கு ஒரு நாள் போய் விடுகிறது. ஆனால் காசு கொடுப்பதில்லை. கேட்டால், நடிகர் சூர்யா போன்றவர்களுக்குக் கூட காசு தருவதில்லை சார். அவர்களும் கேட்பதில்லை என்கிறார்கள். நான் எதுவும் பதில் சொல்வதில்லை. உங்கள் சம்பளம் கோடிகளில். எங்கள் சம்பளம் ஒரு கட்டுரைக்கு 1000 ரூபாய். தொலைக்காட்சிக்கு ஓசி.

நான் அந்தப் பெண்ணிடம் எனக்கு ரொம்ப வேலை இருக்குங்க ஸாரி என்று சொல்லி விட்டேன். சாரு நிவேதிதா மேடம். எப்படி இருக்கு பாருங்க. நீங்க என்னடான்னா செல்ஃபி எடுத்து டார்ச்சர் பண்றாங்கங்க்றீங்க!!!

அன்புடன்,
சாரு நிவேதிதா

error: Content is protected !!