ஹாலிவுட் ஆக்சன் படங்களுக்கு தமிழகத்தில் வரவேற்பு அதிகம். அதிலும் ஹாலிவுட் ஹீரோக்கள் உளவாளியாக நடிக்கும் படங்களில் ஆக்‌ஷனுக்கு பஞ்சம் இருக்காது. கார் சேஸ், பறக்கும் விமானத்தில் சண்டை, ஹாட் ரொமான்ஸ் என உலகம் முழுக்க அந்த வகை படங்கள் வசூலில் கலக்கும். ஹீரோக்களுக்கே உரித்தான இந்த ஆக்‌ஷன் கதையில் ஹிரோயின் நடித்தால், அப்படி வந்த படம் தான் Charlie’s Angels. பிரபல ஹீரோயின்கள் உளவாளியாக ஆக்‌ஷனில் கலக்கிய படம். 2000 ஆன் ஆண்டில் வெளியான படத்தின் தொடர்ச்சியாக இப்போது மீண்டும் ரீபூட் ஆகியுள்ளது Charlie’s Angels. இளமை ததும்பும் புது ஹீரோயின்களுடன் அதிரடி ஆக்‌ஷனில் படத்தை இயக்கி உள்ளார் எலிசபெத் பேங்ஸ்.

கதைக்களம் :

2000 ம் ஆண்டில் வெளியான Charlie’s Angels கதையை அப்படியே கொஞ்சம் மாற்றி போட்டிருக் கிறார்கள். டவுன்செண்ட் ஏஜென்ஸி பெண்களை பயிற்சி தந்து உளவாளியாக பயன்படுத்தி உலகம் முழுக்க நடக்கும் கிரிமினல் வேலைகளை தடுக்கிறது. ஒரு நிறுவனம் அதீத எலெக்ட்ரிக்கல் சக்தி தரும் ஒரு கருவியை கண்டுபிடிக்கிறது. அதிலுள்ள குறையால் அது தீயவர்களின் கைகளில் கிடைத்து மனிதர்களை கொல்லும் கருவியாக மாறும் என அதைத் தடுக்க நினைக்கும் நவொமி ஸ்காட் உளவாளி ஏஜென்ஸியை நாடுகிறார். க்ரிஸ்டன் ஸ்டூவர்ட், எல்லா பலின்ஸ்காவுடன் இணைந்து எதிரிகளை முறியடித்து அந்தக் கருவியை கைப்பற்றுவதுதான் படத்தின் கதை.

நவொமி ஸ்காட் க்ரிஸ்டன் ஸ்டூவர்ட், எல்லா பலின்ஸ்கா மூவரும் அழகாகவே இருக்கிறார்கள் என்றாலும் முந்தைய பாகத்தினை பார்த்தவர்கள் இவரக்ளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உலகைக காக்கும் ஹாலிவுட் மசாலா கதை. பார்த்து பார்த்து பழக்கப்பட்ட கதை. திரைக்கதை யிலும் புதுமை எதுவும் இல்லை. இரண்டு ஆக்‌ஷன் காட்சிகள் நன்றாக இருக்கிறது. கதை நாடு நாடாக பறக்கிறது. கண்ணால் கண்டுகளிக்க முடியாத இடங்களுக்கு கூட்டிபோகிறார்கள். நவோமி ஸ்காட் அல்லாதீன் படத்திற்கு பிறகு இந்தப்படத்திலும் கலக்கியுள்ளார். அவருக்குதான் கதையில் அதிக முக்கியத்துவம் இருக்கிறது. க்ரிஸ்டன் ஸ்டூவர்ட் கவர்ச்சியில் பின்னுகிறார் சிக்கான உடையில் இளம் நெஞ்சங்களை கொள்ளை கொள்கிறார். எல்லா பலின்ஸ்கா அதிரடியில் கலக்குகிறார். சார்லீஸ் ஏஞ்சல்ஸ் கதையை பல பாகங்களுக்கு இழுக்கும் வண்ணம் கதையை கட்டமைத்துள்ளார்கள். ஆனால் சொதப்பலான திரைக்கதை லாஜிக் இல்லாத சண்டைக்காட்சிகள் பல இடங்களில் கொட்டாவியை வரவைக்கிறது. பரபர ஆக்‌ஷன் காட்சிகளில் கூட எடிட்டிங் மெதுவாக இருக்கிறது. இசை பரபர காட்சிகளில் ஓகே. முந்தைய பாகங்களின் ரசிகர்கள் இதனை ரசிக்க மாட்டார்கள். இளம் நடிகைகள் தான் படத்தை காப்பாற்றியுள்ளார்கள்.

பலம் – ஆக்‌ஷன் காட்சிகள், படத்தின் ஹீரோயின்கள்

பலவீனம் – சொதப்பல் திரைக்கதை, லாஜிக் மீறல்கள். மெதுவான கதை நகர்த்தல்

ஹாலிவுட் ஆக்‌ஷன் விரும்பிகள் ஒருமுறை பார்த்து ரசிக்கலாம்.

கதிரவன்