சந்திராயன் 2 – சிக்னல் கிடைக்கலை : ஆனாலும் இது வெற்றிகரமான தோல்விதான்!

சந்திராயன் 2  – சிக்னல் கிடைக்கலை : ஆனாலும் இது வெற்றிகரமான தோல்விதான்!

நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்பட இருந்த விக்ரம் லேண்டரில் இருந்து சிக்னல் கிடைக்க வில்லை என்றும் எனினும் சந்திரயான்-2 -வின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் தொடர்ந்து செயல் பட்டு நிலவை ஆய்வு செய்யும் எனவும் இஸ்ரோ இயக்குநர் சிவன் அறிவித்துள்ளார்!

உலகின் பல நாடுகளின் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சந்திரயான் 2ஐ இஸ்ரோ கடந்த ஜூலை மாதம் 23ந் தேதி விண்ணுக்கு அனுப்பியது. முதலில் அதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக சந்திரயான் 2ஐ விண்ணில் அனுப்புவதற்கான ஏற்பாடு நடைபெற்றது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த ஏற்பாடு ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டது.

பிறகு கூறிய படி சரியாக சந்திரயான் 2 ஜூலை 23ல் விண்ணிற்கு சென்றது. வெற்றிகரமாக சந்திர யான் 2ல் இருந்து லேண்டர் விக்ரம் பிரிந்தது. நிலவையும் லேண்டர் விக்ரம் சரியான தொலைவில் அணுகியது. விண்ணில் இருந்து பூமி, நிலவு போன்றவற்றை கூட சந்திரயான் 2 புகைப்படம் எடுத்து அனுப்பியது. இதனால் அனைத்து சுபமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காரணத்தினால் செப்டம்பர் 7 அதிகாலை 1.55 மணிக்கு விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்க ஏற்பாடுகள் நடைபெற்றன. அதன்படி, அனைத்தும் சரியாக சென்று கொண்டிருந்தது. சுமார் 100 கி.மீ தொலைவில் நிலவை சுற்றி வந்த லேண்டர் விக்ரம் என்ஜின் இயக்கப்பட்டு மெல்ல நிலவின் தரையை நோக்கி இறக்கப்பட்டது.

சரியாக நிலவின் தரையை அடைய 2.1 கிமீ எனும் தொலைவு மட்டுமே இருந்தது. அப்போது தான் திடீரென விக்ரம் லேண்டருடனான தகவல் தொடர்பு பெங்களூரில் உள்ள செயற்கை கோள் கட்டுப் பாட்டு அறையுடன் துண்டிக்கப்பட்டது. எவ்வளவோ முயன்றும் லேண்டருடனான தொடர்பை விஞ்ஞானிகளால் மீண்டும் பெற முடியவில்லை.

இதனால் சந்திரயான் 2 மூலம் அனுப்பி வைக்கப்பட்ட லேண்டர் விக்ரம் மற்றும் அதற்குள் இருக்கும் ஆய்வூர்தி பிரக்யானுக்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை. பொதுவாக தகவல் தொடர்பு துண்டிக்கப்படுகிறது என்றால் லேண்டர் விக்ரம் நிலவில் வேகமாக தரையிறங்கி யிருக்கலாம் அதன் மூலமான அதிர்வால் தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

இது குறித்து இஸ்ரோவின் அதிகாரிகள், “சந்திரயான் -2 திட்டத்தின் 5 சதவீதம்தான் தோல்வி அடைந்துள்ளது. மீதமுள்ள 95 சதவீத செயல்பாடுகள் தனது பணியைத் தொடரும். ஆர்பிட்டர் நிலவை வெற்றிகரமாக சுற்றி வருகிறது. ஒரு வருட காலத்திற்கு ஆர்பிட்டர் நிலவைச் சுற்றி வரும் போது பல்வேறு புகைப்படங்களை இஸ்ரோவுக்கு அனுப்பும். அது லேண்டர் விக்ரமின் புகைப்படத்தையும் எடுக்கக்கூடும்” என்று தெரிவித்தார்கள்.

நிலவின் தென் துருவ பகுதியில் பல மில்லியன் ஆண்டுகளாக சூரிய வெளிச்சம் படவில்லை. இதனால் இவ்விடத்தில் நீரின் அளவு அதிகமாகவே இருக்கும் என்று விஞ்ஞானிகள் கணித்து உள்ளனர். ஆர்பிட்டர் அனுப்பும் புகைப்படங்கள் வழியாகவும் இதனை உறுதி செய்ய முடியும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

நிலவின் தென் துருவப்பகுதி மிகவும் இருட்டாக மற்றும் மேடு, பள்ளங்கள் நிறைந்த கரடு, முரடான பகுதி என்பதால் அனைத்து நாடுகளுக்கும் சற்று சவாலாகவே இருந்தது. அந்த வகையில், லேண்டர் விக்ரம் நிலவின் தென் துருவப் பகுதியை அடைந்து வரலாற்று நிகழ்வை ஏற்படுத்தியுள்ளது.

நிலவு குறித்து ஆராய்ச்சி செய்ய இதுவரை 38 முறை செயற்கைகோள்களை அனுப்பி பல்வேறு நாடுகள் முயற்சி செய்துள்ளதாக தகவல்கள் உள்ளன. அதில் சில வெற்றி பெற்றுள்ளன. ஆனால், நிலவுக்கு வெற்றிகரமாக சென்ற அனைத்து செயற்கைகோள்களுமே நிலவின் வட துருவத்தில் தான் தடம் பதித்தன. முதல்முறையாக நிலவின் தென் துருவப்பகுதிக்குச் சந்திரயான் -2 சென்றுள்ளதே ஒரு சாதனையாகவே பார்க்கப்படுகிறது. ஆம்.. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் 300 -400 ஆண்டுகளில் செய்த சாதனையை இஸ்ரோ 50 ஆண்டுகளில் நிகழ்த்தியுள்ளது. இதுவே பாராட்டப்படவேண்டிய ஒன்றுதானே .

Related Posts

error: Content is protected !!