அஞ்சல்துறையில் வேலைவேண்டுமெனில் இந்தி, ஆங்கிலம் கட்டாயம்!

நம் இந்திய அஞ்சல்துறை மொத்தம் 154,000 அஞ்சல் அலுவலகங்களைக் கொண்ட உலகின் மிகப் பெரிய துறையாகும்(சீனா இரண்டாவது இடம், 57,000 தபால் அலுவகங்கள்). இதன் பரந்து விரிந்த அலுவலகங்களால் இந்தியாவின் அனைத்து இடங்களும் இணைக்கப்படுகின்றன. இந்திய அஞ்சல் துறையில் மொத்தம் 593,878 (2001ம் வருடத்தின் படி) ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். இந்திய அஞ்சல் துறை சிறிய வகை வங்கி சேவைகளிலும் ஈடுபடுகிறது. இதன் மூலம் வங்கி வசதி இல்லாத கிராமங்களும் பயன்பெறுகின்றன.21 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு, சுமார் 6000 நபர்களுக்கு ஒரு அஞ்சல்அலுவலகம் என்ற விகிதத்தில் இது உள்ளது. அப்பேர்பட்ட தபால்துறை தேர்வுகளில் இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும் என மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

நாடு முழுவதும் உள்ள அஞ்சலகங்களில் இருக்கக்கூடிய தபால்காரர், அஞ்சலக உதவியாளர், அஞ்சல் அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை எழுத்துத்தேர்வு மூலம் மத்திய தொலைத் தொடர்புத் துறை நிரப்பி வருகிறது. அதற்கான தேர்வு எழுதும் முறையில் புதிய மாற்றங்களை மத்திய தொலைத்தொடர்புத்துறை அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி முதல் தாள், இரண்டாம் தாள் என இரண்டு பிரிவுகளாக தேர்வு நடைபெறும். தேர்வு மொழியை விண்ணப்பதாரர் தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

முதன்மைப் பணியிடங்களை நிரப்புவதற்கான முதல் தாள் தேர்வை இதற்கு முன்னர் ஆங்கிலம் மற்றும் இந்தி அல்லது மாநில மொழிகளில் எழுதலாம். இனி மேல்  இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு நடைபெறும்.

பிற பணியிடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் தாள் தேர்வு மட்டும் ஆங்கிலம் மற்றும் தேர்வர்கள் விரும்பும் மாநில மொழிகளில் நடைபெறும். உடனடியாக இப்புதிய தேர்வு முறை அமலுக்கு வருவதாகவும் மத்திய அரசு சுற்றறிக்கை கூறுகிறது.