சட்டவிரோதமாக குடியேறியவர்களைக் கண்டறிந்து நாடு கடத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு!

சட்டவிரோதமாக குடியேறியவர்களைக் கண்டறிந்து நாடு கடத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு!

மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு அணமியில் நாடாளுமன்றத்தில் பேசும் போது , “ஐ.நா. அகதிகள் ஆணையத்தில் (யுஎன்எச்சிஆர்) பதிவு செய்து கொண்டு, 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியாஸ் இந்தியாவில் தங்கி இருப்பதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. எனினும், சுமார் 40 ஆயிரம் ரோஹிங்கியாஸ் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக மற்றொரு புள்ளி விவரம் கூறுகிறது. இவர்கள் பெரும்பாலும் ஜம்மு, ஹைதராபாத், ஹரியாணா, உத்தரபிரதேசம், டெல்லி மற்றும் ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் வசிக்கின்றனர்” என்றார். இதுபோல, வங்கதேசத்தைச் சேர்ந்த சுமார் 2 கோடி பேர் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கி இருப்பதாக, 2016-ம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த 7 மாதங்களில் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 70 இளைஞர்கள் தீவிரவாத இயக்கத்தில் இணைந்துள்ளதாக பாதுகாப்புத் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதில் பெரும்பாலானவர்கள் புல்வாமா, சோபியான் மற்றும் குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.இதுபோல கடந்த ஆண்டில் 88, 2015-ல் 66, 2014-ல் 53 இளைஞர்கள் தீவிரவாத அமைப்பில் சேர்ந்ததாக அந்த அதிகாரி தெரிவித்தார். இந்த ஆண்டில் தீவிரவாத அமைப்பில் சேர முயன்ற 54 பேர் தடுத்து நிறுத்தப்பட்டனர். கடந்த 7 மாதங்களில் பாதுகாப்புப் படையினரின் பதில் தாக்குதலில் 132 தீவிரவாதிகள் பலியாயினர்.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், “உலகின் பெரிய நாடுகளில் ஒன்றான இந்தியா பல நாடுகளுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. அந்த வகையில், அரசியல் மற்றும் பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பக்கத்து நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக அவ்வப்போது குடியேறுகின்றனர்.பண்பாடு மற்றும் இன ரீதியாக ஒற்றுமை இருப்பதால் சட்டவிரோதமாக குடியேறிய பக்கத்து நாட்டினர் பற்றிய தகவல் அரசின் கவனத்துக்கு வராமலேயே போய் விடுகிறது. இதனால் அவர்கள் இங்கேயே நிரந்தரமாக தங்கி விடுகிறார்கள்.

உதாரணமாக மியான்மர் நாட்டின் ராக்கைன் மாகாணத்தைச் சேர்ந்த ரோஹிங்கியாஸ் இனத்தவர்கள் சமீப காலமாக சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறி வருகின்றனர். இவ்வாறு சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் இந்தியர்களின் உரிமையை பறிப்பதுடன் நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகின்றனர். குறிப்பாக, கடந்த பல ஆண்டுகளாக தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவது உலக நாடுகளுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

இப்படி, ஒரு நாட்டில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தீவிரவாத அமைப்புகள் தங்கள் இயக்கத்தில் சேர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.எனவே, சட்டவிரோதமாக தங்கி இருக்கும் வெளிநாட்டினரை அடையாளம் காண்டு அவர்களை நாடு கடத்துவதற்கு ஏதுவாக, மாவட்ட அளவில் ஒரு குழுவை அமைக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!