August 11, 2022

கூவம் ஆற்றை சுத்தப்படுத்த முதல் கட்டமாக 105 கோடி ரூபாய் – மத்திய அரசு அனுமதி!

கூவம் என்றதும் மூக்கை பிடிக்கும் கொள்ளும் அளவிற்கு வீசும் துர்நாற்றமும் அதையடுத்து கூவத்தை சுத்தப்படுத்து கிறோம் என்று சொல்லி ஆட்சியாளர்கள் செலவிடும் தொகையும்தான் நம்மில் பல்ருக்கும் நினைவுக்கு வரும். கூடவே சிலருக்கு இதே கூவம் நதி படகு போக்குவரத்துக்கும், மக்கள் மீன் பிடித்து உண்ணுவதோடு சுற்றுலா தலமாகவும் இருந்தது என்ற வரலாறும் தெரியும்.

இந்த கூவத்தின் பிறப்பிடம் என்று எடுத்துக் கொண்டால் கடந்த, 65 ஆண்டுகளுக்கு முன், வேலுார் மாவட்டம், அரக்கோணம் ஒன்றியம், கேசவரம் பகுதியில், 437 மீ.,நீளத்தில், 16 ஷட்டர்களுடன், கேசவரம் அணை கட்டப்பட்டது. பாலாற்றில் இருந்து கல்லாற்றுக்கு வரும் தண்ணீர், கல்லாற்றில் இருந்து கேசவரம் அணையை வந்தடைகிறது. அவ்வாறு வந்தடையும் நீர், கேசவரம் அணையில் இருந்து, ஒருபக்கம் கொற்றலை ஆறாகவும், மறு பக்கம் கூவம் ஆறாகவும், பிரிந்து ஓடுகிறது. அந்த கேசவரம் அணையில் உள்ள,16 ஷட்டர்களும், 10 ஆண்டுகளாக பழுதடைந்த நிலையிலேயே காணப்படுகின்றன.

மேலும், அணையின் கட்டுமானம் சேதமடைந்துள்ளது. கேசவரம் அணையின் வறண்ட நிலையை பயன்படுத்தி, செங்கல் சூளை, மணல் திருட்டு என ஆரம்பிக்கும், கூவம் ஆறு, பேரம்பாக்கம் வழியாக செல்கிறது. இதன் பின்னர் கூவம் என்னும் கிராமத்தில் உள்ள, கூவம் ஏரியின் கலங்கலில் இருந்து வெளியேறும் நீர், நரசிங்கபுரம், இருளஞ்சேரி, சத்திரை வழியாகவும், பன்னுார், கீழச்சேரி வழியாக சென்று, மப்பேடு அருகில் கூவம் ஆற்றில் கலக்கிறது. இதை யடுத்து அதிகத்துார், மணவாளநகர், அரண்வாயல், புதுச்சத்திரம், பருத்திப்பட்டு, திருவேற்காடு, மதுரவாயல், கோயம்பேடு வழியாக, 72 கி.மீ., துாரம் பயணித்து, சென்னை நேப்பியர் பாலம் அருகே கடலில் கலக்கிறது.

ஆக தற்போது கூவம் ஆறு செல்லும் வழித்தடம், கேசவரம் அணையில் இருந்து, ஆவடி பருத்திபட்டு வரை மணல் திருட்டாலும், ஆக்கிரமிப்பாலும் வறண்டு காணப்படுகிறது. அத்துடன் பூந்தமல்லி – திருவள்ளூர் நெடுஞ்சாலையில், அரண்வாயல் குப்பம் கிராமம் அருகே, பெரிய நிறுவனங்கள், கூவம் ஆற்றை பாதியளவுக்கு ஆக்கிரமித்து கட்டடங்களை கட்டி வருகின்றன. மேலும் ஆவடி – பருத்திபட்டு வரை, கழிவுநீர் கலப்பு இல்லாமல் வரும் கூவம் ஆறு, ஆவடி – பூந்தமல்லி நெடுஞ்சாலையில் திருவேற்காடு பகுதியில் உள்ள வீரராகவபுரத்தில், ஆவடி மற்றும் திருவேற்காடு நகராட்சியில் வசிக்கும் மக்களால் உபயோகப்படுத்தப்படும் மொத்த கழிவுநீரும் கலக்கிறது. சென்னீர்குப்பம் பகுதியில், சாயப்பட்டறையின் கழிவுநீர் மொத்தமும் கூவம் ஆற்றில் கலக்கிறது.இதுபோல், சென்னையில், கூவம் செல்லும் வழித்தடத்தில், 40க்கும் மேற்பட்டஇடங்களில் கழிவுநீர் கலக்கிறது.

இந்நிலையில் சென்னை ஆறுகளை மீட்கும் அறக்கட்டளை (Chennai rivers restoration trust) என்ற அரசு அமைப்பின் மூலம் கூவத்தை மீட்கும் பணியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இதற்காக 2012-ம் ஆண்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கியது. ஒன்று முதல் 3 ஆண்டுகளை வரை குறுகிய கால திட்டம், 4 முதல் 8 ஆண்டுகள் வரை நடுத்தர கால திட்டம், 8 ஆண்டுகளுக்கு மேல் நீண்ட கால திட்டம் என 3 கட்டங்களாக இத்திட்டம் பிரிக்கப்பட்டுள்ளது.குறுகிய கால திட்டத்தில் ஆற்றை சுத்தப்படுத்துவது, கரையோரங்களை அழகுபடுத்து வது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டங்களில் ஆற்றின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

இந்நிலையில், சென்னை கூவம் ஆற்றை சுத்தப்படுத்தும் திட்டத்துக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. ரூ.105 கோடி செலவில் 3 ஆண்டுகள் நடைபெறும் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு  உள்ளது. அதன்படி கடலை ஒட்டிய முகத்துவாரம் முதல் சேத்துப்பட்டு வரை முதற்கட்டமாக பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. ரூ.105 கோடி செலவில் 3 ஆண்டுகள் நடைபெறும் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் தூர்வாருவது, கரையோரத்தில் பூங்காக்கள் அமைப்பது உள்ளிட்ட 61 நடவடிக்கைகள் இதில் மேற்கொள்ளப்ப டும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வழக்கம் போல் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் இத்திட்டத்தை வழக்கம் போல் சொத்தப்பக் கூடாது என்று எதிர்பார்க்கிறார்கள்!