கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் – ஏன்? எப்படி?

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் – ஏன்? எப்படி?

றைமகன் பிறக்கப்போகிறார் என்பதன் அடையாளமாக டிசம்பர் முதல் தேதியே வீடுகளில் நட்சத்திரம் தொங்கவிட்டு இது கிறிஸ்துமஸ் மாதம் என்று அறிவித்து கிறிச்து பிறந்து விட்ட நாளை இன்று கொண்டாடுகிறோம்.  இந்நிகழ்வையொட்டி வீட்டை ஒட்டடை அடித்து, கழுவிச் சுத்தம் செய்வதைப்போலவே நம் மனதையும் ஒட்டடை அடித்து, கழுவிக் காயப்போட வேண்டிய தருணம் இது. இந்த ஆண்டு முழுவதும் சிறிது சிறிதாக நம் மனதில் சிந்தனையில் ஒட்டடை படிந்திருக்கலாம். நம் மனமே கடவுள் வாழும் ஆலயம். மனமே இறைமகன் பிறக்க இருக்கும் மனத் தொழுவம். அப்படியிருக்கையில் ஒவ்வொரு வருடமும் உங்களைத் தூய்மைப்படுத்திக்கொள்ள கிறிஸ்து தன் பிறப்பின் மூலம் வாய்ப்பு அளிக்கிறார் என்பதை மறந்துவிடக்கூடாது. அப்படியாப்பட்ட இயேசு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த பூமியில் அவதரித்த நிகழ்வை எல்லோரும் கொண்டாடுவோமே!

இச்சூழலில் கிறிஸ்துமஸ் தாத்தா, அவர் தரும் கிறிஸ்துமஸ் பரிசு, கிறிஸ்துமஸ் ஸ்டார், கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை, கிறிஸ்துமஸ் குடில், கிறிஸ்துமஸ் கேக் போலவே கிறிஸ்துமஸ் மரமும் கிறிஸ்து பிறப்புக் கொண்டாட்டத்தின் முக்கிய அங்கமாக மாறிவிட்டது. அதன் வரலாறோ மிகவும் சுவையானது. அதை தெரிந்து கொள்வோமா?

கி.பி. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த போனிபேஸ் என்றொருவர், கிறிஸ்தவ மக்கள் மத்தியில் பல மூடநம்பிக்கைகள் இருந்ததாகச் சாடியும் எதிர்த்தும் வந்தார். ஊர் ஊராகச் சென்று இதற்காக பிரச்சாரம் செய்துவந்த அவர், ஓக் மரம் ஒன்றைமக்கள் வழிபடுவதைக் கண்டார். அச்செயலைக் கண்டு கடுங்கோபம் கொண்ட அவர், அந்த மரத்தை வெட்டி வீழ்த்தினார். அந்த மரம் மீண்டும் துளிர்த்து விடாமல் இருக்க அந்த மரத்தின் வேர்ப்பகுதியையும் அங்கிருந்து பெயர்த்தெடுத்து அப்புறப்படுத்தினார்.

ஆனால் மரம் இருந்த அதே இடத்திலிருந்து அடுத்த சில தினங்களிலேயே ஓக் மரக்கன்று முளைத்து விறுவிறுவென்று வளர்ந்து ஓராண்டு காலத்துக்குள்ளாக முன்பிருந்த மரத்தைப்போலவே கம்பீரமாக எழுந்து நின்றதைக் கண்ட மக்கள், அதை இயேசு உயிருடன் மீண்டெழுந்த உயிர்த்தெழுதலின் அடையாளமாக பார்க்கத் தொடங்கினர். போனிபேஸ் மீண்டும் அவ்வழியே சென்றபோது தாம் வெட்டிப்போட்ட இடத்தில் புதிய மரத்தைக் கண்டு வியந்து அதனடியில் முழங்காலிட்டு ஜெபிக்கத் தொடங்கினார். இதனால் கிறிஸ்தவ வழிபாட்டில் பத்தாம் நூற்றாண்டில் ஓக் மரம் ‘உயிர்ப்பின் அடையாளமாக’ இடம்பெறத் தொடங்கியது.

அன்று முதல் கிறிஸ்துமஸ் பண்டிகையில் முக்கிய அங்கமாக மாறி விட்டதாகவும், இதனால் ஜெர்மனியே கிறிஸ்துமஸ் மரத்தின் பிறப்பிடம் என்னும் சிறப்புப் பெருமையைப் பெறுவதாகவும் சொல்லப்படுகிறது. இவை ஒருபுறமிருக்க, 15-ம் நூற்றாண்டுகளில் டிசம்பர் 24-ம் நாளை ஆதாம், ஏவாள்தினமாகக் கொண்டாடும் வழக்கம் இருந்தது. விலக்கப்பட்ட மரத்தின் கனியைத் தின்றதால் பாவத்துக்குள் தள்ளப்பட்ட ஏதேன் காலத்தை நினைவுகூரும் விதமாக மரத்தை ஆப்பிள் போன்ற பழங்களால் அலங்கரித்து அந்த நாளைக் கொண்டாடி வந்தார்கள் என்றும், இதுவே பிறகு கிறிஸ்துமஸ் மரமாக மாறியது என்றும் தகவல்கள் உள்ளன.

அதோடு, கிறிஸ்துமஸ் மரத்தின் கிளைகள்சிலுவை யின் அடையாளத்தைக் கொண்டிருப்பது அந்த மரத்தின் சிறப்பம்சம். அதேபோல கிறிஸ்துமஸ் மரத்தின் முக்கோண வடிவம் தந்தை, மகன், தூய ஆவி எனும் இயேசுவின் மூன்று பரிமாணங்களைக் குறிப்பதாகவும், எனவே, இயேசு மனிதம் உருவான நாளை, மரத்தை அலங்கரிப்பதன் மூலம் கொண்டாடுவது அதிக அர்த்தமுடையது என்ற விளக்கங்களும் சொல்லப் படுகின்றன.

அதே சமயம் இங்கிலாந்து அரசி விக்டோரியா அடிக்கடி ஜெர்மனி நாட்டுக்குப் பயணம் செய்வதுண்டு. அவருக்கு ஜெர்மனி நாட்டு இளவரசர் ஆல்பர்ட் உடன் காதல் ஏற்பட்டுள்ளது. திருமணம் செய்து கொண்ட இருவரும் இங்கிலாந்து திரும்பினார்கள். 1841-ல் அரசர் ஆல்பர்ட் ஒரு அலங்காரம் செய்த மரத்தை இங்கிலாந்திலுள்ள விண்ட்ஸர் மாளிகையில் வைத்து விழா கொண்டாடினார். அதுவே கிறிஸ்துமஸ் மரத்தின் இங்கிலாந்து பிரவேசம் என்ற கதையும் உண்டு.

1521-ல் பிரான்ஸ் இளவரசி ஹெலீனாதனது திருமணத்துக்குப்பிறகு ஒரு கிறிஸ்துமஸ்மரத்தை பாரீஸ் நகருக்குகொண்டு வந்து விழா கொண்டாடியதே அந்நாட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் கிறிஸ்துமஸ் மரம் நுழைந்ததன் முதல் நிகழ்வாக தெரிவிக்கப்படுகிறது. ஜெர்மானியர்கள் தான் கிறிஸ்துமஸ் மரத்தைமுதலில் வீடுகளுக்குள்ளும் அனுமதித்தவர்கள். 12-ம் நூற்றாண்டு காலங்களில் கிறிஸ்துமஸ் மரங்கள் தலைகீழாகக் கட்டித் தொங்க விடப்பட்டு விழாக்களில் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தில் ஆரம்ப காலத்தில் சுமார் நான்கடி உயரமான கிறிஸ்துமஸ் மரங்களையே மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

Related Posts

error: Content is protected !!