March 26, 2023

சிபிஐ இணை இயக்குநருக்கே இந்த கதி! – சுப்ரீம் கோர்ட் கொடுத்த ஷாக் பனிஷ்மெண்ட்!

சிபிஐ என்றால் முன்னர் ஏதேதோ விளக்கம் சொல்வார்கள் அதன் தொடர்ச்சியாக தற்போது சிபிஐ என்றால் சின்னாபின்னமாகி போன இடியட்ஸ் என்று கலாய்கிறார்கள். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சிபிஐ இணை இயக்குநர் நாகேஸ்வர ராவ் மற்றும் சிபிஐ சட்ட ஆலோசகர் பாசுரன் ஆகியோர், கோர்ட் அறையின் மூலையில் அமர வைக்கப்பட்ட சம்பவம் ஹாட் டாபிக்-காகி விட்டது!

மோடியின் தலையிட்டால் சிபிஐ இயக்குனர்கள் குறித்த சர்ச்சைகள் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்றதும் அதை அடுத்து சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மா அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக நாகேஸ்வர ராவ் என்பவரை மத்திய அரசு சிபிஐ இயக்குனராக நியமனம் செய்ததும் தெரிந்த விஷயம்தான். அதன்பின் மீண்டும் அலோக்வர்மா நீதிமன்ற உத்தரவால் சிபிஐ இயக்குனர் பொருப்பை ஏற்றதும், அதன் பின்னர் அவரை மத்திய அரசு அதிரடியாக மாற்றியது நாடறிந்ததே.

தற்போது இந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சிபிஐ இயக்குனராக ரிஷிகுமார் சுக்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சிபிஐ இயக்குனராக நாகேஸ்வர ராவ் இருந்தபோது உச்சநீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி பீகார் அரசு இல்ல விவகாரத்தை விசாரணை செய்து வந்த அதிகாரியை மாற்றினார். இதனால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றபோது பீகார் அரசு இல்ல விவகாரத்தை விசாரணை செய்து வந்த அதிகாரியை மாற்றியது தவறுதான் என்றும், அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்தார். ஆனால் தெரிந்தே செய்த தவறுக்கு மன்னிப்பு இல்லை என்று கூறிய நீதிபதிகள் நீதிமன்றம் முடியும்வரை நீதிமன்ற அறையில் இருக்குமாறு அவருக்கு வித்தியாசமான தண்டனை அளித்தனர். நாகேஸ்வரராவுக்கு ஆதரவாக மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் எவ்வளவோ வாதாடியும் நீதிபதிகள் கண்டிப்புக் காட்டினர்.இதனால் 11.45 மணிக்கு அறையின் கடைசி வரிசை இருக்கையில் நாகேஸ்வரராவும், பாசுரனும் தலை கவிழ்ந்த படி அமர வைத்து விட்டனர்.அதுமட்டுமின்றி அவருக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.