மணல் கடத்தல் புகழ் வைகுண்டராஜனுக்கு 3ஆண்டு சிறை ரூ. 5லட்சம் அபராதம்! சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு…!

தென்மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான, விவி மினரல்ஸ் எனப்படும் தாதுமணல் ஏற்றுமதியாளர் வைகுண்டராஜன் மீது, மத்திய சுற்றுச் சூழல் அதிகாரி நீரஜ் கட்ரிக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.இந்த லஞ்சமானது, திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகாவிலுள் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் விவி மினரல்ஸ் ஆலைக்காக சுற்றுச்சூழல் கிளியரன்ஸ் வழங்குவதற்காக கடந்த 2012ம் ஆண்டு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இதுதொடர்பான புகாரில், லஞ்சம் வாங்கிய மத்தியஅரசு அதிகாரி நீரஜ் கட்ரி, லஞ்சம் கொடுத்த வைகுண்டராஜன் மற்றும் லஞ்சம் கொடுக்க உதவியதாக விவி மினரல்ஸ் ஊழியர் சுப்புலட்சுமியும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டனர்.

இந்த வழக்கு கடந்த 2019ம் ஆண்டு சிபிஐ-யால் வழக்கு பதிவு செய்யப்பட்டு, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. வழக்கின் விசாரணை கடந்த ஜனவரி 19ந்தேதி முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, பிப்ரவரி 1ந்தேதி அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, முதல் குற்றவாளியாக நீரஜ் கட்ரியும், இரண்டாவது குற்றவாளியாக வைகுண்டராஜனும்,மூன்றாவது குற்றவாளியாக லஞ்சம் கொடுக்க உதவிய விவி மினரல்ஸ் ஊழியர் சுப்புலட்சுமியும், நான்காவது குற்றவாளியாக வி.வி. மினரல்ஸ் நிறுவனம் என்று அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, தண்டனை விவரம் 22ந்தேதி (இன்று) வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று தண்டனை அறிவிக்கப்பட்டது.  இதில் குற்றம் செய்த வி.வி. மினரல்ஸ் வைகுண்ட ராஜனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. லஞ்சம் கொடுக்க உதவியதாக விவி மினரல்ஸ் ஊழியர் சுப்புலட்சுமிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், முதல் குற்றவாளியான அரசு அதிகாரி நீரஜ் கட்ரிக்கு 5 ஆண்டுகள் சிறையும், ரூ. 5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், வி.வி. மினரல்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 10 லட்சம் அபராதமும் விதித்தது தண்டனை வழங்கப்பட்டுள்ளது