September 20, 2021

டெல்லி சி எம் செகரட்டரியை அரெஸ்ட் செய்தது சி பி ஐ!

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் முதன்மை செயலர் ராஜேந்திர குமாரை சிபிஐ இன்று (திங்கள்) கைது செய்தது. ராஜேந்திரகுமார் டெல்லி அரசின் பல்வேறு பதவிகளில் பணியாற்றி உள்ளார். 2007 முதல் 2014-ம் ஆண்டு வரை அவர் வகித்த பதவிகளில் இருந்தபோது கோடிக்கணக்கான மதிப்புள்ள பணிகளை முறைகேடாக என்டீவர் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளார். இதற்கு சில அதிகாரிகளும் அவருக்கு உடந்தையாக இருந்தனர். ரூ.50 கோடி வரை நடந்துள்ள இந்த ஊழலில் ராஜேந்திரகுமார் தான் மூளையாக செயல்பட்டுள்ளார் என்று கூறுகிறது.

delhi july 4

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் செயலாளர் அலுவலகம் உள்பட தலைமை செயலக வளாகத்தில் பல இடங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவின்படியே தனது அலுவலகத்தில் சி.பி.ஐ. சோதனை நடத்தியதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார்.இதனை மறுத்த சி.பி.ஐ., முதல்வர் அலுவலகத்தில் சோதனை நடத்தவில்லை. முதல்- அமைச்சரின் முதன்மை செயலாளர் ராஜேந்திரகுமார் அலுவலகத்தில் தான் சோதனை நடத்தப்பட்டதாக தெரிவித்தது. இந்த நிலையில் அந்த ராஜேந்திரகுமாரை சி.பி.ஐ. ஊழல் வழக்கில் கைது செய்தது. அவருக்கு உறுதுணையாக இருந்ததாக முதல் மந்திரி அலுவலக துணை செயலர் தருண் ஷர்மா உட்பட மேலும், 4 பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.

சிபிஐ பதிவு செய்த புகாரில் ராஜேந்திர குமார் டெல்லி கல்வித்துறையில் அதிகாரியாக இருந்த போது எண்டவர்ஸ் சிஸ்டம் பிரைவேட் லிமிடட் நிறுவனத்திற்கு 2006-ம் ஆண்டு ரூ.9.5 கோடி பெறுமான டெண்டருக்குச் சாதகமாகச் செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. மேலும், ராஜேந்திர குமாரின் பள்ளித் தோழர் அசோக் குமார் என்பவருடன் கூட்டிணைந்து அவர் இந்த நிறுவனத்தை தொடங்கியுள்ளார் என்று சிபிஐ கூறியுள்ளது. டெல்லி அரசுப்பள்ளிகளுக்கு தேவையான தகவல் தொழில்நுட்ப தீர்வுகள் மற்றும் மென்பொருளை இந்த நிறுவனம் வழங்குவதாக இருந்தது.

ஏற்கனவே மத்திய அரசுக்கும் டெல்லி அரசுக்கும் அடிக்கடி மோதல் நடைபெற்று வரும் வேளையில், 50 கோடி ஊழல் வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நெருக்கமான அதிகாரி கைதாகியுள்ளது டெல்லி அரசியலில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.