September 18, 2021

சென்சார் – பாலிவுட்டில் மட்டும் ஹைடெக்காகிறது! – கொதிப்படைய ரெடியாகும் கோலிவுட் !

கோலிவுட், மல்லுவுட், பாலிவுட் என ஒட்டு , மொத்த திரையுலகில் திருட்டு விசிடி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. விஜய் நடித்த ‘தெறி’ படம் பெங்களூரில் உள்ள ஒரு தியேட்டரில் திருட்டுத்தனமாக பதிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தின் திருட்டு விசிடி சென்சாருக்காக அனுப்பப்பட்ட பிரதியிலிருந்து எடுக்கப்பட்டதாக பரபரப்பானது. சசிகுமார் நடித்த ‘வெற்றிவேல்’ படமும் தணிக்கைக்கு அனுப்பப்பட்ட பிரதியிலிருந்து எடுக்கப்பட்டதாக புகார் எழுந்திருக்கிறது. மேலும் சமீபத்தில் ‘உட்தா பஞ்சாப்’, ‘கிரேட் கிராண்ட் மஸ்தி’ ஆகிய இந்தி திரைப்படங்கள் அதன் ரிலீஸ் தேதிக்கு முன்பாகவே இணைய தளங்களில் வெளியாகின. இதற்கு சிபிஎப்சி தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. தணிக்கை சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த போது, இத்திரைப் படங்கள் சிபிஎப்சி அலுவலர்களால் இணையதளங்களுக்கு கசிய விடப்பட்டதாக கூறப்பட்டது. இதற்கு சிபிஎப்சி அப்போது மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில், இது போன்ற குற்றச்சாட்டுகளை தவிர்க்கவும் இணையதளங்களில் படம் முன்கூட்டியே வெளியாவதை தடுக்கவும் சிபிஎப்சி புதிய யோசனையை முன்வைக்க உள்ளது.

censor jy 14

இது குறித்து சிபிஎப்சி வட்டாரத்தில் விசாரித்த போது, “தணிக்கை சான்றிதழுக்கு விண்ணப்பிக்க, தற்போதுள்ள விதி முறைகளில் மாற்றம் செய்ய இருக்கிறோம். புதிய விதிப்படி, தணிக்கை சான்றிதழ் கோரும் விண்ணப்பத்துடன் திரைப்படத் தின் டிஜிட்டல் பிரதியை பாஸ் வேர்ட் வைத்து அனுப்ப வேண்டும். தணிக்கை குழு உறுப்பினர்கள் திரைப்படத்தை பார்வையிடும் போது, திரைப்படத் தயாரிப்பாளர் சார்பில் ஒருவர் நேரில் வந்து பாஸ்வேர்ட் போட்டு திறக்க வேண் டும். இதனால் படங்கள் ரீலீஸ் ஆவதற்கு முன் அவை வெளியாவ தற்கு எங்கள் அலுவலகம் பொறுப் பாக வாய்ப்பில்லை” என்று தெரிவித்தனர்.இதற்கான உத்தரவு விரைவில் வெளியாக உள்ளது. இது தொடர்பாக சிபிஎப்சி உறுப்பினர்களுடன் அதன் தலைவர் பஹலஜ் நிஹலானி இறுதி ஆலோசனை நடத்த உள்ளார்.

பாஸ்வேர்டு உடன் டிஜிட்டல் பிரதியை அளிக்கும் இந்த புதிய முறையால் திரைப்பட நகலனாது, அதன் தயாரிப்பாளர்கள் வசமே இருப்பது போலாகி விடும். இத்துடன் தணிக்கை செய்யப்பட்ட காட்சிகளையும் அத்திரைப்படம் வெளியாகும் தேதியில் சிபிஎப்சி.யிடம் அளித்தால் போதுமானது என்றும் விதிமுறை வகுக்கப்பட உள்ளது. சில சமயம் தணிக்கை யில் வெட்டப்பட்ட காட்சிகளும் இணையதளங்களில் வெளியாகி விடுவதால் சிபிஎப்சி தன் மீதான புகாரை தவிர்க்க முயல்வதாக கூறப்படுகிறது.

மேற்கண்ட விதிமுறை இந்தி திரைப்படங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனக் கருதப்படுகிறது. காரணம் தமிழ் உட்பட மற்ற மொழித் திரைப்படங்கள் அவற்றின் தயாரிப்பாளர்களால் தனியார் திரையரங்குகளில் தணிக்கை உறுப்பினர்களுக்கு திரையிட்டுக் காண்பிக்கப் படுகின்றன. இதனால் இந்தியை தவிர மற்ற மொழிப் படங்கள் திருடப்படும் வாய்ப்பு குறைவாம். இது ந்டைமுறைக்கு வந்தால் கோலிவுட்டிலும் இம்முறைய அமல் படுத்த வெண்டும் என்று இப்போதே கோஷம் எழ ஆரம்பித்து விட்டது.