காவிரி ;இறுதி தீர்ப்பில் ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியம் இல்லையாம்!- சுப்ரீம் கோர்ட்

காவிரி ;இறுதி தீர்ப்பில் ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியம் இல்லையாம்!- சுப்ரீம் கோர்ட்

காவிரி தொடர்பான இறுதி தீர்ப்பில் ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை குறிப்பிடவில்லை என சுப்ரீம் கோர்ட் விளக்கமளித்துள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

காவிரி நதிநீர் தொடர்பான இறுதி தீர்ப்பை  கடந்த பிப்ரவரி 16-ம் தேதி  சுப்ரீம் கோர்ட் வழங்கியது. அந்த தீர்ப்பில், தமிழகத்திற்கு நீரின் அளவை குறைத்தும், 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதிலும் தமிழகம் கர்நாடகம் இடையே நீடித்து வரும் காவிரி நதிநீர்ப் பங்கீட்டிற்கு காவிரி மேலாண்மை வாரியம் தீர்வாக பார்க்கப்படுகிறது. மத்திய நீர்ப்பாசனத் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய இந்த மேலாண்மை வாரியத்திற்கு ஒரு முழு நேரத் தலைவரையும் இரண்டு முழு நேர உறுப்பினர்களையும் மத்திய அரசு நியமிக்க வேண்டும்.

காவிரி நதி நீரை பங்கிட்டுக்கொள்ளும் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் தலா ஒரு உறுப்பினரை நியமிக்க வேண்டும். மேலாண்மை வாரியத்தில் விவாதிக்கப்பட்டு எடுக்கப்படும் எந்த ஒரு முடிவும் பெரும்பான்மை அடிப்படையிலானது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்ட நொடியிலிருந்து தமிழகத்தின் கீழ்பவானி, அமராவதி, மேட்டூர், கர்நாடகாவின் ஹேமாவதி, ஹேரங்கி, கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் கேரளாவின் பாணாசுரசாகர் ஆகிய அணைகள் காவிரி மேலாண்மை வாரியத்தின் ஒருங்கிணைந்த வழிகாட்டுதலின்படியே சம்பந்தப்பட்ட மாநில அரசுகளால் இயக்கப்பட வேண்டும்.

மேலாண்மை வாரிய உறுப்பினர்கள் விரும்பினால் எந்த ஒரு அணை, நீர்த்தேக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்ய முடியும். மேலாண்மை வாரியத்தின் பணிகளுக்கு சம்பந்தப்பட்ட மாநிலங்கள் ஒத்துழைக்க மறுத்தால் அவற்றின் மீது மத்திய அரசின் உதவியை கேட்க முடியும்.

இதனையடுத்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் என தமிழகத்தில் கோரிக்கை வலுத்து வந்தன. ஆனால் மத்திய அரசு மௌனம் சாதித்து வந்தது. அதேசமயம் கர்நாடகா தரப்பில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என கூறவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் விதித்த 6 வார கால கெடு முடிவடைவதற்கு முதல்நாள் தீர்ப்பில் இடம்பெற்றுள்ள ஸ்கீம் என்பதற்கு விளக்கம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டை அணுக மத்திய அரசு முடிவு செய்தது. அதன் படி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனுவையும் தாக்கல் செய்துள்ளது. அதேபோல், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை செயல்படுத்தாத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

கூடவே இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்துக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு சார்பில் முறையிடப்பட்டது. இது தொடர்பான விசாரணையின் போது, வரும் 9-ம் தேதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது. அப்போது, தீர்ப்பில் இடம்பெற்றுள்ள சாராம்சம் பற்றி தெரிவித்த நீதிமன்றம், காவிரி தொடர்பான இறுதி தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என கூறவில்லை. ஸ்கீம் (செயல் திட்டம்) என்றே குறிப்பிட்டோம் என்றது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த பதில் தமிழகத்திற்கு பின்னடைவையும், ஏமாற்றத்தையும் அளித்திருப்பதாக அரசியல் நோக்கர்கள், மூத்த பத்திரிகையாளர்கள் கூறி வருகின்றனர். அதே சமயம் காவிரி நீரில் தமிழகத்துக்கு உரிய பங்கு கிடைக்கும் என்று தலைமை நீதிபதி உறுதியளித்துள்ளார். காவிரி தண்ணீர் பிரச்சனையை நாங்கள் தீர்த்து வைப்போம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். தமிழ்நாடு விவசாயிகளின் பிரச்சனையை உணர்ந்து இருப்பதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!