October 21, 2021

காவிரி உயர்நிலை தொழில்நுட்பக் குழு ஆய்வறிக்கை ; முக்கிய அம்சங்கள்

காவிரி விவகாரத்தில் தமிழகம் மற்றும் கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களிலும் ஆய்வு மேற்கொண்ட அறிக்கையை உயர்மட்ட தொழில்நுட்பக்குழு இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. ஜி.எஸ்.ஜா. தலைமையிலான குழு அண்மையில் கர்நாடகா மற்றும் தமிழகத்தில் ஆய்வு நடத்தியது. காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணக்கு வர உள்ளது. இந்நிலையில் உயர்மட்டக் குழுவின் அறிக்கை இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

cauvery oct 18

அந்த அறிக்கையில், தமிழகம் மற்றும் கர்நாடக விவசாயிகள் பேததிய மழையின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவிலும் தண்ணீர் இன்றி பயிர்கள் காய்ந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் நிலத்தடி நீர் ஆயிரம் அடிக்கு கீழே சென்று விட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் கால்நடைகளுக்கு நீர் இல்லை, விவசாய தொழிலாளர்களுக்கு வேலை இல்லை. மேலும் வடகிழக்கு பருவமழை நீரை சேமிக்க தமிழக கடலோர மாவட்டங்களில் ஏரி, குளங்களை அமைக்க வேண்டும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 மேலும் அந்த அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:–

தேவையான தண்ணீர் கிடைக்காததால் இரு மாநிலங்களிலும் விவசாய, மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் மாண்டியா மாவட்டத்தில் தற்கொலைகள் நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது. காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழக நலனை கர்நாடகாவும், கர்நாடகாவின் நலனை தமிழகம் மற்றும் புதுச்சேரியும் மதிக்க வேண்டும். இது தொடர்பாக அந்தந்த மாநில மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

நவீன வழிமுறைகள்

நீர்வரத்து, வானிலை முன்னறிவிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு சரியான முறையில் பாசன வழிமுறைகளை மேற்கொள்வதால் 50 சதவீத தண்ணீர் தட்டுப்பாட்டை சரிசெய்யலாம். தற்போது நடைமுறையில் உள்ள நீர் பாசன முறை பழமையானதாக இருப்பதால் தண்ணீர் அதிக அளவில் செலவாகிறது. எனவே குறைந்த அளவு தண்ணீரில் அதிக அளவு பயன்பெறும் வகையில் நவீன வழிமுறைகளை அறிமுகப்படுத்த வேண்டும். நேரடியாக நிலத்துக்கு தண்ணீரை திறந்து விடுவதை விட குழாய் மூலம் பாசனத்துக்கு திறந்து விடுவது சிறந்தது.

தமிழக கடலோர மாவட்டங்களில் உள்ள நிலத்தடி நீர் உப்பாக மாறி உள்ளதால் குடிநீருக்கும், சாகுபடிக்கும் டெல்டா பகுதி மக்கள் அதனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே காவிரி நீர் மட்டுமே அவர்களுக்கு அடிப்படை ஆதாரமாகும்.

தமிழ்நாட்டில் முழு சாகுபடி காலத்திலும் விவசாய நிலங்களுக்கு தேவையான அளவு தண்ணீர் தரப்பட்டால் மட்டுமே தமிழக அரசால் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் விவசாயம் தொடர்பான மானியங்கள், சலுகைகள் முழு பயனை அளிக்கும். குடிநீர் தேவைகளுக்கு மேம்படுத்தப்பட்ட வழிமுறைகளை கையாள வேண்டியது அவசியம்.

நீரின் அளவை வெளிப்படைத்தன்மையுடன் அளவிடும் வகையில் தானியங்கி நீர்மானிகள் அமைத்து நீர் வரத்து, வெளியேற்றம் ஆகியவை இணையம் வழியாக கண்காணிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டிய தேவை உள்ளது. பயிர் சீரமைப்பு மற்றும் சந்தைக்கு ஏற்ப மாறுபட்ட பயிரிடுதல் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் 12 லட்சம் ஏக்கர் சாகுபடி மற்றும் குடிநீர் பயன்பாட்டுக்காக 160 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது. இது தவிர புதுச்சேரி மாநிலத்துக்கு தமிழகம் வழங்க வேண்டிய தண்ணீரின் அளவு 3 டி.எம்.சி. ஆகும். அந்த வகையில் தமிழகத்துக்கு மொத்தம் 163 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் அடுத்த ஆண்டு மே மாதம் இறுதி வரை தமிழகத்துக்கு 143.18 டி.எம்.சி. அளவுக்கு தான் தண்ணீர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போல் கர்நாடகத்துக்கு அடுத்து ஆண்டு மே மாதம் வரை சாகுபடி மற்றும் குடிநீர் தேவைக்காக 59.48 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மத்திய அரசின் மனு, நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடகம் தாக்கல் செய்த மனு, தமிழகம், புதுச்சேரி, கேரள மாநிலங்களின் சார்பில் விளக்கம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வருகிறது.