May 17, 2021

ரொக்கமில்லா பொருளாதாரம் சாத்தியமில்லை, இது நடக்காது.!- ஆடிட்டர் குருமூர்த்தி சொல்கிறார்

ஒரே இரவில் ரொக்கமில்லா பொருளாதாரம் சாத்தியமில்லை, இது நடக்காது. அtதிலும் இந்தியாவில் தற்போதைய நிலையில் ரொக்கமில்லா பொருளாதாரம் சாத்தியமில்லை என்று ஆடிட்டரும் பத்திரிக்கையாளருமான எஸ்.குருமூர்த்தி தெரிவித்தார்.

audi nov 30

சென்னையில் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நானி பால்கிவாலா நினைவுச் சொற்பொழிவில் பங்கேற்று, அவர் மேலும் பேசிய போது, “அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலேயே ரொக்கமில்லா பொருளாதாரம் என்பது இன்னும் மிகப் பெரிய கனவு. ஒரே இரவில் ரொக்கமில்லா பொருளாதாரம் சாத்தியமில்லை, இது நடக்காது. எந்த அரசாங்கமும் இதனைச் செய்ய முடியாது.இதற்கென்று கொள்கை, கோட்பாடுகளை ஆகியவற்றை தனியாக உருவாக்கிய பின்பே ரொக்கமில்லா பொருளாதா ரத்தைக் கொண்டு வர முடியும். அரசு மேற்கொள்ளும் எந்தவொரு நடவடிக்கைக்கும் நல்லது, கெட்டது என இரண்டுமே இருக்கும். ஆனால், நாம் அதில் நல்லது அதிகம் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். பண மதிப்பு இழப்பை (ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாத அறிவிப்பு) நான் அப்படித்தான் பார்க்கிறேன்.

பண மதிப்பு இழப்பு பொருளாதார பேரழிவைத் தரும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அண்மையில் பேசினார். உண்மையிலேயே பொருளாதாரப் பேரழிவு அவர் பிரதமராயிருந்த 2004-14-ஆம் ஆண்டுகளில்தான் நடந்தது. அப்போதுதான் பல்வேறு தவறான பொருளாதார கொள்கை முடிவுகளை காங்கிரஸ் கட்சி எடுத்தது. இந்தக் காலக்கட்டத்தில்தான் 22 லட்சம் பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைத்தது. அதற்கும் முந்தைய பாஜக அரசின்போது 1998-2004-ஆம் ஆண்டு வரை 60 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டது.

மேலும் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ரூ.400 கோடி கருப்பு பணத்துக்காக பல லட்சம் கோடி ரூபாய் செலவு செய்து புதிய நோட்டுகளை அடிப்பதா என கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், ரூ.400 கோடி கள்ளப் பணத்தால், அது புழங்கப்படுவதால் ஏற்படும் தீவிரவாத அச்சுறுத்தலால் எத்தனை உயிர்கள் பலியாகின்றன, அரசுக்குச் சொந்தமான பொருள்களும் சேதமாவதால் எத்தனை கோடி நமக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டும்.
பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கள்ளப்பணம் நம் நாட்டில் பயங்கரவாதத்தை வளர்க்கிறது என்பதற்கு எல்லா ஆதாரங்களும் வெளிவந்திருக்கின்றன. தீவிரவாதிகள் மூலமாக கொண்டு வரப்பட்ட கள்ளப்பணம் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்தால் நாட்டுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.6.60 லட்சம் கோடி இழப்பு என்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்திய பொருளாதாரத்தை சிதைக்கும் நோக்கத்துடன் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு புழக்கத்தில் விட்டுள்ள நமது 500, 1000 ரூபாய் நோட்டுகள் வெறும் காகிதங்களாகிவிட்டன. காஷ்மீரில் ராணுவத்தினர் மீது கற்கள் எறியப்படுவதில்லை, அமைதியாக இருக்கிறது. மக்கள் அங்கு கலவரத்தில் ஈடுபடாமல் தங்கள் ரூபாய்களை மாற்ற வரிசையில் நிற்கிறார்கள்.

இந்தியாவில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளில் ரூ.14 லட்சம் கோடி 500, 1000 ரூபாய் நோட்டுகளாகவே உள்ளன. இவற்றில் சுமார் ரூ.4 லட்சம் கோடி கருப்புப் பணமாக பதுக்கப்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நடவடிக்கையின் மூலம் இந்த ரூ.4 லட்சம் கோடி அரசின் கணக்கில் வரவு வைக்கப்படும். இதை பினாமி பெயரில் யாராவது வைத்தால்கூட அரசு கண்டுபிடிக்க முடியும்.மக்கள் தங்களிடம் உள்ள பணத்தை முதலீடு செய்வதால் வங்கிகளின் பண இருப்பு அதிகரிக்கும். இதன்மூலம் குறு, சிறு, நடுத்தரத் தொழில்களில் வங்கிகள் செய்யும் முதலீடுகள் அதிகரிக்கும். தொழில்முனைவோருக்கு கிடைக்கும் கடன் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சி அதிகமாகி வேலைவாய்ப்புகள் பெருகும். எனவே, இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் என்பது தவறானது. மனை வர்த்தகத்திலும், தங்கத்திலும் கருப்புப் பணம் முடக்கப்படுவது வெகுவாகக் குறையும்.

லஞ்சம், ஊழலும் குறையும். ஆனால், அடுத்த 6 மாதங்களுக்கு பொருளாதாரத்தில் ஒரு சிறு வீழ்ச்சி ஏற்படவே செய்யும். முக்கியமாக, சிறு, குறு நிறுவனங்களின் பணப் பிரச்சனையை தீர்ப்பதே இப்போதைக்கு அரசின் முன் இருக்கும் பெரும் சவால். இந்த ரூபாய் மதிப்பிழப்பு விஷயத்தை 5 ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்க வேண்டும். இப்போதும் நாம் செய்யாவிட்டால் இதனை எப்போதுமே செய்திருக்க முடியாது என்றார் எஸ்.குருமூர்த்தி. நிகழச்சியில், சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் முதன்மையர் எஸ்.வைத்ய சுப்ரமணியம், டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி எஸ்.மகாலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.