திரித்துக் கூறும் குயுக்திகளால் பத்திரிக்கை சுதந்திரத்திற்கு ஆபத்து!

தூங்குபவர்களை எழுப்ப முடியும்; தூங்குகிறவர்கள் போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்று ஒரு தமிழ்ப் பழமொழி உண்டு. இதில் முதல் பிரிவைச் சேர்ந்தவர்களுக்காகத்தான் இந்தக் கட்டுரை! அண்மையில் நான் வரைந்த இரண்டு கார்ட்டூன்கள் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. அதில் முதல் கார்ட்டூனுக்கு வருவோம்! ‘பேரறிஞர் அண்ணா அவர்களின் திரு வுருவச் சிலையின் தலையை மறைத்து வைரஸ் சித்திரத்தை வரைந்து கொச்சைப்படுத்தி இருக்கிறேன் நான்’ என்று திமுக தலைவர் ஸ்டாலின் தினத்தந்தி நாளிதழ் அதிபருக்கு கடிதம் எழுதி தனது கண்டனத்தைத் தெரிவித்து இருந்தார்!

கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அதில் சிறிது நகைச்சுவை உணர்வைக் கலந்து கொடுப்பதற்கும் எனக்கு ஒரு சிலை தேவைப்பட்டது. அவ்வளவுதான்! அதைத்தான் அந்த கார்ட்டூனில் நான் வரைந்து இருந்தேன். பொதுவாகவே உலகிலுள்ள தலைவர்களின் சிலைகள் பெரும்பாலும் கையை உயர்த்திக் கொண்டு அல்லது நீட்டிக்கொண்டு இருப்பது போல்தான் அமைக்கப்படும். அது தலைவர்களின் ஆளுமையை காட்டுவதற்காகவா அல்லது சிலையின் அழகைக் கூட்டுவதற்காகவா என்பது எனக்கு தெரியாது. இக்கட்டுரையோடு வெளிவந்துள்ள புகைப்படங்களைப் பார்த்தால் ( படங்கள் அல்ல பாடங்கள்! ) உங்களுக்கு நன்றாகவே புரியும். அப்படி ஒரு சிலையைத்தான் நான் எனது கார்ட்டூனில் பயன்படுத்தி இருந்தேன்! தமிழகம் என்பதால் அந்தச் சிலைக்கு வேட்டி துண்டு அணிவித்திருந்தேன். அவ்வளவே! அந்தச் சிலைக்குள் அண்ணா எப்படிப் புகுந்தார் என்பது எனக்கு இன்றும் புரியாத புதிர்!

தி.க. விலிருந்து பிரிந்து தி.மு.க. என்ற கட்சியை அண்ணா தோற்றுவித்த போது, மத நம்பிக்கை களுக்கு எதிரான பெரியாரின் திராவிடர் கழகத்தின் கோஷங்கள் பெரிதும் தடையாக இருந்தது. அது தி.மு.க.வின் அரசியல் வளர்ச்சிக்கு பேராபத்தாக முடியும் என்பதை உணர்ந்த காரணத்தினால் தி.க.வின் இறைமறுப்புக் கொள்கைக்கு எதிராக ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று புதிய கொள்கை விளக்கம் ஒன்றை அண்ணா கொடுத்தார். ஏனென்றால் அன்றைய தி.க. இறைமறுப்புக் கொள்கை என்பது அனைத்து மதங்களின் நம்பிக்கைகளை யும் ஏளனம் செய்தது! அவற்றை சுவர்களில் எழுதியது! பிரச்சாரங்களில் பேசியது! இது தமிழக அரசியலை தி.க.வின் வரலாற்றை சுமார் அரை நூற்றாண்டுக்கும் மேலாக கவனித்து வருபவர் களுக்கு நன்றாகவே தெரியும்! பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சி காரணமாக காலப்போக்கில் அது இந்து மத உணர்வுகளை மட்டுமே காயப்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டது!

எனவே அவரின் இந்தப் புதிய சித்தாந்தத்தை விளக்கும் வண்ணமாக அண்ணா தனது வலது கையை உயர்த்தி ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பதைக் குறிக்கும் வண்ணமாக தனது ஆள்காட்டி விரலை ஒன்று என்பதுபோல் காட்டுவதாகஉருவாக்கப்பட்டதுதான் அந்தச் சிலை! எம்ஜிஆரால் நிறுவப்பட்டது. கிட்டத்தட்ட அது கிரிக்கெட் ஆட்டத்தில் அம்பயர் ஒரு பேட்ஸ் மேனுக்கு அவுட் கொடுப்பது போல தனது வலது கையை மேலே உயர்த்தி ஆள்காட்டி விரலைக் காண்பித்து இருக்கும்!

நான் சிலையில் வரைந்து இருந்தது இடது கை. அதுவும் ஏதோ ஒரு திசையை காட்டிக் கொண்டு இருப்பது போல் இருக்கும். அண்ணா சிலையில் உள்ளதுபோல வானத்தை சுட்டிக் காட்டுவது போல் இருக்காது! மேலும் நான் வரைந்த கார்ட்டூனில் சிலையில் உள்ள துண்டு இடது தோளில் இருக்கும்! ஆனால் நிஜமான அண்ணா சிலையில் துண்டு அவரது வலது தோளில் தான் இருக்கும்! பகுத்தறிவு இதையெல்லாம் ஆராயாமல் விட்டது ஏனோ!? அவர்களின் நோக்கம் ஒன்றுதான்!

இம்மாதம் 14ஆம் தேதி தினத்தந்தி நாளிதழில் வந்த ஒரு புகைப்படத்தையும் இக்கட்டுரை உடன் இணைத்துள்ளேன். படக் குறிப்பு உங்களுக்கு விஷயத்தை உணர்த்தும்! மெக்சிகோவில் விழிப்புணர்வுக்காக இதை பயன்படுத்தி இருக்கிறார்கள்! இப்படி ஒரு நிகழ்வு நம் நாட்டில் நிகழ்ந்திருந்தால் கற்பனை கூட செய்ய முடியாத சேதங்களை ஒரு பெரிய கூட்டம் அரங் கேற்றி இருக்கும்! ஆனால் படத்தைப் பார்த்தால் ஒன்று புரிகிறது… மெக்சிகோ போன்ற மேலை நாடுகளில் பகுத்தறிவை போதிக்கும் தலைவர்கள் இல்லை! பகுத்தறிவு இன்னும் பிறக்க கூடவில்லை என்பதையே காட்டுகிறது!

ஏதோ ஒரு சிலையை வரைந்து விழிப்புணர்வை ஊட்டுவதற்காக அதன் தலையில் கொரோனாவை வரைந்ததை குற்றமென்று பார்ப்பவர்கள் தங்களது உயிரையும் பணயம் வைத்து, அதன் மூலம் தங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தையும் பணயம் வைத்து, சமூகத்தைக் காப்பதிலும் அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் பல முயற்சிகள் செய்து வரும் தமிழக காவல்துறையினர் பலர், தங்களது முகங்களில் கொரோனா போன்ற மாஸ்க்-கைப் போட்டு மூடி மறைத்து விழிப்புணர்வை ஊட்டி வருகிறார்களே..! அவர்கள் என்ன கோமாளித்தனமா செய்கிறார்கள்? அதையே ஒரு சிலை மூலம் செய்தால் என்ன தவறு? அதுவும் ஒரு கார்ட்டூன் மூலமாக!

‘கொரோனா முன்னேற்றக் கழகம்’ என்று இந்தக் கார்ட்டூனில் குறிப்பிட்டிருந்தேன். பத்திரிகை களில் தொடர்ச்சியாக வந்த புகைப்படங்கள் தான் இத்தகைய கார்ட்டூனை நான் வரைவ தற்குக் காரணமாக இருந்தது. வழக்கம்போல் எனது பணியைத்தான் நான் செய்தேன். சமூக இடைவெளியை நாம் பின்பற்றாவிட்டால், கொரோனா நோய்த் தொற்று குறைவதற்குப் பதிலாக முன்னேறுவதற்கு தான் வாய்ப்பு அதிகம் என்பதை மனத்தில் கொண்டு கொரோனா முன்னேற்றக் கழகம் என்று குறிப்பிட்டிருந்தேன்.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பித்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மறு மலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வரிசையில் இதோ சமீபத்தில் தோன்றிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வரை தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரைக் கொண்டதுதான். ஆனால் நான் குறிப்பிட்டது திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெயரை திரித்து கார்ட்டூன் போட்டதாக அதன் தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறார். மற்ற எந்தக் கட்சிக்குமே தோன்றாத இந்த சந்தேகம் ஸ்டாலினுக்கு மட்டும் எப்படி வந்தது? அல்லது இவ்விஷயத்தில் அவருக்கு ஏதேனும் குற்ற உணர்ச்சி இருக்கிறதா? எனக்கே புரியவில்லை!

ஆக மொத்தம் இரண்டு கார்ட்டூன்களிலுமே எனக்கு எள்ளளவும் எந்த உள்நோக்கமும் இல்லை. திரித்துக் கூறியது திமுக.,வும் அவர்களை அண்டி வாழும் சில பகுத்தறிவுவாதிகளும்தான்!

எனது 21 வயதில் கார்ட்டூன்கள் போட ஆரம்பித்தேன். துக்ளக், சாவி, கல்கி, நியூஸ் டுடே, கதிரவன், இதயம் பேசுகிறது, தினமணி… என பல்வேறு பத்திரிகைகளில் இதுவரை 17,000 கார்ட்டூன்கள் வரைந்து இருக்கிறேன். சுமார் 28 ஆண்டுகள் பணிக்குப் பிறகு சிறிது காலம் ஓய்வு எனக்கு தேவைப்பட்டது. பல வருடங்கள் தள்ளிப் போட்டு இருந்த எனது சொந்தப் பணிகள் பலவற்றை செய்து முடிக்க வேண்டும் என்பதும் அதற்குக் காரணம்! ஆனால் சுமார் 400 கோடி மக்களை உலகம் முழுக்க வீட்டில் முடங்கி இருக்கச் செய்திருக்கிறது கொரோனா கிருமி! மனிதகுல வரலாற்றில் இதற்கு முன் இவ்வாறு நடந்தது இல்லை! மக்கள் அனைவருமே ஒருவித மன இறுக்கத்தில் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள்! ஒருபுறம் வருமான இழப்பு; மறுபுறம் இந்த நோயின் பேராபத்து. இரண்டுக்கும் நடுவில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்!
விரைவில் இதிலிருந்து வெளியே வரவேண்டும்! இந்நோய் உலகைவிட்டு விலக வேண்டும்! அதற்கான விழிப்புணர்வை எனது கார்ட்டூன்கள் மூலம் மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்! இந்த நேரத்தில் நான் எனது பணியைச் செய்யாமல் இருக்கக் கூடாது என்றுதான் விழிப்புணர்வு சம்பந்தமான கார்ட்டூன்கள் மட்டும் போடலாம் என்று ஆரம்பித்தேன்! இது எத்தனை பேரைச் சென்றடைவது சாத்தியமோ அத்தனை பேரைச் சென்றடைவது நல்லது என்று நினைத்ததால் தினத்தந்தி நாளிதழ் மற்றும் டி.வி. இல் எனது கார்ட்டூன்களை கொண்டுவர முயற்சி செய்தேன்! சுமார் இரண்டு வார காலம் பெரும் வரவேற்புடன் வந்தது!

இன்று நின்று போனது தினத்தந்தி நிறுவனத்திற்கும் சரி, எனக்கும் சரி… எந்த நஷ்டமும் இல்லை! ஆனால் திரித்துக் கூறும் குயுக்திகளால் பத்திரிக்கை சுதந்திரத்திற்கு பெரும் ஆபத்து வந்திருக்கிறது! இது நல்லதல்ல! இனி ஒவ்வொரு கட்சிகளும் இத்தகைய பாணியைக் கையாள ஆரம்பித்தால் ஒரே ஒரு விஷக் கிருமியால் உலகமே இன்று ஊரடங்கி இருப்பதுபோல், ஊடகங்களும் விரைவில் அடங்கிப் போகும்

கார்டூனிஸ்ட் மதி

 

aanthai

Recent Posts

அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் ‘ரத்தம்’ பட டீசர்!

விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' பட டீசர் பார்வையாளர்களிடையே, படம் குறித்த எதிர்பார்ப்புகளைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது. பாக்ஸ் ஆபிஸில் நடிகர்…

4 hours ago

சங்கராந்தியன்று இரட்டைப் பரிசு வழங்கும் ஸ்ருதிஹாசன்!

'உலகநாயகன்' கமல்ஹாசனின் வாரிசாக இருந்தாலும், தன்னுடைய தனித்துவமான திறமையினால் திரை உலகில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசனின்…

9 hours ago

அமீரின் உயிர் தமிழுக்கு படத்தை சுரேஷ் காமாட்சி ரிலீஸ் செய்கிறார்!

மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து ஜீவி-2 படத்தை தயாரித்து வெளியிட்ட சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரடக்ஷன் நிறுவனம்…

10 hours ago

நல்ல கலை இயக்கம் என்பது வெளியே தெரியாமல் இருப்பதுதான்: கலை இயக்குநர் வீரசமர்!

இயக்குநர் ஷங்கரின் தயாரிப்பில் 'காதல்' திரைப்படத்திலிருந்து சுமார் 30 படங்களுக்குக் கலை இயக்குநராகப் பணிபுரிந்தவர் வீரசமர் .இவர் 'வெயில்', 'பூ',…

10 hours ago

கனெக்ட் படத்தில் என்ன ஸ்பெஷல்? – டைரக்டர் அஸ்வின் சரவணன் பகிர்ந்தவை!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் த்ரில்லர் படங்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் எடுக்கப்பட்ட திரைப்படம்…

1 day ago

ஆப்பிள் நிறுவனம் சீனாவில் இருந்து வெளியேற திட்டம்?

ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் சீனாவில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சீனாவில் கொரோனா பரவலால் கடும் கட்டுப்பாடுகள்…

2 days ago

This website uses cookies.