கொரோனா ஊரடங்கால் ஸ்மார்ட் போன் சேல்ஸ் கூட அவுட்!

கொரோனா ஊரடங்கால் ஸ்மார்ட் போன் சேல்ஸ் கூட அவுட்!

தொடரும் கொரோனா தொற்று பரவலும், அதன் காரணமாக நாடு முடக்கப்பட்டதாலும் ஸ்மார்ட்போன் விற்பனையாளர்கள், மிகவும் சவாலான ஒரு சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். ஒருபுறம், உற்பத்தி முற்றாக நிறுத்தப்பட்டது. மறுபுறம், தேவை கணிசமாக குறைந்து விட்டது. இதற்கிடையே, ஆன்லைன் மற்றும் ஸ்டோர்கள் மூலமான விற்பனையும் பல இடங்களில் தடைசெய்யப்பட்டுவிட்ட நிலையில் இந்தியாவில் ஸ்மாட்போன் விற்பனை ஜூன் காலாண்டில் 1.73 கோடியாக குறைந்துள்ளது என கேனலிஸ் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் வகுப்புகள், ஒர்க் ஃப்ரம் ஹோம் என்று ஆன நிலையில் கூட இவ்வளவு பெரிய சரிவென்பது அதிர்வலைய ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கேனலிஸ் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல் இதுதான்:

கோவைட்-19 நோய்த்தொற்றை கட்டுப்படுத்த நாடு தழுவிய அளவில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் ஸ்மார்ட்போன் விற்பனை முன்னெப்போதும் கண்டிராத வகையில் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. இதன் எதிரொலியாக, ஜூன் காலாண்டில் இந்திய சந்தைகளில் ஸ்மார்ட் போன் விற்பனை முந்தைய ஆண்டின் காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 48 சதவீதம் சரிவடைந்து 1.73 கோடியானது.

பொது முடக்கத்தால் ஜூன் காலாண்டின் முற்பகுதியில் ஜியோமி, ஓப்போ நிறுவனங்களின் உள்நாட்டு உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டது. மதிப்பீட்டு காலாண்டில் முன்னணி 10 நிறுவனங்களில் ஆப்பிள் நிறுவனம் மட்டுமே குறைந்த அளவு பாதிப்பை எதிா்கொண்டது. 30.9 சதவீத சந்தை பங்களிப்பைக் கொண்டு முதலிடத்தில் உள்ள ஜியோமி நிறுவனத்தின் ஸ்மாா்ட்போன் விற்பனை 53 லட்சமாக இருந்தது.

இதைத் தொடா்ந்து விவோ நிறுவனத்தின் ஸ்மாா்ட்போன் விற்பனை 37 லட்சமாகவும், சந்தை பங்களிப்பு 21.3 சதவீதமாகவும் காணப்பட்டது. சாம்சங் விற்பனை 29 லட்சமாகவும், சந்தை பங்களிப்பு 16.8 சதவீதமாகவும் இருந்தது. ஜூன் காலாண்டில் ஓப்போ நிறுவனம் 22 லட்சம் ஸ்மாா்ட்போன்களை விற்பனை செய்து 12.9 சதவீத சந்தை பங்களிப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

ரியல்மீ நிறுவனம் 17 லட்சம் ஸ்மாா்ட்போன்களை விற்பனை செய்ததன் மூலம் அதன் சந்தை பங்களிப்பு 10 சதவீதமாக இருந்தது என கேனலிஸ் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!