December 4, 2021

கோழிக் கறியா – எச்சரிக்கை! – இது கனடா செய்தி!

“பிராய்லர் கோழிகள் 40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்துவிடுகிறது. கோழிகளை வளர்ப்பதற்கு 12 விதமான கெமிக்கல்ஸ் அதற்கு கொடுக்கப்படும் உணவோடு கலந்து கொடுக்கப் படுகிறது. கோழிகளுக்கு நோய்கள் வரக்கூடாது என்பதற்காக அதிகளவு ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் கோழிகளுக்கு வரும் நோயை குணப்படுத்த முடியாமல் போவதோடு, அந்த இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று முன்னர் நம் நாட்டில் பரவிய செய்தி நினைவிருக்கும். அது போல் கோழிக்கறி மற்றும் வான்கோழி போன்ற மாமிச உணவு உண்பவர்களுக்கு கனடா சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்நாட்டில் ஆறு கனடா மாகாணங்களில் சால்மோனெல்லா என்ற நோய்க்கிருமியின் பாதிப்பு கண்டறியப் பட்டுள்ளது. இந்தநிலையிலேயே குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கனேடிய சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது. இதுவரை கனடாவின் ஆறு மாகாணங்களில் 63 பேருக்கு குறித்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள நிலையிலும் எங்கிருந்து இந்த நோய்த்தொற்று பரவியது என்பது கண்டறியப்படவில்லை.

மேற்கு அட்லாண்டிக் பகுதியிலுள்ள அனைத்து மாகாணங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ள கனடா சுகாதாரத்துறை, ஒவ்வொரு மாகாணத்திலும் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தையும் வெளியிட்டுள்ளது.

இதற்கமைய பிரிட்டிஷ் கொலம்பியாவில் 23 பேரும், ஆல்பேர்ட்டாவில் 10 பேரும், சாஸ்கட்ச்சேவன் மாகாணத்தில் 8 பேரும், மனித்தோபாவில் 10 பேரும், ஒன்ராறியோவில் 10 பேரும், கியூபெக்கில் 2 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், நோய்த்தொற்றைத் தவிர்ப்பதற்காக சுகாதாரத்துறை சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.

தினமும் உணவு சமைக்கும்போது சுகாதாரமாக உணவு சமைப்பதை உறுதி செய்து கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் உணவை சமைப்பதற்குமுன் வெதுவெதுப்பான நீரைக்கொண்டு கைகளை குறைந்தது 20 வினாடிகள் கழுவுமாறும், கோழி, மீன், பிற மாமிசம், நண்டு, இறால் போன்ற உணவு வகைகள் மற்றும் முட்டை போன்றவற்றை பச்சையாகவோ முழுவதும் வேக வைக்காமலோ உண்ண வேண்டாம் எனவும் சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.