வங்கிகளில் சேமித்துள்ள பணத்தை எடுக்க முடியாதா?

வங்கிகளில் சேமித்துள்ள பணத்தை எடுக்க முடியாதா?

வங்கிகளில் டெபாஸிட் பண்ணிய பணத்தை நீங்கள் நினைத்த நேரத்தில் எடுக்க முடியாதாமே?

விஷயத்திற்குப் போகும் முன்னர் சில முன் குறிப்புகள்.

1) இப்படியான செய்திகளைச் சொல்பவர்களிடம், டெப்பாசிட் பண்ணிய பணத்தை எப்போதும் எடுக்க முடியாதா? இல்லை ஏதேனும் காரணத்தினால் மட்டும் எடுக்க முடியாதா என்று கேட்டீர்களா?

2) இது வரை நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளில் எத்தனை திவாலாகி இருக்கின்றன என்று தெரியுமா?

3) யோக்கியர்களோ, அயோக்கியர்களோ யாராவது இன்னும் ஒன்னரை வருடத்தில் தேர்தல் வரும் நேரத்தில் மக்களுக்கு எதிரான ஒரு திட்டத்தைக் கொண்டு வருவார்களா?

இப்ப செய்திக்குப் போவோம்!

வங்கிகளுக்கு ஏற்கனவே ஆர்.பி.ஐ என்ற ஒழுங்குமுறை ஆணையம் இருக்கிறது இல்லையா? இப்ப அவர்களுக்கும் மேலே ஒரு அமைப்பை அரசாங்கம் உருவாக்கியிருக்கிறது. “FRDI – Financial Resolution and Deposit Insurance“ மசோதாவின் படி புதிய “நிதித் தீர்வாணையம்” நிறுவுகிறது. இது ஆரம்பித்ததால் தான் இத்தனை பிரச்சினை.

இந்த நிதித் தீர்வாணையத்தின் வேலை என்னவெனில், இந்த ஆர்.பி.ஐ சரியா வேலை பார்க்கிறதா என்று கண்காணிப்பது மட்டுமன்றி, தானே இறங்கியும் ஒவ்வொரு வங்கியின் நிர்வாகத்தைக் கேள்வி கேட்க முடியும். ஒழுங்குபடுத்த விரும்பினால் தாராளமாக ஒழுங்குபடுத்திக் கொள்ள முடியும். இப்பொழுதைய மசோதாவின் முக்கிய அம்சம் இது தான். இதைச் சுற்றித் தான் இப்பொழுதைய யூகங்களும் பயமுறுத்தல்களும் ஓடிக் கொண்டிருக்கிறது.

டெப்பாஸிட் போட்ட பணத்தை எடுக்க முடியாது : உண்மையா?

உண்மை இல்லை!

மைக்கேல் மதனகாமராஜன் படத்தில் வெத்தலைப் பொட்டி திருடிய பாட்டி, என் பேத்தி கையைப் பிடிச்சு இழுத்துட்டான்னு ஊரைக் கூட்டிடுவார். டெல்லி கணேஷ் வந்து, கமலிடம் நீ கையைப் பிடிச்சு இழுத்தியா என்று கேட்டதும், விளக்கம் சொல்ல முற்படும் கமலைத் தடுத்து, அதெல்லாம் பேசாத…கையைப் பிடிச்சு இழுத்தியா இல்லையா இதற்கு மட்டும் பதில் சொல் என்பார். விரக்தியான, எரிச்சலான கமல், ஆமா கையப் பிடிச்சு இழுத்தேன்னு சொன்னதும் டெல்லி கணேஷ் அடிச்சுடுவார்.

அதே கதை தான் இங்கேயும். உண்மையா இல்லையானு ஒற்றை வரியில் பதில் கேட்போரின் நிலை.

ஒரு பேங்க் திவாலாகி விட்டால், நல்லா கவனியுங்கள்…. திவாலாகிவிட்டால் மட்டும், டெப்பாஸிட் தொகையை திரும்பக் கொடுக்க இன்ஸுரன்ஸ் பண்ணியிருப்பார்கள். அதன்படி அதிகபட்சம் ஒருலட்சம் அல்லது அதற்குக் கீழேயுள்ள டெபாஸிட் பணம் உறுதியாகக் கிடைத்து விடும். அதற்கு மேலுள்ள தொகை, அந்த வங்கி திரும்பக் கொடுக்கலாம் கொடுக்காமலும் போகலாம் என்பது இன்றைய நிலைமை. இன்றைக்கும் நீங்கள் டெபாஸிட் செய்து வைத்திருக்கும் பணத்திற்கான உத்திரவாதம் அவ்வளவு தான்.

புதிய திட்டத்தின்படி, இந்த இன்ஸுரன்ஸ் திட்டம் உண்டு. மீதமுள்ள தொகையை ஓராண்டுக்குள், இருக்கும் பணத்திலிருந்து பிச்சுப் பிச்சு கொடுக்க முயலும் என்கிறார்கள். எனினும், இன்றைய நிலை போலவே உத்திரவாதமில்லை. (கவனிக்கவும், இதெல்லாம் ஒரு வங்கி முற்றிலும் திவாலாகினால் மட்டுமே)

சரி, அப்ப முந்தைய திட்டத்திற்கும் இப்பொழுதைய திட்டத்திற்கும் என்ன வித்தியாசம்?

அங்கே தான் சூட்சுமம் இருக்கு!

இது நாள் வரை ஒரு வங்கி, நட்டத்தின் உச்சத்திற்கு வந்து மூடுவிழா நடத்தும் வரை ரிசர்வ் பேங்க் உள்ளிட்ட எந்த அமைப்பும் அந்த வங்கியின் நிர்வாகத்தில் மாற்றம் செய்ய அதிகாரம் இல்லை.

இப்பொழுதைய சட்டம்,

ஒரு வங்கி நட்டச் சூழலில் சிக்கித் தவித்தால், வாராக்கடனை வசூலிக்கத் தவறினால், தட்டிக் கேட்கவும், நிர்வாகிகளை மாற்றவும், அந்த வங்கியின் செயல்பாடுகளில் பாதியையோ முழுமையாகவோ பிற வங்கிகளிடம் கொடுத்துச் சரி செய்ய வழி வகை செய்யும். இதனால், மல்லையா, அதானி போன்ற பெரும் கடனாளிகளுக்கு ஏன் பணம் கொடுத்தாய்? ஏன் வசூல் செய்யவில்லை என்று அவ்வப்போது புதிய “நிதித் தீர்வாணையம்” பேங்குகளின் மென்னியைப் பிடித்து விடும்.

முன்பு போல மந்திரிகளின் சிபாரிகளின் பேரில் கார்பொரேட் ஆசாமிகளுக்கு இஷ்டத்திற்கு கடன் கொடுப்பதும், லஞ்சம் வாங்கிக் கொண்டு இல்லாத/செயல்படாத ப்ராஜெட்களுக்கு வங்கி அதிகாரிகளே அள்ளிக் கொடுத்து விட முடியாது.

இனி சிக்கலான ஒவ்வொரு கடன் மற்றும் வங்கிக் கணக்குகளுக்கு புதிய நிதித் தீர்வாணையத்திற்க்குப் பதில் சொல்ல வேண்டும். இது வங்கிகளின் இன்றைய மெத்தனப் போக்கிற்கும், பெருந்தொழிலதிபர்களுக்குச் சாதகமாகச் செயல்படும் சுதந்திரத்திற்கும் வலுவானத் தடையாக அமைந்துள்ளதால், வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு, உண்மையான நிலையைத் திரிச்சு மக்களிடம் குழப்பத்தை உருவாக்கி விட்டுள்ளது.

டெப்பாஸிட் பணத்தைக் கேட்டு, சுப்ரீம் கோர்ட்டுக்குக் கூட போக முடியாதாமே?

யார் யாரெல்லாம் போக முடியாது என்று கேட்டீர்களென்றால், திருடர்கள் முழிப்பார்கள்.

வங்கிகள் திவாலாகும் பட்சத்தில், அந்த வங்கியின், கடன், டெப்பாஸிட், சொத்து ஆகியவற்றை பிற வங்கிகளுக்கு மாற்றிச் சீரமைக்க, ஓராண்டு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை சிக்கல் அதிகமாக இருந்தால் மேலும் ஓராண்டு அவகாசம் எடுத்துக் கொள்ளலாம்.

அது வரை, அந்த வங்கி ஊழியர்கள், நிர்வாகிகள், இயக்குநர்கள், வங்கியின் பங்குதாரர்கள் மற்றும் சேமிப்புக் கணக்கு முதலீட்டாளர்கள் ஆகியோர் எந்தக் கோர்ட்டுக்கும் முறையீடு செய்யப் போக முடியாது. இரண்டாண்டிற்குப் பிறகும் புதிய நிதித் தீர்வாணயம் தீர்க்க முடியாவிட்டால், நீதிமன்றங்கள் மூலம் தீர்வு தேடிக் கொள்ளலாம்.

இதில், காமெடி என்னவென்றால், இப்பொழுதும் வங்கி திவாலாகி விட்டால், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொகைக்காக மக்கள் நீதிமன்றம் போக முடியாது.

புதிய நிதித் தீர்வாணயத்தில் புதிதாக இணைக்கப்பட்ட விசயம், வங்கியின் ஊழியர்கள், பங்குதாரர்கள் தீர்வாணையம் கொடுக்கும் முடிவுக்கு முன்னாடி(மட்டும்) நீதிமன்றம் போகக் கூடாது என்பது தான்.

அதாவது,

1, இப்பொழுதைய நிலையில் வங்கிகள் திவாலானால் ஒரு லட்சம் உறுதி. அதற்கு மேற்பட்ட பணம் உறுதியில்லை.

புதிய திட்டப்படியும் ஒரு லட்சம் உறுதி, அதற்கு மேற்பட்ட பணம் உறுதியில்லை. ( ஆனால், நிதியமைச்சர் முந்தைய நிலையை விட கூடுதலாக பணத்திற்கு ஏற்பாடு செய்வதாகச் சொல்லியிருக்கிறார்)

2, வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பின், எந்தவொரு பொதுத்துறை வங்கியும் திவாலாகவில்லை. தனியார் வங்கியில் க்ளோபல் ட்ரஸ்ட் பேங்கைத் தவிர வேறெந்த வங்கியும் அந்தச் சூழலுக்குத் தள்ளப் படவில்லை. அந்த வங்கி திவாலான சூழலிலும் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் பேங்க் சுவீகரித்துக் கொண்டு, அதன், கடன் மற்றும் வைப்பு நிதிகளை நிர்வகித்துக் கொண்டது. இப்படி திவாலே ஆகாத, முன்னெப்போதும் நடக்காத விசயத்தில் உள்ளே நுழைந்து கற்பனையான பாதுகாப்பு குறித்த அம்சங்களில் அநாவசிய பதற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அத்தைக்கு மீசை முளைத்தால், வயதான பின்னாடி அது நரைத்து விட்டால், அடிக்கும் “டை”யினால் தோலில் ஒரு வேளை அலர்ஜி ஏற்பட்டால், என்ன மருந்து கொடுப்பது என்று அரசாங்கம் சொல்லவில்லை என்று அறிவுஜீவிகள் மக்களைக் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

புதிய நிதித் தீர்வாணையத்தின் நிர்வாக அமைப்பின் படி, இனி, பேங்குகள் திவாலாகும் நிகழ்தகவு முன்பை விட பலமடங்கு குறையும். அப்படி என்றால், மக்களின் பணத்திற்கு கூடுதல் பாதுகாப்பு தானே? ஏன் அநாவசியமான பயப்பட வேண்டும்? வேற ஒன்றுமில்லை. இந்த மசோதா வங்கி ஊழியர்களின் பொறுப்பினை அதிகரித்திருக்கிறது. சரியாக வேலை செய்யாவிட்டால், எந்த நேரமும் வீட்டுக்கு அனுப்பிவிடும் அதிகாரத்தை அந்த நிதித் தீர்வாணையத்திற்கு கொடுத்திருக்கிறது. அதனால், வழக்கம் போல குட்டையைக் குழப்புகிறார்கள்.

எல்லாவற்றையும் விட, இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவின் விவாதத்திற்காகக் காத்திருக்கிறது. விவாதித்து ஒரு வரைவு கொண்டு வந்தபிறகு அதிலுள்ள நிறை குறைகளை ஆராயலாம். திருத்தமுடியாத சட்டத்தை இந்த ஜனநாயக நாட்டில் இயற்றி விட முடியாது. அதற்கு முன்னதாகவே, தவறான செய்திகளைப் பரப்பும் ஊடகங்கள், கொஞ்சமாவது பொருளாதார அறிவுள்ளவர்களை வேலைக்கு வைத்துக் கொள்ளக் கேட்டுக் கொள்கிறோம்

error: Content is protected !!