March 27, 2023

நளினி சிதம்பரத்தை அரெஸ்ட் செய்ய ஆறு வாரம் தடை!

மத்திய மற்றும் மாநில உறவையே பாநதிக்க வைத்து விட்ட சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் மனைவியும் வழக்கறிஞரு மான நளினி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்ய 6 வாரங்கள் இடைக்கால தடை விதித்து கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவிட்டது.

எக்கச்சக்கமான பொதுஜனங்களின் 30,000 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்த சாரதா சிட்பண்ட் நிறுவன வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்துக்கு தொடர்ப்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அத்துடன் ரூ. 42 கோடி செலவில் தொலைக்காட்சி சேனல் வாங்கும் விவகாரத்தில் சாரதா ரியலிட்டி நிறுவனத்துக்கு சட்ட உதவிகள் வழங்கியதற்காக நளினி சிதம்பரத்துக்கு ரூ.1.3 கோடி கட்டணம் வழங்கப்பட்டது. இந்த தொகை மோசடி செய்யப்பட்ட பணத்தில் இருந்து வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் நளினி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் நளினி சிதம்பரம் தாக்கல் செய்துள்ள முன் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று கொல்கத்தா ஐகோர்ட்டில் நடைபெற்றது. அவரது மனுவை நீதிபதி ஜாய்மால்யா பாக்சி தலைமை யிலான அமர்வு விசாரித்தது.விசாரணை முடிவில் நளினி சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு மீதான விசாரணை நிலுவையில் வைக்கப்பட்டது. மேலும் நளினி சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐக்கு 6 வாரங்கள் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

அதே சமயம் சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்கு நளினி சிதம்பரம் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.இறுதியில் நளினி சிதம்பரம் மற்றும் சிபிஐ இந்த வழக்கு தொடர்பான தங்கள் தரப்பு வாதத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீதிபதிகள் ஆணை பிறப்பித்தனர்.