August 12, 2022

காஃபி டே நிறுவனர் சித்தார்த்தா மிஸ்ஸிங்: பின்னணி முழு விபரம்!

கர்நாடகத்தின் முன்னாள் முதல்வராகவும் ஆளுநராகவும் இருந்தவர் எஸ்.எம்.கிருஷ்ணா. காங்கிரஸ் கட்சியில் பெருந்தலைவராக இருந்து அண்மையில் பாஜக.,வுக்கும் தாவியவர். இவரது மகள் மாளவிகாவின் கணவர் வி.ஜி.சித்தார்தா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சித்தார்தா, கஃபே காஃபி டே என்ற காபி தூள் நிறுவனத்தை நடத்தி வந்தார். இது சர்வதேச அளவில் மிகவும் புகழ்பெற்ற நிறுவனம்.

இந்த நிறுவனத்தை நடத்தி வந்த சித்தார்தாவுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இத்தனைக்கும் இவரது பல்வேறு நிறுவனங்களில் இந்தியாவில் மட்டும் சுமார் பத்தாயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். அண்மையில் மின்ட்ரி என்ற நிறுவனத்தை 3 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்றுள்ளார் சித்தார்தா. அதே நேரம், கஃபே காஃபி டே நிறுவனத்தையும் கோகோ கோலா நிறுவனத்திடம் விற்க பேச்சு நடத்தி வந்துள்ளார்.

அண்மைக் காலமாக பெரிதும் மனமுடைந்து காணப்பட்ட அவர், நேற்று பெங்களூரில் இருந்து சுமார் 350 கி.மீ., தொலைவில் இருக்கும் மங்களூரு பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கே பிரமாண்ட மாக ஓடும் நேத்ராவதி ஆற்றின் பகுதியில் காரை நிறுத்தி விட்டு… காரில் இருந்து இறங்கிச் சென்றுள்ளார். அவருக்காகக் காத்திருந்த கார் ஓட்டுநர், வெகுநேரம் சென்றும் திரும்பி வராததால் பதற்றம் அடைந்து, அருகில் பல இடங்களில் தேடியுள்ளார். ஆனால் சித்தார்தாவைக் காணவில்லை.

இதை அடுத்து, போலீஸாருக்கு தகவல் அளிக்கப் பட்டது. போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், சித்தார்தாவை அருகில் உள்ள இடங்களில் தேடினர். பின்னர் நேத்ராவதி ஆற்றில் அவரைத் தேடத் தொடங்கியுள்ளனர். சித்தார்தா தற்கொலை செய்து கொண்டிருப்பார் என்ற எண்ணத்தில் ஆற்றில் தேடி வருவதாகக் கூறப் படுகிறது. இந்தச் செய்தி கர்நாடகத்தில் அரசியல் மற்றும் தொழில் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 12.30 மணியளவில் மங்களூருவில் உள்ள கங்கனடி காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. சித்தார்த் காணாமல் போன நேரத்தில் கருப்பு சட்டை மற்றும் ஜீன்ஸ் பேன்ட் அணிந்திருந்தார். இரவு 8 மணிக்கு சித்தார்த்தாவுக்கு முதல் அழைப்பு விடுப்பதற்கு முன்பு கார் எந்த நேரத்தில் மங்களூருவை அடைந்தது, டிரைவர் காரில் எவ்வளவு நேரம் காத்திருந்தார் என்று புகார் நகலில் கூறப்படவில்லை.

இதற்கிடையில், நேற்று அவர் தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு எழுதியதாக கூறப்படும் கடிதம் வெளியாகியுள்ளது. அந்த கடிதத்தில், “என் மீது நம்பிக்கை வைத்திருந்த அனைவரையும் கைவிட்டதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நீண்டகாலமாக போராடி வருகிறேன். என்னால் முடியவில்லை. அனைத்தையும் நான் கைவிடுகிறேன். ஒரு பிஸினெஸ் மேனாக நான் தோல்வியடைந்துவிட்டேன். தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்” என உருக்கமாக எழுதியுள்ளார்.

நிறுவன இயக்குநர்கள் குழு மற்றும் பங்குதாரர்களுக்கு அவர் எழுதிய கடைசி வார்த்தைகள் இதோ:

எங்கள் இயக்குநர்கள் குழு மற்றும் காபி டே குடும்பத்திற்கு,

37 ஆண்டுகளுக்குப் பின்னர்… கடின உழைப்புடனும் வலுவான அர்ப்பணிப்புடனும், தொழில்நுட்ப நிறுவனத்தில் 30,000 வேலை வாய்ப்புகளை நேரடியாக உருவாக்கியுள்ளேன்! அது தொடங்கப் பட்டதில் இருந்து அதில் நான் ஒரு பெரிய பங்குதாரராக இருந்தேன். எனது சிறந்த முயற்சிகள் இருந்தபோதும் அதனை சரியான ஒரு லாபகரமான வணிக மாதிரியாக உருவாக்குவதற்கு நான் தவறிவிட்டேன்.

நான் அதற்காக என்னுடையது அனைத்தையும் கொடுத்தேன் என்று சொல்ல விரும்புகிறேன். என் மீது நம்பிக்கை வைத்திருக்கும் அனைவரையும் குப்புறத் தள்ளிவிட்டதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். நான் நீண்ட காலமாக போராடினேன்,

ஆனால் இன்று… பங்குதாரரான தனியார் தொழிற்கூட்டாளியிடம் இருந்து இதற்கு மேலும் எந்தவொரு அழுத்தத்தையும் தாங்க இயலாத நிலையில், பங்குகளை திரும்ப வாங்கிக் கொள்ளும்படி கட்டாயப்படுத்தப் பட்டேன்.

ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு நண்பரிடமிருந்து ஒரு பெரிய தொகையை கடன் வாங்கி ஓரளவு சமாளித்தேன். மற்ற கடன் வழங்குநர்களிடமிருந்து கடுமையான அழுத்தத்தை சந்தித்த நிலையில், எனது துர்பாக்கியமான நிலைமைக்கு அது வழிவகுத்திருக்கிறது.

முந்தைய வருமான வரி பொது இயக்குனரிடமிருந்து எங்கள் ‘மைண்ட்ட்ரீ’ கைமாற்றலின் போதான ஒப்பந்தத்தைத் தடுப்பதற்காக இரண்டு தனித்தனியான நிகழ்வுகளில் எங்கள் பங்குகளை இணைத்து, பின்னர் எங்கள் காபி டே பங்குகளின் நிலையை எடுத்துக் கொள்வதில் அதிகபட்ச நெருக்கடிகளை சந்தித்தேன். இருப்பினும் திருத்தப்பட்ட வருவாய் எங்களால் தாக்கல் செய்யப்பட்டது. இது மிகவும் நியாயமற்றது; கடுமையான பணப்புழக்க நெருக்கடிக்கு வழிவகுத்தது.

இனி நீங்கள் ஒவ்வொருவரும் வலுவாக இருக்கவும், புதிய நிர்வாகத்துடன் இந்த வணிகத்தைத் தொடர்ந்து நடத்தவும் நான் மனதார கேட்டுக்கொள்கிறேன். எல்லா தவறுகளுக்கும் நான் மட்டுமே பொறுப்பு.

ஒவ்வொரு நிதி பரிவர்த்தனையும் எனது பொறுப்பு. எனது அனைத்து பரிவர்த்தனைகளையும் எனது குழுவே, ஆடிட்டர்களோ, மூத்த நிர்வாகிகளோ முழுமையாக அறிந்திருக்கவில்லை. எனது குடும்பத்தினர் உட்பட, மற்ற அனைவரிடமிருந்தும் இத்தகைய நிதி பரிவர்த்தனைத் தகவல்கள் தெரியவிடாமல் தடுத்துள்ளதால், சட்டம் என்னை மட்டுமே இதற்கான பொறுப்பாளியாகக் கருத வேண்டும்.

யாரையும் ஏமாற்றுவதோ, தவறாக வழிநடத்துவதோ ஒருபோதும் என் நோக்கமாக இருந்ததில்லை!

நான் ஒரு தொழில்முனைவோராக தோல்வியடைந்தேன். இதனை நான் மிகவும் உண்மையாகவே சமர்ப்பிக்கிறேன். ஒருநாள் நீங்கள் நிச்சயமாகப் புரிந்துகொள்வீர்கள், என்னை மன்னிப்பீர்கள், மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இதனுடன், எங்கள் சொத்துகளின் பட்டியலையும் ஒவ்வொரு சொத்தின் தற்காலிக மதிப்பையும் இணைத்துள்ளேன். எங்கள் சொத்துக்களின் மதிப்பு கடன்களை விட அதிகம் என்பதால், அனைவருக்கும் திருப்பிச் செலுத்த அது உதவும்.

அன்புடன்,
வி.ஜி. சித்தார்த்த ‘

ஜூலை 27ஆம் தேதிதான் சித்தார்த்தா தமது நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இக்கடிதத்தை எழுதியிருக்கிறார். தான் பெற்ற கடனைத் திருப்பி செலுத்துவதற்கு ஏதுவாக தமது சொத்துகள் மற்றும் அவற்றின் மதிப்பு பற்றிய விவரங்களையும் இக்கடிதத்தில் சித்தார்த்தா குறிப்பிட்டுள்ளார். கடிதம் எழுதப்பட்ட அடுத்த நாளான ஜூலை 28ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் சிவக்குமாரைச் சித்தார்த்தா தொலைபேசியில் அழைத்துப் பேசியதாகவும், இருவரும் சந்திக்க முடியுமா என்று கேட்டதாகவும், தற்போது சிவக்குமார் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். சித்தார்தாவின் கடிதம் சந்தேகத்துக்கு இடமாக இருப்பதாகவும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.