March 21, 2023

இ–சிகரெட்டுகள் விற்பனைக்கு நிரந்தர தடை – மத்திய அமைச்சரவை முடிவு!

கடந்த சில ஆண்டுகளாக இ-சிகரெட் பாதுகாப்பானது’ என்று தவறான நம்பிக்கை பரவி வருகிறது. இந்த இ-சிகரெட்டில் கூட நிக்கோடின்தான் திரவ வடிவத்தில் உள்ளே இருக்கிறது. அதுதான் ஆவி யாகி, உடலுக்குள் செல்கிறது. சாதாரண சிகரெட் என்ன பாதிப்பை ஏற்படுத்துமோ, அதே பாதிப்பை இ-சிகரெட்டும் ஏற்படுத்தும் என்பதுதான் உண்மை. புகை வெளியே தெரியாததால், இதை எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அதனால் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் கூட பயன் படுத்தும் வாய்ப்பிருக்கிறது. இதனால், மலட்டுத்தன்மை, மாரடைப்பு, பக்கவாதம், புற்றுநோய் ஏற்படும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. புகை வெளியே வராவிட்டாலும், இதிலிருந்து பரவும் ஏரோசெல்களால் அருகிலிருப்பவர்களுக்கும் பாதிப்புகள் உண்டாகும். கர்ப்பிணிகளுக்கு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும். வளரிளம் பருவத்தினருக்கு, மூளை வளர்ச்சியைப் பாதிக்கும். அதனால்,
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் புழக்கத்தில் இருந்து வரும் இ- சிகரெட்டுகள் தற்போது இந்தியாவிலும் பரவி வருவதால் அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று பலர் வலியுறுத்தி வரும் நிலையில், இ- சிகரெட்டுகளுக்கான உற்பத்தி, ஏற்றுமதி & இறக்குமதி, சேமித்து வைத்து இருப்பது, விளம்பரம் உள்ளிட்ட அனைத்திற்கும் தடை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தகவலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.

இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘நாட்டில் இ- சிகரெட்டுகளின் தயாரிப்பு, விற்பனைக்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் அமலுக்கு வரும். குளிர்காலக் கூட்டத் தொடரில் இது தொடர்பான மசோதாவும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும். தடையை மீறி இ – சிகரெட்டுகளை தயாரித்தாலோ, விற்பனை செய்தாலோ தனி நபர் என்றால் 1 வருடம் சிறைத் தண்டனை அல்லது 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

தொடர்ந்து இதே தவறை செய்யும் பட்சத்தில் 3 வருடம் சிறைத்தண்டனை அல்லது 5 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டுமே வழங்கப்படும். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இ – சிகரெட் டுகளை ஒழிக்க வேண்டும் என்று பலரும் கூறிவந்த நிலையில், மத்திய அமைச்சரவை இதற்கு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது இந்திய நிறுவனங்கள் எதுவும் இ-சிகரெட்டுகளை உற்பத்தி செய்யவில்லை என்றாலும், அதே நேரத்தில் 150 சுவைகளில் சுமார் 400 பிராண்டுகளில் விற்பனையாகி வருகின்றன’ என்று தெரிவித்தார்.

எக்ஸ்ட்ரா ரிப்போர்ட்:

இ – சிகரெட் என்பது சாதாரண சிகரெட்டின் தோற்றத்தில் நீளமான குழாய். அதற்குள் திரவம் அடங்கிய கேட்ரிட்ஜ் ஒன்று இருக்கும். இந்த கேட்ரிட்ஜை தேவைப்படும்போது வெளியே எடுத்து, அதில் திரவத்தை நிரப்பிக்கொள்ளலாம். உள்ளே போட்டதும் ஆன் செய்வதற்கான பட்டன் ஒன்று இருக்கும். அதை அழுத்தினால் போதும். இ-சிகரெட் கருவிக்குள் இருக்கிற மின் சாதனங்கள் அந்தத் திரவத்தை ஆவியாக்கிவிடும். அதை வாயில் வைத்து உறிஞ்சினால், கேட்ரிட்ஜிலிருந்து நீராவி வெளிவரும். வெளியில் புகை வராது; தீக்கங்கும் இருக்காது. நீல நிறத்தில் ஒரு எல்.இ.டி விளக்கு மட்டும் நுனியில் எரியும். பேனா, யுஎஸ்பி டிரைவ் போன்ற டிசைன்களிலும்கூட இந்த இ-சிகரெட்டுகள் கிடைக்கின்றன.