October 17, 2021

”விஜய், அஜித்-தை விட சூர்யாதான் டாப்!”- சி 3 தயாரிப்பாளர் பெருமிதம்

சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சி3’ படம் வருகிற பிப்ரவரி 9-ந் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. சூர்யா – ஹரி கூட்டணியில் சிங்கம் படத்தின் மூன்றாவது பாகமாக வெளிவரும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள ‘சி3’ படத்தில் சூர்யா, அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன், ராதாரவி, விவேக், நாசர்,  ராதிகா, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பிரியன் ஒளிப்பதிவாளராகவும் வி.டி.விஜயன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர்.
s 3 jan 30 a
இந்நிலையில், இப்படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. அப்போது, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசும்போது, தமிழ், தெலுங்கு சினிமாவில் ரஜினிக்கு அடுத்த வியாபாரம் என்றால் அது சூர்யாவுக்குத்தான்.  ‘சிங்கம் 3’ படம் வெளியாவதற்கு முன்பே ரூ 100 கோடிக்கு மேல் வியாபாரம் ஆகி அதை நிரூபித்துள்ளது. தமிழ், தெலுங்கில் ரஜினி சாருக்கு அடுத்து சூர்யாதான். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என்று பேசினார்.
மேலும் பேசிய அவர், “படத்தில் நடிச்சவங்களாகட்டும், டெக்னீஷியன்ஸ் ஆகட்டும், உதவி இயக்குநர்களாகட்டும் எல்லாரும் ஒரு போர் நடக்கற மாதிரி பரபரப்பில் இருந்தாங்க, எந்த டென்ஷனும் இல்லாம ஜாலியா ரிலாக்சா இருந்தது நான் மட்டும் தான். ஏன்னா எனக்கு அமைஞ்ச டீம் அந்த மாதிரி. எல்லாரும் கிண்டலா கேட்பாங்க என்னங்க சிங்கம் 30 வரைக்கும் போவீங்களானு, உண்மையாலுமே அதுவரைக்கும் போகக் கூடிய தைரியத்தை இந்தப் படம் குடுத்திருக்கு படம் பார்க்கும் போது நீங்களும் அதை உணர்வீங்க.
ரசிகர்களுக்கு நான் இந்த நேரத்தில் ஸாரி சொல்லிக்கிறேன். ஏன்னா படம் வெவ்வேறு காரணங்களால தள்ளிப்போயிடுச்சு. தீபாவளிக்கு எங்களால கொண்டு வர முடியல, டிசம்பர் எல்லாருக்குமே தெரியும் சி.எம் இறப்பு, டீமானிடைசேஷன், புயல்னு பல விஷயங்கள் இருந்தது. ஆனா, பிப்ரவரி எனக்கு ரொம்பவும் லக்கியான மாசம். ஏன்னா, தமிழ்ல பருத்திவீரன் ரிலீஸ் ஆனது பிப்ரவரி 23, தெலுங்குல ஸ்டுடியோ க்ரீன் பேனர் ஆயிரத்தில் ஒருவன் மூலமா கொண்டு போனது பிப்ரவரி 5. இப்போ சிங்கம் 3 பிப்ரவரி 9 ரிலீஸ் ஆகப்போகுது. ஃபேன்ஸுக்கு இன்னொரு மன்னிப்பும் சொல்லிக்கிறேன், எல்லாருமே படத்துடைய வசூல் என்னனு போடுறாங்க, நீங்க மட்டும் போடவே மாட்டறீங்கனு சொல்றாங்க.
முதல் விஷயம் பொய் சொல்லக் கூடாதுங்கறது, ரெண்டாவது சூர்யா சார் அதை விரும்பல. ஏன்னா ஒரிஜினல் வசூல சொல்லிகூட அதனால யாரும் காயப்படக்கூடாதுன்னு தான். ஆனா, ரசிகர்களுக்காக சூர்யா சார்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு ஒரு சில விஷயங்கள இங்க பகிர்ந்துக்கிட்டே ஆகணும். மொத்த வியாபாரத்தை வெச்சு தான் நம்பர் 1, நம்பர் 2 அப்படிங்கற கேம் இருக்குதுன்னா, வியாபார ரீதியில் ரஜினி சாருக்கு அடுத்து அதிக பட்ச வியாபாரம் இருக்கும் ஹீரோ சூர்யா சார்னு என்னால உறுதியா சொல்ல முடியும். நிறைய பேர் வாங்குற சம்பளம் தான் நம்பர் 1ன்னு தீர்மானிக்குதுன்னு நினைக்கறாங்க, ஆனா, படத்தின் தயாரிப்பாளருக்கும் லாபம் கிடைக்கணும். அதுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஹீரோ சூர்யா சார். ரிலீஸுக்கு முன்னாலயே 100 கோடிகிட்ட வியாபாரம் ஆகிடுச்சு” என்றார்
இயக்குநர் ஹரி பேசும் போது , “சிங்கம் 2வுக்கு கிடைச்ச சப்போர்ட்டும், சந்திக்கும் எல்லோரும் அடுத்த பார்ட் எப்போ எப்போனு கேட்ட ஆர்வமும் தான் இந்தப் படத்தை சாத்தியமாக்கியிருக்கு. நானும் சூர்யா சாரும் வேற ஒரு படம் பண்றதா தான் இணைஞ்சோம். ஆனா, சிங்கத்துக்கான எதிர்பார்ப்பு வேற லெவல்ல இருந்ததால, சிங்கம் 3 ஒன்லைன் ரெடி பண்ணி சூர்யா சார்கிட்ட சொன்னேன். உடனே பண்ணலாம்னு சொன்னார். இதோ படமும் ரிலீஸ் ஆகப் போகுது.
எவ்வளவு நெருக்கமான ஆளா இருந்தாலும் அண்ணன் தம்பியாவே பழகினாலும் சின்னதா ஒரு கசப்பு வரும். ஆனா, எங்களுக்குள் இருக்கும் பத்து வருஷ பழக்கத்தில் ஒரு நாள் கூட சின்ன கசப்பு கூட உண்டாகல. என் மேலான அவரின் புரிதலுக்கு நன்றி சொல்லிக்கிறேன். நடிப்பு பொறுத்தவரை, எடுக்கும் சீன்ல நியாயமும் எதார்த்தமும் இருந்தா, அதைப் பவர்ஃபுல்லா நடிச்சுக் கொடுப்பார் சூர்யா. அதுக்கும் நன்றி.
பொதுவா படங்கள்ல மெசேஜ் சொல்றதில் எனக்கு உடன்பாடு கிடையாது. வசனங்கள்ல சின்னதா எதாவது அமையும். ஆனா, இந்தப் படத்தில் சொல்லிக்கும் படியா, இன்றைய இளைஞர்களுக்கான ஒரு மெசேஜ் இருக்கு. முதல் இரண்டு பாகத்தில், துரை சிங்கத்தின் முதல் ஐந்து மணிநேரக் கதைய பார்த்திட்டீங்க, இனி அதுக்குப் பிறகான இரண்டரை மணிநேரத்தையும் சேர்த்து ஏழரை மணிநேர கதையைப் பார்க்கப் போறீங்க. நான் மட்டும் வேகமா ஓடினா, தனியா தான் ஓடணும். என்கூடவே சேர்ந்து ஓடி இந்தப் படத்துக்காக உழைச்ச அத்தனை பேருக்கும் நன்றி” என்றார்.
 unnamed
இச்சந்திப்பில் சூர்யா பேசியது, “சினிமாவுக்கு வந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டது, 35 படங்களில் நடித்துவிட்டேன். ‘நேருக்கு நேர்’ படத்தில் நடிக்கும் போது, எனக்காக துரைசிங்கம் என்றதொரு கதாபாத்திரத்தை உருவாக்குவார்கள் என நினைத்துப் பார்த்ததில்லை.
என் திரையுலக வாழ்க்கையில் ‘சிங்கம்’ முக்கியமான படம். அப்படத்தின் 1ம், 2ம் பாகங்களுக்கு கிடைத்த வெற்றியால் 3ம் பாகம் செய்யவில்லை. இதற்காகவும் இயக்குநர் ஹரி அதிகமாக உழைத்துள்ளார். அவருடைய உழைப்பைத் தான் நான் மிகவும் வியந்து பார்க்கிறேன். இப்படத்துக்காக 120 நாட்கள் படப்பிடிப்பு, 200 படப்பிடிப்பு தளங்களில் காட்சிப்படுத்தியுள்ளோம். ஒரு இயக்குநரோடு 5 படத்தில் பணிபுரிந்துவுள்ளேன். ஹரிக்கும் எனக்கு நல்ல நட்பு உள்ளது.
இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளேன். ஜல்லிக்கட்டு விஷயத்தில் காவல்துறை மீது அதிருப்தி நிலவுகிறது என்கிறார்கள், சிலர் தவறு செய்திருக்கலாம். அவர்கள் மீது நடவடிக்கைகள் உண்டு என தெரிவித்துள்ளார்கள். அதற்காக ஒட்டுமொத்த காவல்துறையையும் குறைச் சொல்லக்கூடாது. சமூகத்தில் அவர்களுடைய பணி மிகவும் முக்கியம்” என்று பேசினார் சூர்யா.