September 27, 2022

ஆர். கே. நகர்; இடைத்தேர்தல் ரத்து! ஏன்? – தேர்தல் கமிஷன் முழு விளக்கம்!

ஆர்.கேநகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் அதிமுகவின் பன்னீர்செல்வம் அணி, டிடிவி தினகரன் அணி மற்றும் திமுகவினரும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து இடைத்தேர்தலை இந்திய தேர்தல்ஆணையம் ரத்து செய்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

rk nagar apr 10 b

இது குறித்து தேர்தல் கமிஷன் நேற்று இரவு வெளியிட்ட 29 பக்க அறிவிப்பில், “சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை நியாயமாக நடத்த தேர்தல் கமிஷன் நடவடிக்கைகள் எடுத்து வந்தது. தேர்தல் பார்வையாளர்கள், நுண் பார்வையாளர்கள், செலவு கண்காணிப்பாளர்களுடன் பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டன. எனினும், இந்த நடவடிக்கைகளை மீறி, ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வினியோகிக்கப்படுவதாக புகார்கள் வந்தன. இதுகுறித்து தேர்தல் கமிஷன் பிறப்பித்த உத்தரவுப்படி, பல வழக்குகளை சென்னை போலீசார் பதிவு செய்தனர். பட்டுவாடா செய்தவர்கள் கைது செய்யப்பட்டு, பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், அமைச்சர் விஜயபாஸ்கர், அவருடைய கூட்டாளிகள், உறவினர்கள், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், முன்னாள் எம்பி ராஜேந்திரன், மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி ஆகியோரின் வீடுகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகள் பற்றிய அறிக்கையை தேர்தல் கமிஷனிடம் வருமான வரித்துறை கடந்த ௮ம் தேதி தாக்கல் செய்தது. அதில், அமைச்சர் விஜயபாஸ்கரின் நெருங்கிய கூட்டாளிகளிடம் இருந்து ரூ. 5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது என்றும், கட்சி நிர்வாகிகள் மூலம் ரூ. 89 கோடி வினியோகம் செய்யப்பட்டதற்கான ஆதார ஆவணங்கள் சிக்கியுள்ளன என்றும் வருமான வரித்துறை தெரிவித்தது.

எனவே, இப்போதைய சூழ்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை நியாயமாக நடத்த முடியாது என தேர்தல் கமிஷன் கருதுகிறது. மேலும், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதற்காக, தமிழக சட்டசபைத் தேர்தலின்போது, அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதேபோல், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலையும் ரத்து செய்ய தேர்தல் கமிஷன் முடிவு எடுத்தது.

இதைத்தொடர்ந்து, ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த மார்ச் ௧௬ம் தேதி வெளியிட்ட அரசாணை வாபஸ் பெறப்படுகிறது. மேலும், மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் பணியாளர்கள் எடுத்த எல்லா நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுகின்றன. பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வினியோகத்தால் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழ்நிலை நீக்கப்பட்ட பின்னர், ஆர்.கே.நகர் தொகுதியில் எந்தவித முறைகேடுக்கும் இடம்கொடுக்காமல் நியாயமாக இடைத்தேர்தல் நடத்தப்படும்”
இவ்வாறு அறிவிப்பில் தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.