January 18, 2022

பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31ம் தேதி ?

வழக்கமாக பட்ஜெட் கூட்டத் தொடர் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் கடைசி வாரம் தொடங்கும். பட்ஜெட் தாக்கல் செய்வதில் சில சீர்திருத்தங்களை மேற்கொள்ள பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ க அரசு முடிவு செய்தது. ஆரம்ப காலம் முதல் தனியாக தாக்கல் செய்யப்பட்டு வந்த ரயில்வே பட்ஜெட்டை, பொது பட்ஜெட்டுடன் இணைக்க கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முடிவு செய்யப்பட்டது. மேலும் பட்ஜெட் கூட்டத் தொடரை முன்கூட்டியே தொடங்கி பட்ஜெட் நடவடிக்கைகளை விரைவில் முடிக்கவும் முடிவு செய்யப்பட்டது. வழக்கமாக பட்ஜெட்டுக்கு இரண்டு கட்டமாக நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற மே மாதம் 3வது வாரம் வரை ஆகும். இதனால் பட்ஜெட் திட்டங்களையும் செலவினங்களையும் மேற்கொள்ள கால தாமதம் ஆகும்.

budger jan 4

இதை விரைவில் அமல்படுத்துவதற்காக பட்ஜெட் கூட்டத் தொடர் இந்த ஆண்டு முதல் முன்கூட்டியே நடத்தப்படவுள்ளது. இதை உறுதி செய்வதற்காக நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று கூடியது. இதில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த் குமார், இணை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர். பட்ஜெட் கூட்டத் தொடரை வரும் 31ம் தேதி கூட்ட, ஜனாதிபதிக்கு அமைச்சரவை குழு பரிந்துரை செய்தது. இதன் மூலம் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரை, பொருளாதார ஆய்வறிக்கை ஆகியவை வரும் 31ம் தேதி நடக்கும் எனத் தெரிகிறது.

அடுத்த நாள் பிப்ரவரி 1ம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. முதல் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 9ம் தேதி வரை நடைபெறும். இதன் மூலம் பட்ஜெட் நடவடிக்கைகள் அனைத்தும் மார்ச் 31ம் தேதிக்குள் முடிந்துவிடும். ஏப்ரல் 1ம் தேதி முதல் அனைத்து செலவினங்கள் மற்றும் வரிகள் அமலுக்கு வந்து விடும். இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரை அதிக நாட்களுக்கு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி துணை மசோதாக்களை இதில் நிறைவேற்றவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.