September 20, 2021

விவாதமே இல்லை: ஆனால் நிறைவேறியது மத்திய பட்ஜெட் மற்றும் வரவு செலவு மசோதா!

மக்களவையில் பட்ஜெட்டில் உள்ள வரி விதிப்புகள், திட்டங்களுக்கான நிதிக்கோரிக்கைகள் அடங்கிய நிதி மசோதாவும் துனண மானியக் கோரிக்கைகளும், புதனன்று பகல் 12 மணிக்கு விவாதம் இன்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விவாதமின்றி பட்ஜெட்டை நிறைவேற்றுவதை எதிர்த்து ஆட்சேபம் தெரிவித்தனர். ஆனாலும் வரவு செலவுத் திட்ட மசோதா துணை மானியக் கோரிக்கைகள் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் மக்களவையை மறுநாள் வரை ஒத்திவைப்பதாக மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் உடனே அறிவித்து விட்டு கிளம்பி விட்டார்.

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதி மார்ச் 5ந் தேதி துவங்கியது. அன்றியிருந்து 14ந் தேதியான இன்று வரை எட்டு நாள்களுக்கு மக்களவையும் மாநிலங்களவையும் ஒரு நாள் கூட முறையாக நடக்கவில்லை. திமுக, அதிமுக எம்பிக்கள் இரு அவைகளிலும் காவிரி மேலாண்மை வாரியம் கோரி அவைக்கு உள்ளேயும் வெளியேயும் போராடி வருகிறார்கள். அதே சமயம்
பஞ்சாப் தேசிய வங்கியில் இருந்து ரூ. 14,000 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி வருகிறார்கள்.

கூடவே தெலுங்கு தேசக் கட்சி எம்.பிக்கள் ஆந்திர பிரதேசத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி போராடி வருகிறார்கள். தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அமைச்சர்கள் குழுவில் இடம் பெற்றிருந்த இரண்டு தெலுங்கு தேசக் கட்சி எம்.பிக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தார்கள். மேலும் சிறப்பு நிதி ஒதுக்கீடு கோரி ஒய்எஸ்ஆர் காங்கிரசும், போராடி வருகிறார்கள்.
இப்படி ஐந்து கட்சிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறித்து அவைத் தலைவர் இருக்கை முன் கூடி முழக்கம் எழுப்பிப் போராடி வந்தனர்.

இந்த நிலையில் பாஜக எம்பிக்களுக்கு 3 நாள் கொறடா ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதையடுத்து பட்ஜெட் செவ்வாய் கிழமை மாலை நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் செவ்வாய்கிழமை பட்ஜெட் நிறைவேற்றப்பட வில்லை. புதன்கிழமை மாலை 5 மணிக்காவது நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில் நாடாளுமன்ற விவகார அமைச்சர் அனந்த குமார் எழுந்து பட்ஜெட் மற்றும் பிற கோரிக்கைகளை மாலை 5 மணிக்கு பதிலாக பகல் 12 மணிக்கு நிறைவேற்றலாம் என்று தெரிவித்தார்.

அதனை மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனும் ஏற்றுக் கொண்டார். ஒத்தி வைக்கப்பட்ட மக்களவை 12 மணிக்கு கூடியும் பட்ஜெட், நிதி மசோதா, துணை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நிறைவடைந்தது என கூறும் கில்லட்டின் முறை பின்பற்றப்படுவதாக அனந்தகுமார் கூறினார். அவைத்தலைவரும் ஒப்புதல் தந்தார். அதைத்தொடர்ந்து குரல் வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள், ஆட்சேபங்கள் குறித்து கவலைப்படாமல் பட்ஜெட் தொடர்பான எல்லா மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. மக்களவையில் பாரதீய ஜனதாவுக்கு இறுதிப் பொரும்பான்மை பலம் இருப்பதால் இது சாத்தியமானது.

பட்ஜெட் மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாவிட்டாலும் கவலை இல்லை. 14 நாள்களுக்குள் மசோதா திருப்பி அனுப்பப் படாவிட்டால் அவை நிறைவேறியதாகக் கருதப்படும். மக்களவையில் பட்ஜெட் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் அடுத்து என்ன செய்வார்கள் என்பதை ஆவலுடன் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.