September 25, 2022

பட்ஜெட் கணக்கு வருட தொடக்கத்தை ஜனவரி 1 முதல் மாற்ற அரசு முடிவு!

இந்தியாவில் கணக்கு வருடம் ஏப்ரல் 1 ஆரம்பித்து மார்ச் 31 முடிவடைகிறது. இந்த வழக்கம் சுமார் 152 வருடங்களாக பின்பற்றப்பட்டு வரும் நிலையில் இந்த பட்ஜெட் கணக்கு வருட தொடக்கத்தை ஜனவரி 1 முதல் மாற்ற அரசு அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது ஆண்டின் கடைசி மாதங்களில் தான் நவராத்திரி, தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகள் வரும். அந்த சமயங்களில் மக்களிடையே வரவு செலவு தொடர்ந்து இருக்கும். விழாக் கள் முடிந்து மக்கள் இயல்பு நாட்களுக்கு திரும்ப சில வாரங்கள் ஆகும். இந்த காரணத்தில் தான் டிசம்பர் இறுதி நாளை ஆண்டின் கணக்கு முடிவு நாளாக வைக்காமல் மார்ச் 31-ம் நாளை ஆண்டின் வங்கி கணக்கு முடிவு நாளாக அமைத்து அதனைத் தொடர்ந்து பின்பற்றியும் வருகிறோம். ஒவ்வொரு நாட்டுக்கும் இந்த நாள் வெவ்வேறு மாதங்களில் வருகிறது. இந்தியாவில் மார்ச் 31 ஆண்டு முழு வருட கணக்கு முடிவு நாளாக இருக்கிறது. அதை ஒட்டியே மத்திய அரசு பிப்ரவரி மாதம் இறுதியில் நிதிநிலை அறிக்கை வெகு நாட்களாக பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. நிதிநிலை அறிக்கையின் திட்டங்கள் கணக்கு வருட தொடக்கமான ஏப்ரல் 1 முதல் அமுலுக்கு வருவது வழக்கமாக இருந்தது.

இந்த பட்ஜெட் ஆண்டு கணக்கு குறித்து விசாரித்த போது, ‘பிரிட்டிஷ் அரசு நம் நாட்டில் நுழையும் முன்பு, முகலாய அரசர்கள் இந்தியாவை ஆண்டு வந்தனர். அந்த முகலாய அரசர்களின் பூர்வீகம் உஸ்பகிஸ்தான், சமர்காண்ட் போன்ற பகுதிகளைச் சார்ந்தது. அவர்கள் அங்கிருந்து இந்தியா வருகையில் தட்பவெட்ப நிலை மாறுபட்டது. வெயில் காலங்களில் அவர்கள் தங்கள் சொந்த இடத்துக்கே சென்றுவிடுவர். காரணம், இந்தியாவைவிட அவர்கள் பகுதியில் வெயிலின் தாக்கம் குறைவு. ஜகாங்கிர் காலத்தில் அவர்கள் மார்ச் மாதத்தில் வடக்கே பனிப்பிரதேசங்களை நோக்கிச் செல்வர். அவர்கள் அங்கு செல்லும் முன் கடந்த ஆண்டுக்கான வரவு- செலவு கணக்கினை முடித்துவிட்டுக் கிளம்புவர். இங்கிருந்துதான் மார்ச் 31-ல் ஒரு வருட வங்கி கணக்கு முடிக்கப்படும் வழக்கம் ஆரம்பமானது.

இதனை உற்றுக் கவனித்த ஆங்கிலேயர்கள், முகலாயர்கள் இங்கு இல்லாத அந்த சமயத்தில் இந்தியாவைக் கைப்பற்றினர் என்கிறது வரலாறு. ஆக, அவர்களும் முகலாய அரசர்கள் பின்பற்றிய அந்த வழக்கத்தையே தொடர்ந்து வந்தனர். முகலாய அரசர்கள் காலத்தில் ஆரம்பித்த இந்த வழக்கம் இன்றளவும் தொடர்ந்து வருகிறது என்றால் அது வரலாற்றின் வடிவம் என்றே சொல்லலாம். அது மட்டுமல்லாமல் ஹிந்தி வருட பிறப்பு எனப்படும் `வைஷாகா` என்னும் பண்டிகை ஏப்ரல் முதல் நாள் வரும். அதைக் கருத்தில் கொண்டு இந்த முறை செயல்படுத்தப்பட்டது’ என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னரே சொன்னது போல் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக அப்பழக்கத்தை மாற்றி பாஜக ஆட்சியில் கடந்த இரு வருடங்களாக நிதிநிலை அறிக்கை தேதி மாற்றப்பட்டு பிப்ரவரி 1 ஆம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யபடுகிறது.இதனிடையே இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் கூட்டம் ஹல்வா விழா நேற்று நடந்தது. அந்நிகழ்வில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக் குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருவதால் இந்த கூட்டத்தில் கலந்துக் கொள்ளவில்லை.

அதே சமயம் கடந்த 1867 ஆம் ஆண்டிலிருந்து பின்பற்றி வரும் இந்த கணக்கு வருட காலத்தை மத்திய அரசு மாற்றி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கணக்கு வருட காலம் மாற்றி அமைப்பது குறித்து பிரதமர் மோடி ஏற்கனவே தமக்கு அப்படி ஓர் எண்ணம் உள்ளதாக கூறி உள்ளார். நிதியாண்டையும் காலண்டர் ஆண்டையும் இணைப்பதற்கு மோடி முன்னரே விருப்பம் தெரிவித்ததை அடுத்து மத்திய அரசு இதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய உயர்நிலைக் குழுவை நியமித்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தக் குழு தனது அறிக்கையை நிதி யமைச்சகத்திடம் சமர்ப்பித்தது.

இதுபோல நிதியாண்டை மாற்றுவது அவசியம் என நிதி ஆயோக் அமைப்பும் தெரிவித்துள்ளது. இப் போது நிதியாண்டு கணக்கு நடை முறையால் வேலைச் சூழலை குறைந்த அளவே பயன்படுத்திக் கொள்ள முடிகிறது. மேலும் இப்போது நடைமுறையில் இருக்கும் நிதியாண்டு நடைமுறை நாட்டின் எந்தவொரு தேசிய கலாச்சார மற்றும் பாரம்பரிய ரீதியிலான காரணமும் இல்லாமல் தேர்வு செய்யப்பட்டது என்று நிதி ஆயோக் குறிப்பிட்டுள்ளது.

இதை அடுத்து வரவிருக்கும் பார்லிமெண்ட் கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.