October 16, 2021

பருவ மழைக்கு முன்பாக பக்கிங்காம் கால்வாய் தூர்வாரப் படோணும்! தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

1801-ல் வெளிவந்த மெட்ராஸ் கெஜட் அறிவிப்பின்படி சென்னையைச் சுற்றியுள்ள ஓடைகளை இணைக்க எண்ணூரிலிருந்து சென்னை வரை ஒரு கால்வாய் கட்டத் திட்டமிடப்பட்டது. பிறகு ஆந்திராவின் காக்கிநாடா பகுதியிலிருந்து தமிழகத்தின் விழுப்புரம் வரை பறந்து விரிந்த மிக நீண்ட கால்வாயாக அது கட்டப்பட்டது. இன்று சென்னையை முட்டித்தள்ளும் ஆறுகளும் ஏரிகளும் அன்று பக்கிங்காம் கால்வாய்க்குக் கட்டுப்பட்டிருந்தன. உதாரணத்துக்கு, கூவத்தையும் அடையாறையும் இணைக்கும் ஆற்று வழிப்பாதை இருந்தது.

canel oct 27

கோதாவரி ஆற்றோடும் கிருஷ்ணா நதியோடும் கைகோத்த இந்த பக்கிங்காம் கால்வாயில் 1890-களில் வணிகப்பொருட்களை உற்சாகமாகப் பல படகுகள் சுமந்து சென்றன என்று ‘இந்தியன் பால்ம்’ என்னும் புத்தகத்தில் பால் ஹைலாந்த் குறிப்பிட்டுள்ளார். ஆனால் பின்னாளில் எதிர்பாராத வெள்ளத்தினாலும் வறட்சியினாலும் பக்கிங்காம் கால்வாய் வழி வணிகம் தடைபட்டுப்போனது என்பது தெரியவருகிறது.

இதேபோன்று, சென்னையின் மழை நிலவரம் குறித்து 64 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வின் விவரங்களை 1832-ல் வெளியிட்டார் ஆர்தர் காட்டன். இதன்படி சென்னையில் மழை வரத்து சீராக இல்லாமல் ஏற்றம் இறக்கத்தோடு மாறி மாறிப் பொழிவதாகக் குறிப்பிட்டுள்ளார். 1827-ல் 88.41 அங்குலம் வரை சென்னையில் மழை பொழிந்திருக்கிறது. ஆனால் 1831-ல் 44.35 அங்குலமாக அது குறைந்திருக்கிறது. 1832-ல் வெறும் 18.45 அங்குலம் மட்டுமே பொழிந்திருக்கிறது. அடுத்த ஆண்டில் 37.11 அங்குலமாகத் திடீரெனப் பெருகியிருக்கிறது.

இவ்வாறாகச் சென்னையின் மழை நிலவரம் ஏற்ற இறக்கத்தோடு இருப்பதால் இப்பகுதிக்கான நீர் மேலாண்மை கண்ணும் கருத்துமாகத் திட்டமிடப்பட வேண்டும் என தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். சென்னையின் நீர் மேலாண்மையில் பக்கிங்காம் கால்வாய் முக்கியப் பங்குவகித்தது என்பதற்கான பதிவுகளும் காணப்படுகின்றன. பழுதடையாமல் இருந்தவரை கொள்திறன் ஒரு நொடிக்கு 5,600 கன அடி நீரைக் கொள்திறனாகக் கொண்டிருந்தது.

ஆனால் சென்னையின் ஏரிகளுக்கும் பிற நீர்நிலைகளுக்கும் இடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டவுடன் பக்கிங்காம் கால்வாய்க்கான முக்கியத்துவமும் மறைந்துபோனது. 1900 மே 10-ல் வெளியான, நீண்ட காலத்துக்குப் பிறகு பக்கிங்காமின் அருமை அறிந்து மீண்டும் காக்கிநாடா முதல் புதுச்சேரி வரை அதன் நீர் படுகையைச் செப்பனிட்டு தேசிய நீர்வழிப் பாதையை அமைக்க 2008-ல் திட்டமிடப்பட்டது. ஆனால் இன்றுவரை இந்தக் கனவுத் திட்டம் மெய்ப்படவில்லை. இந்நிலையில் பக்கிங்காம் கால்வாயை தூர்வார தமிழக பொதுப் பணித் துறைக்கு தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பக்கிங்காம் கால்வாயை தூர்வார உத்தரவிடக் கோரி சண்முகம் என்பவர் தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில், பக்கிங்காம் கால்வாயை தூர்வாரும் பணிகள் குறித்து பொதுப் பணித் துறை அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், சென்னையில் உள்ள நீர் நிலைகளை தூர்வாரி சீரமைக்க ரூ.6.3 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகளின் பராமரிப்பு செலவுக்காக ரூ.3.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னையை சுற்றியுள்ள நீர் நிலைகளில் இருக்கும் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணி நடந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பருவ மழைக்கு முன்பாக முடிந்த அளவுக்கு பக்கிங்காம் கால்வாயை தூர்வாரும்படி தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. மேலும், பக்கிங்காம் கால்வாயில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்றி, வண்டல் மண்களை அப்புறப்படுத்தி, உடனடியாக தூர்வாரும்படி, பொதுப்பணித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.