September 18, 2021

கர்நாடகா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா…!

பாஜகவின் மூத்த தலைவர் எடியூரப்பா, கர்நாடக முதல்வராக நான்காவது முறையாக பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு பெறவுள்ளது. பாஜகவில் 75 வயதுக்கு மேலானவர்கள் அரசியல் பதவி வகிக்கக் கூடாது. இருப்பினும், எடியூரப்பாவுக்கு மட்டும் அதில் விலக்கு அளிக்கப்பட்டது .

இதனிடையே இரண்டு ஆண்டுகள் நிறைவு விழா இன்று நடைபெற்று வரும் நிலையில், எடியூரப்பாவின் 2 ஆண்டு சாதனையை கொண்டாடும் விதமாக, நிகழ்ச்சி ஒன்றுக்கு பெங்களூருவில் கர்நாடக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதில் கலந்து கொண்ட எடியூரப்பா, ‘என்னை 7 முறை எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றி. நான் கட்சி மேலிடத்தின் முடிவை ஏற்றுக் கொள்வேன். கட்சி மேலிடத்தின் முடிவை மீற மாட்டேன். எனக்கு எந்த குறையும் இல்லை. எனக்கு ஆதரவாக மடாதிபதிகள் மாநாடு நடத்துவது அவசியமற்றது. இன்று பிற்பகலில் கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்கவுள்ளேன்’ எனக் கண்ணீர் மல்கப் பேசினார்.

இதை அடுத்து பிற்பகலில் ஆளுநரை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தார். மூத்த தலைவர்களுடன் பல மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று மாலைக்குள் புதிய முதல்வர் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

முன்னதாக, கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு எதிராக கட்சியில் உள்ளவர்களே போர்க்கொடி தூக்கினர். இதனால் எடியூரப்பாவின் பதவி பறிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்தநிலையில் எடியூரப்பா, தனத மகன் விஜயேந்திராவுடன் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். மாநில விவகாரங்கள் குறித்து இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்பட்டாலும், எடியூரப்பா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தகவல்கள் வெளியானது. ஆயினும் அடுத்த நாள் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசிய எடியூரப்பா, தான் பதவி விலகப்போவதாக வெளியான தகவல்களை திட்டவட்டமாக மறுத்தார் என்பது குறிப்பிட்ட சூழ்நிலையில் ராஜினாமா செய்து விட்டார்..