March 25, 2023

பிரிட்டன் மகாராணி எலிசபெத் உயிரிழந்தார் : தொடங்கியது ஆபரேஷன் லண்டன் பிரிட்ஜ்!

சர்வதேச அளவில் நீண்ட காலம் ராணியாக இருந்தவர் என்று பெருமைக்குரியவர் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நடப்பது மற்றும் நிற்பதற்கு சிரமப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. அண்மையில் ஸ்காட்லாந்து சென்று இருந்த அவர், பிரிட்டன் பிரதமராக இருந்து ராஜினாமா செய்த போரிஸ் ஜான்சனுக்கு நடந்த பிரிவுபசார விழாவில் கலந்து கொண்டிருந்தார். இந்த விழாவில் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டு இருக்கும் லிஸ் டிரஸ்சையும் சந்தித்தார். நேற்று மாலை அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் பக்கிங்ஹாம் அரண்மனை தகவல் வெளியிட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார். அவருக்கு வயது 96. ஸ்காட்லாந்தில் உள்ள இல்லத்தில் அவரது உயிர் பிரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. .ராணியார் அவரது வாழ்க்கை முழுவதும், பிரபலமாக இருந்தார். இங்கிலாந்துக்கு மட்டுமல்ல, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து உட்பட 14 பிரிட்டிஷ் காலனிகளின் ராணியாகவும், அதிகாரத்தை தீர்மானிப்பவராகவும் இருந்தார். இத்துடன், 56 நாடுகளைக் கொண்ட காமன்வெல்த்தின் தலைவராகவும் இருந்தார். இங்கிலாந்து தேவாலயத்தின் ஆளுநராகவும் இருந்தார். 

96 வயதாகும் இரண்டாம் எலிசபெத், ”சூரியன் மறையாத சாம்ராஜ்யம்” என்று புகழாரம் சூட்டப்பட்ட பிரிட்டனில் நீண்ட காலம் அரசுப் பணியில் இருந்த சாதனையை 2015ல் புரிந்தார். தாய்லாந்து அரசர் பூமிபோல் அதுல்யதேஜ், 1927 – 2016 வரை, 70 ஆண்டு, 126 நாட்கள் அரசராக இருந்தார். அந்த சாதனையை தற்போது இரண்டாம் எலிசபெத் முறியடித்து உலகிலேயே மிக நீண்ட காலம் அரசுப் பணியில் இருந்தோர் பட்டியலில், இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். பிரான்சின் பதினான்காம் லுாயிஸ், 1643 – 1715 வரை, 72 ஆண்டு, 110 நாட்கள் அரசராக இருந்து, சாதனைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்துள்ல நிலையில், இது உலகம் முழுவதும் எதிரொலிக்க தொடங்கி விட்டது. இந்த இரண்டாம் எலிசபெத் உயிரிழக்கும் போது அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது அனைத்தும் ஏற்கனவே முன்கூட்டியே திட்டமிடப்பட்டு உள்ளன. இதனை ஆபரேஷன் லண்டன் பிரிட்ஜ் என்று குறிப்பிடுகின்றனர். 1960கள் முதலே இந்தத் திட்டம் தயார் நிலையில் உள்ளது.

அதாவது எலிசபெத் மகாராணி உயிரிழந்துள்ளதால், அங்கு வரும் நாட்களில் துக்கம் அனுசரிக்கத் தொடங்கி விட்டது. பிரிட்டன் மகாராணி உயிரிழந்தது, முதலில் அவரது குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அது அவரது தனிப்பட்ட செயலாளருக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர் பாதுகாப்பான தொலைப்பேசி இணைப்பில் பிரதமரைத் தொடர்பு கொண்டு, “லண்டன் பிரிட்ஜ் இஸ் டவுன்” என்ற வாக்கியத்தைத் தெரிவித்தார். அதன் பின்னர் அமைச்சரவை செயலாளர் மூலம் மற்ற அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுக்கு இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டது.

இதை அடுத்து பிரிட்டன் அரசு ஊடகமான பிபிசி டிவி மற்றும் ரேடியோ மூலம் அவரது மரணம் குறித்து செய்தி பொதுமக்களிடம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அனைத்து பிபிசி ஊடகங்களிலும் பிற நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு, எலிசபெத் மகாராணி இறுதிச்சடங்கு குறித்த நேரலை செய்யும் பணி தொடங்கி விட்டது. பக்கிங்ஹாம் அரண்மனையின் வாயில்களிலும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இன்று சற்று நேரத்தில் இளவரசர் சார்ல்ஸ் மற்றும் பிரிட்டன் பிரதமர் பொதுமக்களிடம் உரையாற்றுவார்கள். அரசு கட்டிடங்களில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். அங்கு அவரது அரசு இறுதிச் சடங்கு செய்யப்படும். மகாராணி இப்போது ஸ்காட்லாந்தில் உள்ள நிலையில், அங்கு அவர் உயிரிழந்தார் ஆப்ரேஷன் யூனிகார்ன் என்ற திட்டம் செயல்படுத்தப்படும்

இரண்டாம் நாள் காலை, பிரிட்டன் கவுன்சிலின் உறுப்பினர்கள் சார்லஸை புதிய அரசராக அறிவிப்பார்கள். செயின்ட் ஜேம்ஸ் அரண்மனை மற்றும் ராயல் எக்ஸ்சேஞ்சில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும். நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ராணி எலிசபெத்திற்கு அஞ்சலி செலுத்துவார்கள். ராணியின் உடல் அரசு ரயில் அல்லது ராயல் ஏர்ஃபோர்ஸ் மூலம் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு எடுத்து வரப்படும்.

மூன்று மற்றும் நான்காம் நாளில் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டுள்ள சார்லஸ் ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து, பெல்பெஸ்ட் பகுதிகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வார். மறுபுறம் லண்டனில் மகாராணி எலிசபெத் இறுதிச் சடங்கிற்கான ஒத்திகைகள் மேற்கொள்ளப்படும். ஐந்தாம் நாளில், பக்கிங்ஹாம் அரண்மனையில் தொடங்கி, நாடாளுமன்ற மாளிகை வரை ஊர்வலம் நடைபெறும்.

அதைத் தொடர்ந்து எம்பிகள் அஞ்சலி செலுத்த ஏதுவாக ராணியின் உடல் வைக்கப்படும். அதைத் தொடர்ந்து 6 முதல் 9ஆம் நாட்கள் வரை மன்னர் சார்லஸ் அடுத்து வெல்ஷ் நாடாளுமன்றத்திற்குச் சென்று கார்டிஃப் லியாண்டாஃப் கதீட்ரல் செல்வார். மறுபுறம் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை அடையும். பக்கிங்ஹாம் அரண்மனையில் பொதுமக்கள் கூடுவார்கள்.

அதைத்தொடர்ந்து 10ஆம் நாளில் இறுதிச்சடங்கு நடைபெறும். எலிசபெத் மகாராணிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாடு முழுவதும் இரு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்படும். இது தவிர எலிசபெத் மகாராணி உயிரிழந்தால் அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படும். மேலும், நாடாளுமன்றம் அப்போது நடந்து கொண்டு இருந்தால் அதுவும் ரத்து செய்யப்படும்.

21 ஏப்ரல் 1926 அன்று லண்டனில் உள்ள மேஃபேரில் பிறந்தவர் எலிசபெத் மகாராணி. பிரிட்டிஷ் வரலாற்றில் சுமார் 70 ஆண்டுகாலம் அரசபதவியில் இருந்தவர். தனது பதவிக்கால வரலாற்றில் 15 பிரதமர்களை பதவியேற்று வைத்துள்ளார்.பிரிட்டனில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் 1952-ம் ஆண்டு மரணம் அடைந்தபோது, நாட்டின் ராணியாக பதவியேற்றவர் அவரது 25 வயது மகள் 2-ம் எலிசபெத். அப்போது பிரதமராக இருந்தவர் வின்ஸ்டன் சர்ச்சில், அதன் பின்னர் வந்த சர் ஆண்டனி ஈடன், போரிஸ் ஜான்சன் தொடங்கி, லிஸ் ட்ரஸ் வரை 15 பிரதமர்களை அவர் நியமித்து அவர்களோடு பணியாற்றி உள்ளார். இப்போது 96 வயதாகும் ராணி எலிசபெத், 3 நாட்களுக்கு முன்பு பிரிட்டனின் புதிய பிரமதராக தேர்வு செய்யப்பட்ட லிஸ் ட்ரஸ்ஸுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். கடந்த 2021-ம் ஆண்டு ராணி எலிசபெத்தின் கணவரும், எடின்பரோ கோமகனுமான பிலிப் காலமானார். கணவர் மறைவையடுத்து அவரது உடல் நலம் குன்றியது.

முன்னதாக பிரிட்டன் ராணி எலிசபெத் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து அவரது மகன்களும், இளவரசர்களான சார்லஸ், எட்வர்ட், ஆண்ட்ரூ, மகள் ஆனி ஆகியோர் அவருடனேயே இருந்தனர். ராணியின் மூத்த மகனான இளவரசர் சார்லஸின் மகன் வில்லியமும் அவருடனேயே இருந்தார். வெளிநாட்டில் இருக்கும் மற்றொரு மகன் ஹாரி, ஹாரியின் மனைவி மேகன் ஆகியோர் லண்டன் விரைந்தனர்.  இங்கிலாந்து ராணியின் மறைவைத் தொடர்ந்து அவரது மகன் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய மன்னராக விரைவில் முடி சூட்டிக் கொள்வார்.  இங்கிலாந்தின் புதிய மன்னராக பதவி ஏற்க இருக்கும் சார்லஸ் முன்னிலையில் தான் இங்கிலாந்து ராணியின் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.

நிலவளம் ரெங்கராஜன்