பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஸ்ட்ரைக்!

பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஸ்ட்ரைக்!

சர்வதேச அளவில் பிரபலமான பிரிட்டிஷ் ஏர்வேஸ் வரலாற்றில்  ஊதியப் பிரச்சனையால், முதல் முறையாக விமானிகள் 48 மணி நேர வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். இதனால், பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான சேவைகள் பாதிக்கப்பட்டு, ஆயிரக் கணக்கான பயணிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

பிரிட்டிஷ் ஏர்வேஸ், உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான சேவைகளை இயக்கும், முன்னணி விமான நிறுவனமாகும். நாள்தோறும் பல்லாயிரக் கணக்கான பயணிகள் பிரிட்டிஷ் ஏர்வேஸ் சேவையை பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில், நிறுவனத்தின் லாபத்திற்கும் விமானிகளின் ஊதியத்திற்கும் இடையே உள்ள விகிதம் மற்றும் ஆண்டு விடுப்பு நாட்கள் குறித்து, விமானிகள் சங்கத்திற்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிர்வாகத்திற்கும் பேச்சுவார்த்தை நடைபெற்று தோல்வியில் முடிவடைந்தது.  இதையடுத்து 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விமானிகள் சங்கம் கடந்த மாதத்தில் நோட்டீஸ் அளித்திருந்தது.

செப்டம்பர் 9,10 மற்றும் 27 ஆகிய 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானிகள் 48 மணி நேர வேலை நிறுத்தத்தை இன்று தொடங்கியுள்ளனர். கிட்டத்தட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, விமான சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக் கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நியாயப்படுத்த முடியாதது என பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் கூறியுள்ளது. விமானிகள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இருப்பதாகவும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனிடையே, பதிவு செய்திருந்த பயணிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கும் விஷயத்தை பிரிட்டிஷ் ஏர்வேஸ் சரிவரக் கையாளவில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதனால் மாற்று பயண ஏற்பாடுகளை செய்வதில் பயணிகள் சிரமங்களை எதிர்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊதியப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு செலவிடும் தொகையை விட, வேலைநிறுத்தத்தால் நிறுவனத்திற்கு அதிக இழப்பு ஏற்படும் என பிரிட்டிஷ் விமானிகள் சங்க பொதுச் செயலாளர் பிரையன் ஸ்டிரட்டன் கூறியுள்ளார்.

ஊதியப் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் கடந்த வாரத்தில் சங்கம் முன்வைத்த திட்டத்தை பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிர்வாகம் ஏற்றிருந்தால், வேலைநிறுத்தப் போராட்டமே நடந்திருக்காது என்றும் அவர் கூறியுள்ளார். இதனிடையே, விமானிகள் தரப்பும் நிறுவன பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவன தரப்பும் சுமூகமாக பேசி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!