January 27, 2022

மணப் பெண் திண்டாட்டம்: அண்டை நாடுகளிலிருந்து இளம்பெண்கள் கடத்தல்!!

இந்தியாவில் வரதட்சணை சட்டப்படி தடைசெய்யப்பட்டிருந்தாலும், மணப்பெண்ணின் வீட்டார் மணமகனுக்கு பணம், நகைகள், மற்ற விலையுயர்ந்த பொருட்களை கொடுப்பது தொடர்ந்து நடை பெற்று வருகிறது. ஆனால், சீனாவை பொறுத்தவரை தலைகீழாக, அதாவது மணமகளுக்கு வரதட்சணை கொடுக்கும் வழக்கம் இருந்து வரும் நிலையில் மணப்பெண் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால், பணம் கொடுத்து வெளிநாடுகளில் இருந்து பெண்களை வாங்கும் நிலைக்கு சீன இளைஞர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதையொட்டி

முரட்டு சட்டம் கொண்ட ‘இரும்புத்திரை தேசம்’ என வர்ணிக்கப்படும் சீனாவில், பெண்களுக்கு எதிரான அரசின் பாலின நடவடிக்கைகள், பாலின விகிதாச்சாரத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் தொகை பெருக்கத்தில் முதலிடத்தில் இருந்த சீனா, அதிகரித்தப்படி போன  மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த, முப்பது ஆண்டுகளுக்கு முன் ‘ஒரு குழந்தைக் கொள்கை’ அமல்படுத்தியது. இக்கொள்கையை மீறும் குடும்பங்களுக்கு அரசு உதவிகள் மறுக்கப் பட்டதால், இதனை பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர் சீனப்பெண்கள்.

அதே நேரம், ஆண் வாரிசு மீதான விருப்பத்தால், பெண் குழந்தைகளைக் கருவிலேயே அழிக்கத் தொடங்கியதன் விளைவு, சீனாவில் பெண்களைவிட, 3.3 கோடி இளைஞர்கள் அதிகமாக உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த இடைவெளி, ஈடுசெய்ய முடியாத மிகப்பெரிய மணப் பெண் தட்டுப்பாட்டை அந்த நாட்டில் ஏற்படுத்தியுள்ளது. அதிலும் திருமணத்தைத் தள்ளிப்போட்டு, பணம் சம்பாதிப்பதிலும் தனியாக வாழ்க்கையை அனுபவிப்பதிலும் சீனப் பெண்கள் ஆர்வம் காட்டுவதால், இப்பிரச்னை மேலும் தீவிரமடைந்தது. இதனால், நாற்பது வயதைத் தொட்டும் மணமாகாத ஆண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. கிராமங்களில் இளம் பெண்களைக் காண்பதே அரிதானது. ஏழை இளைஞர்கள், விவாகரத்து செய்தவர்கள், ஊனமுற்றோர் நிலைமை இன்னும் பரிதாபமாக ஆனது.

இப்படி பெருகிவரும்  மணப்பெண் பற்றாக்குறையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன் படுத்திக் கொள்ளும் கடத்தல் காரர்கள், அருகில் இருக்கும் வியட்நாம் மட்டுமின்றி கம்போடியா, மியான்மர், லாவோஸ் ஆகிய நாடுகளிலிருந்து இளம் பெண்களை கடத்தி சீன இளைஞர்களுக்கு விற்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  மேலும் கடத்தல்காரர்களிடமிருந்து பெண்கள் தப்புவது மிகவும் கடினம். சீன மொழி தெரியாததால், பரிச்சயம் இல்லாத ஊர்களில் விற்கப்படும் வியட்நாமிய பெண்களால் தங்களின் இருப்பிடத் தகவல்களை மீட்பவர்களுக்கு உடனடியாகத் தர இயலாது. காவல் துறையின் உதவியை நாடினால், சீன குடியேற்றச் சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்படுவர்  என்பதுடன் அரசும் இதைக் கண்டு கொள்ளாததால், சட்டவிரோத மணப்பெண் வர்த்தகம் கொடிகட்டிப் பறப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.