January 26, 2022

கல்வான் பள்ளத்தாக்கில் மூவண்ண தேசியக் கொடி ஏற்றிய இந்திய ராணுவம்!

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் தனது தேசிய கொடியுடன் புத்தாண்டு வாழ்த்து கூறிய வீடியோ சர்ச்சையான நிலையில், அதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் கல்வான் பள்ளத்தாக்கில் மூவண்ண தேசியக் கொடி ஏற்றிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020ம் ஆண்டில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் அத்துமீறி நுழைய முயன்றதால் இரு நாட்டு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி, மோதல் நடந்த இடத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவுக்கு இரு தரப்பிலும் படைகள் பின்வாங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கிழக்கு லடாக், சிக்கிம் உள்ளிட்ட அசல் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியின் 10 இடங்களில் புத்தாண்டு தினத்தன்று சீனாவுடன், இந்திய ராணுவம் இனிப்புகளை பரிமாறிக் கொண்டது. ஆனால் சீனாவின் தேசிய ஊடகத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில், ‘கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன வீரர்கள் கூடி, சீன தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்து, தேசிய கீதம் பாடியது போல் வீடியோ வெளியாகியது. எனவே, கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் நடந்த இடத்தை சீனா ஆக்கிரமித்து அங்கு தேசியக் கொடியை ஏற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்தநிலையில், புத்தாண்டு தினத்தில் இந்திய ராணுவம் கல்வான் பள்ளத்தாக்கில் தேசியக் கொடியை ஏற்றிய புகைப்படங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. மத்திய சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ இப்புகைப்படங்களை தனது டுவிட்டரில் பதிவிட்டார். அதில், ‘3 புகைப்படங்களில் இந்திய வீரர்கள் பனி மலைக்கு மத்தியில் மூவண்ண தேசியக் கொடியை உயர்த்தி பிடித்தபடியும், கம்பத்தில் தேசிய கொடியை பறக்கவிட்டபடியும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், சர்ச்சைக்குரிய கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனா தேசியக் கொடியை ஏற்றவில்லை எனவும், அதனுடைய எல்லைக்கு உட்பட்ட பகுதியிலேயே தேசிய கொடி ஏற்றியதாகவும் சீன ஊடகம் தரப்பில் விளக்கம் தரப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.