சென்னை ரசிகர்களைக் கவர்ந்த முகமது அலியுடன் எம் ஜி ஆர்!

சென்னை ரசிகர்களைக் கவர்ந்த முகமது அலியுடன் எம் ஜி ஆர்!

தமிழ்நாட்டின் முதலமைச்சராக மறைந்த எம்.ஜி.ஆர். பொறுப்பேற்றிருந்தபோது, தமிழ்நாடு அமெச்சூர் பாக்சர்கள் சங்கத்துக்காக நிதி திரட்டும் வேடிக்கை குத்துச்சண்டை போட்டி நடத்துவதற்காக முகம்மது அலி சென்னை நகருக்கு வந்திருந்தார். அவருடன் போட்டியில் சண்டையிட முன்னாள் ஹெவிவெயிட் சாம்பியனான ஜிம்மி எல்லிஸ் என்பவரும் உடன் வந்திருந்தார்.

ali

முதலமைச்சர் எம்.ஜி.ஆர். உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும், ரசிகர்களும் முகம்மது அலிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தன்னைக்காண கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களை கண்டு நெகிழ்ச்சியடைந்த முஹம்மது அலி, என்னை காணவும், வரவேற்கவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருப்பதை பார்த்து மிகுந்த பெருமகிழ்ச்சி அடைகிறேன். என்மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பை எனது வாழ்நாள் முழுவதும் பொக்கிஷமாக போற்றிப் பாதுகாப்பேன் என தழுதழுத்த குரலில் குறிப்பிட்டார்.

திறந்தகாரில் மீனம்பாக்கத்தில் இருந்து ஊர்வலமாக அண்ணாசாலையில் உள்ள கன்னிமாரா ஓட்டலுக்கு அவர் வந்தபோது சாலையின் இருபுறங்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.மாலையில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற அந்த விறுவிறுப்பான குத்துச் சண்டை போட்டியின்போது, சென்னையில் பயிற்சிமுறை பாக்சர்களாக இருந்த சிலருடனும் முஹம்மது அலி விளையாட்டாக மோதினார். குறிப்பாக ஆனால் தமிழ்நாட்டின் அப்போதய மாநில குத்து சண்டை சேம்பியன் – திருவள்ளூரை சேர்ந்த Rocky Brass என்பவருடன் மோதினார் முகமது அலி.
எட்டாவது வகுப்பு கூட முடிக்காத Rocky Brass-க்கு அதன் பின் தெற்கு ரயில்வேயில் கலாசி வேலை கிடைத்தது. முகமது அலியுடன் மோதினார் என்கிற ஒரே காரணத்திற்க்காக எக்மோர் ரயில்வே நிலையத்தில் கலாசியாக வேலை பார்த்து பின் பயணிகளுக்கு வழிகாட்டுபவராக உயர்ந்த Rocky Brass – டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகைகு அளித்த பேட்டி ஒன்றில் இதை கூறியுள்ளார்.

கடைசியாக பத்துவயது சிறுவன் மேடை ஏறினான். அவனுக்கு போக்குகாட்டும் விதமாக துள்ளிக்குதித்தபடி மேடையை சுற்றிச்சுற்றிவந்த பின்னர், அவனை தனது முகத்தில் குத்துமாறு கூறிய முஹம்மது அலி, அவனது உயரத்துக்கு தக்கவாறு முழங்காலிட்டு அமர்ந்தார்.

அந்த சிறுவன் விட்ட குத்துகளில் இருந்து தனது முகத்தை லாவகமாக காப்பாற்றிக் கொண்ட முஹம்மது அலி, பின்னர், மூலையில் இருந்த கயிற்றின்மீது சரிந்தவாறு நின்று, தனது வயிற்றில் குத்தும்படி கூறினார். அந்தப் புகைப்படங்கள் எல்லாம் மறுநாள் காலை நாளிதழ்களில் முக்கியச் செய்தியாக இடம்பெற்றிருந்தன.

இதனிடையே இந்த ஷோ பைட் போட்டிகளின் முடிவில், முகமது அலிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எம்.ஜி.ஆர் எங்கள் தமிழகத்திற்கு வந்திருக்கிறீர்கள் உங்களுக்கு என்னவேண்டுமோ கேளுங்கள்…என அலியிடம் கேட்டார். அதற்கு அலி, “சென்னையில் மீன் உணவு  ரொம்ப டேஸ்ட் என்கிறார்களே… அது எங்கு கிடைக்கும்? ” என்று கேஷூவலாக கேட்டார். விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற எம்.ஜி.ஆரிடம் இப்படி  உலக பிரபலம் கேட்ட…அடுத்த நொடி ராமாவரம் தோட்டத்திற்கு போன் பறந்தது.

ராமாவரம் தோட்டத்தில் அசைவ உணவு சமைப்பதில் தேர்ந்தவரான மணி என்பவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஜானகி அம்மையாரின் மேற்பார்வையில் வஞ்சிரம் மீன் வறுவல், வெள்ளை சாதம்,  மீன் குழம்பு, வேகவைத்த முட்டை குழம்பு, இறால் ஃப்ரை, சிக்கன் வறுவல், உடன் பாயாசம் என விதவிதமான உணவுவகைகள் அன்று முகமது அலி தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தது.

உணவு அருந்தியபின் உணவு எப்படி இருந்தது என எம்.ஜி.ஆர் கேட்டாராம். அதற்கு முகமது அலி,  ‘எனக்கு உலகில் எங்கு சென்றாலும் விதவிதமான உணவைத்தர ஆயிரம் பேர் இருக்கிறார்கள். ஆனால் அது என்னைக்கவர்வதற்கானதாக இருக்கும். நீங்கள் அளித்த உணவில் சுவையை விட கூடுதலாக இருந்தது உங்கள் அன்புதான்’ என்று நெகிழ்வாக கூற, எம்.ஜி.ஆர் நெகிழ்ந்துநின்றாராம். முகமது  அலியின் சென்னை விசிட் இப்படிதான் நெகிழ்வாக இருந்தது.

தற்போதுஉலகம் முழுவதும் வாழும் குத்துச்சண்டை ரசிகர்களுக்கு முகம்மது அலியின் மரணம் ஈடுசெய்ய முடியாத பேரிழப்புதான். குறிப்பாக, அந்த மாவீரன் நடமாடிய சென்னையில் வாழும் பாக்சிங் ரசிகர்களுக்கு அந்த இழப்பு இருமடங்காக தோன்றலாம். அவரது ஆன்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்திப்போம்!

error: Content is protected !!